ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/தொன்மப் படைப்பு, குலைப்பு, மீட்டுருவாக்கம்

விக்கிமூலம் இலிருந்து
1


தொன்மப் படைப்பு, குலைப்பு, மீட்டுருவாக்கம்


அண்ணல் அயோத்திதாசர் பல துறைகளில் தமிழ் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும் அடையாளம் காணப்பெற வேண்டியவர். தொட்ட துறையிலெல்லாம் தம் முத்திரையை ஆழமாகப் பதித்தாரென்றும் அவர் தொடாத பெரிய துறை ஏதுமில்லை என்றும் கூறலாம். அரசியல், சமுதாயம், சமயம், கல்வி, மருத்துவம், படைப்பிலக்கியம், பத்திரிகை போன்றவற்றிலெல்லாம் அவருடைய அறிவுப் பங்களிப்பு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நாட்டில் சமயத்தின் பேரால், சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பெளத்தமே தக்க அடைக்கலம் என்பதை அம்பேத்கருக்கு உணர்த்தியதும், பகுத்தறிவு, தன்மானம், நவீனத்துவம் ஆகிய கொள்கைப் போக்குகளின் இன்றியமையாமையைப் பெரியார் ஈ.வெ.ரா. அறிந்து கொள்ளத் துணை செய்ததும், பூர்வ குடிகளின் நலன் எங்கெங்குக் கெடினும் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் எனும் எண்ணத்தையும் உறுதியையும் தமக்குப் பின் வந்த தனிமனிதர்களுக்கும், இயக்கங்களுக்கும், கட்சிகளுக்கும் அளித்ததும், உரிமை இழந்தவரும் மறுக்கப்பட்டவரும் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால் எளியவர்க்குப் பள்ளிகளைத் திறந்து விடல், பகலுணவு அளித்தல், கட்டணமின்றிக் கல்வி தரல் ஆகியவை உடனடியாகச் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்பதைப் பின்னால் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுக்கும் தன் செயல்கள் மூலம் வழிகாட்டியதும், பழந்தமிழ் இலக்கியங்களில் இடைச் செருகல்கள் மூலமாகவும் உரைகள் மூலமாகவும் செய்யப்பட்டிருந்த மோசடிகளைப் பின் வந்த தமிழறிஞர்கள் கண்டு கொள்ளக் காட்டியதும், அரசியல், பொருளாதார, சமயச் சிக்கல்கள் பற்றிய கட்டுரைகள் எத்தகைய தமிழ் நடையில் அமைய வேண்டும் என்பதற்கும், அரசியல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு விளைவிக்கப் போகும் இடையூறுகளை முன்னறிந்து எவ்வாறு அவற்றைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கும் ஆங்கில, தமிழ்க் கட்டுரைகள் எழுதி நீதிக் கட்சியினருக்கு முன் மாதிரியாக இருந்தவரும் அவரே. பின்னை நவீனத்துவத்தார் “Truth is not absolute but relative” (உண்மை முழுமையானதன்று, ஒரு சார்புடையது) என்பதால் வரலாறு மீண்டும் மீண்டும் மாற்றியெழுதப்படலாம் என்பர்.

திரு.வி.க., அயோத்திதாசரை “நூல் பல கற்ற சால்பினன்” என்றும், “வல்லவர் போற்றும் கல்விமான்” என்றும், “இல்லறம் என்னும் நல்லறம் ஏற்று விருந்தினை ஓம்பி இருந்தவன்” என்றும், “செந்தமிழ் பூண்ட அந்தணன்” என்றும், “பொறுமைக்கொரு உறைவிடம்” என்றும் போற்றும் உரைகள் பொருள் பொதிந்தவை. தம் காலத்து மேட்டுக்குடி அறிஞர்களுக்கு இணையான கல்வியறிவைப் பெறுவதற்கு அவர் அரும்பாடுபட்டிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை அவர் அறியாதிருந்தால் அவர்களால் எள்ளி நகையாடப்பட்டு எளிதில் புறக்கணிக்கப்பட்டிருப்பார். அவர் காலத்து அறிஞர் ஒருவர் காட்டியிருப்பது போல், அயோத்திதாசர்,

ஆகமம் புராணம் இதிகாசம் மறை கோசங்கள்
அத்வைதம் வசிட்டத்வைதம்
சமண முனிவர்கள் பஞ்ச காவியம் கலை ஞானம்
ஆயுர்வேதம் தத்துவம்
யோகநிலை சாத்திரம் சித்தர் நூல் பக்தி நெறி
யுகமொடு பலது மாய்ந்து (அலாய்சியஸ் | xxviii)

தம்மைப் பண்டிதர் என்னும் பெயருக்குத் தகுதிப்படுத்திக் கொண்டது அவர் செய்த முதல் வேலை. பாலியிலுள்ள திரிபிடகம் முதலானவற்றையும் வடமொழியில் உள்ள வேத உபநிதடங்களையும் தமிழில் அவர் காலத்து ஒலைச் சுவடிகளில் கிடைத்த தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நல்லாப்பிள்ளை பாரதம், சிவவாக்கியம், தேவாரம், பெருந்திரட்டு, சிறுதிரட்டு, பெருங் குறவஞ்சி, சிறு குறவஞ்சி, ஏரெழுபது போன்ற இலக்கியங்களையும் திருக்குறள், நாலடி, திரிகடுகம், அறநெறிச் சாரம், நல்வழி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதி வெண்பா, மூதுரை போன்ற அறநூல்களையும் பட்டினத்தார், பத்திரகிரியார், தாயுமானவர், மச்சமுனி, இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், கடுவெளி சித்தர் போன்ற துறவியரின் பாடல்களையும் ஞானத்திரட்டு, ஞான போதம், ஞானவாசிட்டம், பதஞ்சலியார் ஞானம், சொரூப சாரம், தருக்கக் கெளமுகி, சிவயோக சாரம் போன்ற சமய நூல்களையும் அரிச்சந்திர புராணம், வாதவூர் புராணம் போன்ற புராணங்களையும் அவர் பயின்றிருந்தார். அவர் கற்றிருந்த நூல்களின் பட்டியல் மலைப்பூட்டுவது. இருக்கு வேதத்திலிருந்தும் பிரஹதாரண்யக உபநிஷதத்திலிருந்தும் பதஞ்சலியார் ஞானத்திலிருந்தும், அகத்தியர் பரிபாஷையிலிருந்தும் மேரு மந்திர புராணத்திலிருந்தும் அறப்பளீச்சுர சதகத்திலிருந்தும் எட்வின் ஆர்னால்டு எழுதிய ‘ஆசியாவின் ஒளி’ (Light of Asia)யிலிருந்தும் அவரால் வேண்டிய இடத்தெல்லாம் மேற்கோள்கள் தர முடிகிறது.

அயோத்திதாசர் வகுத்துக் கொண்ட மேல் வருணத்தாருக்கெதிரான போராட்ட வியூகத்திற்கு அவர் பெற்ற அளவற்ற கல்வி தேவைப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் தனிமனிதராக நின்று அவர் நடத்திய போரட்டம் அது. பலமுனைகளிலிருந்து பலரின் தாக்குதலுக்கு ஆளான ஆதி திராவிடர்களுக்காக அவர் தனியராகவே போர்க்கொடி உயர்த்தினார்.அவர்களின் பகைவர்கள் யார் என்பதிலும் அவர்களுக்கெதிரான போர் எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டுமென்பதிலும் அவர் முடிவுகள் தெளிவானவை.

நம்மை நெடு நாளாக ஏமாற்றி வருகிற பிராமணக் கொள்கை மிகத் தந்திரமானது. அதன் லக்ஷணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட இந்தியா என்னும் பெரிய மரமாகும். அம்மரத்திற்குக் கடவுள், மதம், வேதம், ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளை நடுவில் இந்து என்னும் கூடு கட்டியுள்ளது. அக்கூட்டில் மும்மூர்த்தி மதம் என்னும் கல்முட்டை இட்டு, அதைப் பார்ப்பார் என்னும் கழுகு அடை காத்துள்ளது. தனது கல்முட்டையைப் பொன் முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற் கண்டும், காதாற் கேட்டும், மனத்தில் உணர்ந்தும் கவலையற்றிருக்கிறோம். ஆராய்ச்சி என்னும் கல்லெறிந்து கழுகைத் துரத்தாமலும் சுயசமதர்மம் என்னும் வாள் கொண்டு மரத்தை வெட்டிக் கூட்டை வீழ்த்தாமலும் பவுத்தம் என்னும்

சஞ்சீவியை அக்கல்முட்டை மேல் பிரயோகித்து முட்டையை உடைத்து உண்மை அறிதற்கன்றி, மவுனம் சாதித்துச் சாகின்றோம். இவ்வித ஞாய விரிவை எடுத்துரைக்கும் பவுத்தர்களை நிந்திப்பதல்லாமல் சிந்திப்பதில்லை. பிராமணர் அல்லாதவர்களால் எழுதப்பட்டுள்ள பிராமணத்துவத்தைத்தான் “யதார்த்த பிராமண வேதாந்த” விவரமென்று நாம் சொல்கின்றோம். பிராமண மதத்தார்களே எழுதி வைத்துள்ள பிராமணத்துவத்தை, “வேஷ பிராமண வேதாந்த” விவரமென்று இழிவுபடுத்துகிறோம். (பண்டிதர் | 82)

வேறோரிடத்தில் “பறையர் அவர் பார்ப்பார் இவர் என்ற பாகுபாட்டை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற புத்த தர்மமான சுயமரியாதையை எல்லாரும் மடை திறந்து இன்புற்று வாழ எல்லார்க்கும் சொல்வது நல்லார் கருத்தாம்” (பண்டிதர் | 134) என்று தம் நோக்கை மறைமுகமாகச் சுட்டுவார்.

தாம் மேற்கொண்ட வாழ்நாள் போரில் அவர் எந்நாளும் எங்கும் வன்முறையைப் பரிந்துரைக்கவில்லை. உட்பகைவரானாலும் புறப் பகைவரானாலும் உடல் அளவில் ஊறு செய்ய வேண்டும் என்பது அவருக்கு ஏற்புடையதன்று. அறிவு நிலையில் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் அறிவு நிலையில் எதிர்வினை செய்ய வேண்டும் என்பதும் அவர் முடிவு. அவர்கள் செய்து வரும் கொடுமைகளை “இத்தேசத்துடன் நூதனமாகக் குடியேறியுள்ளப் பராய சாதியோர்களில் பறையர் பறையர் என்று அழைக்கும் படியானவர்களோ பெரும்பாலும் பயிரிடும் வேளாளத் தொழிலாளருமாய் இருப்பார்களன்றி வேறு மிலேச்சத் தொழில் கிடையாது. இத்தகைய சுத்த தேகிகளைக் கிராமங்களில் சுத்தசலம் மொண்டு குடிக்க விடாமலும் அம்பட்டர்களைச் சவரம் செய்ய விடாமலும் வண்ணார்களை வஸ்திரம் எடுக்க விடாமலும் தடுத்து இவர்கள் சுகத்தைக் கெடுப்பதுமல்லாமல் இவர்கள் உத்தியோகத்திற்குச் செல்லுமிடங்களிலும் சத்துருக்களாயிருந்து கெடுத்து வருவதையும் (அலாய்சியஸ் | 4, 6) உணர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பல கட்டுரைகளிலும் எடுத்துரைப்பார். ஆனால் பகை கொண்டவர்களைப் பகையால் வெல்லலாகாது, சாந்தத்தால் வெல்லலாமென்றும், பொறாமை கொண்டவர்களைப் பொறாமையால் வெல்லலாகாது அன்பால் வெல்லலாமென்றும், புத்தபிரான் போதித்துள்ளாரென்று அவ்வப்பொழுது அவர் நினைவுபடுத்தக் காணலாம். தென்னிந்தியாவில் பறையர் என்று தாழ்த்தப்பட்ட பழங்குடிகள் ஒரு காலத்தில் உயர்வர் என்பது திண்ணம் என்ற நம்பிக்கை கொண்டிருந்த அயோத்திதாசர் அவ்வாறு உயர்த்தப்படுங்கால் தங்களைக் காலமெல்லாம் தாழ்த்தி நிலை குலையச் செய்தவர்களை அவர்கள் தாழ்த்தித் துன்பம் செய்யார் என்று உறுதிமொழி கூறுகின்றார். ஆயினும் அடாத செயல் செய்தோர் அவர்கள் செய்த வினையின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதைப் புத்த தன்மக் கொள்கையடிப்படையில் விளக்குவது அவர் வழக்கம்.

உலக வாழ்க்கையோ தேருருளை ஒத்தது. தேருருளை கீழது மேலதாய் வருவது போல் தாழ்ந்தவன் உயர்ந்தவனாகவும் ஏழை கனவானாகவும் உயரும்படியான காலம் உண்டாகும் (அலாய்சியஸ் | 199)

பகைவர்கள் அவர்களது தீவினை அவர்களைச் சுட்டுப் பாழாக்குவதற்கு முன் நல்வினையைப் பெருக்கி சகல சாதியோரையும் சகோதர ஒற்றுமையில் நெருக்கி ஆதரித்தால் சுதேசக் கல்வியும் சுதேசக் கைத்தொழிலும் சுதேசச் செல்வமும் பெருகிச் சுதேசச் சிறப்புண்டாகும்போது சுயராச்சியம் தானே நிலைக்கும் என்பது அவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை. அவர்களது நிலை கொடியது, பொருளற்றது, அநீதியானது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

“சாதி பேதம் என்னும் அரண் கட்டி சமய பேதமென்னும் அகழி தோண்டி ஒற்றுமை அற்ற ஒன்பது கோடி படையைக் கொண்டவன் சாதி பேதமற்ற அரண், சமய பேதமற்ற அகழி, ஒற்றுமை கொண்ட படை ஒரு நூறுடையவனை ஜெயிக்க மாட்டான் . . .” (அலாய்சியஸ் | 147)

படைக்கலமின்றிப் பகைவரை அழிக்காது நிகழ்த்தப்படும் போரில் வெற்றி பெற்ற பின்னும் பழிக்குப் பழி வாங்குதலுக்கு இடமில்லை. இந்த அடிப்படையிலேயே ஆங்கிலேய அதிகாரிகளுக்கெதிராகச் சுதேசிகளால் வன்முறைச் செயல்கள் தூண்டிவிடப் பட்டபோதும் இந்திய இளைஞர்களால் உயர் பதவியிலிருந்த ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டபோதும் அவர் தம் கண்டனத்தைத் தெரிவிக்கத் தயங்கவில்லை.

சுதேசிகள், சுதேசிகள் என்று கூறிக்கொண்டு அன்னார் சுயநலத்திற்காகப் போராடுவது கண்டு உள்ளம் நொந்து அயோத்திதாசர்,

தன் சுகத்தை நாடாது பிறர் சுகத்தை நாடுவது உத்தமம்,
தன் சுகத்தையும் பிறர் சுகத்தையும் நாடுவது மத்திமம்,
தன் சுகத்தையே, நாடிப் பிறர் சுகத்தைக் கெடுப்பது அதமம்;

என்று அவர்களுடைய மொழியிலேயே அறிவுரை தருவார். அவரை வைத்துக் கொண்டு அவர் முன்னிலையிலேயே தாழ்த்தப்பட்டோர் இழிவாகப் பேசப்பட்டபோதும், “கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே” என்று அவர் மக்களைத் தூண்டவில்லை; அவர்களுக்கு எதிராகக் கொடுஞ்சொற்களையும் சொல்லவில்லை.

சென்னை மகாசபையாரின் கூட்டம் ஒன்றில் அவைத் தலைவரிடம் அயோத்திதாசர் “ஐயா, உலகத்திலுள்ள சகல சாதியோருக்கும் தெய்வம் பொதுவென்றும்,கோவில் பொதுவென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கனமிருக்க இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தோர்களை விஷ்ணுவின் கோவில்களுக்குள்ளும் சைவ மதத்தோரைச் சிவன் கோவில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது. அப்படிச் சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடைய மாட்டார்களா, மதங்களும் பிரபலமடையாதா” என்று பணிவுடன் விண்ணப்பித்தபோது “எல்லோரும் ஏகமாய் நின்று அப்படியே கோவிலுக்குள் சேர்க்கப்படாதென்று கூச்சலிடுங்கால் தஞ்சாவூர்ப் பிரதிநிதி மஅஅஸ்ரீ. சிவராம சாஸ்திரியவர்கள் எழுந்து உங்கள் குலத்தோருக்கு மதுரைவீரசாமி, காட்டேரி சாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும் விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோருக்கு உரியதல்ல என்று ஆட்சேபித்தார்.” அயோத்திதாசர் அச்சொற்களைப் பொறுமையோடு கேட்டிருந்து, சினமும் அச்சமும் இன்றி, “ஐயா, அங்கனமிருக்குமாயின், உங்கள் சுவாமிகள் எமக்கு வேண்டாம். இக்குலத்துச் சிறுவர்களுக்குக் கிராமங்கள்தோறும் கல்விச் சாலைகள் வைத்து நான்காவது வகுப்பு வரையில் இலவசமான கல்வி கற்பிப்பதற்கும் இக்குலத்துக் கிராமவாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்று கருணை தங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவி கூறு (ரெக்கமண்டு) பத்திரமேனும் கொடுக்கலாகாதோ என்று வேண்டினார் (அலாய்சியஸ் | 80-81).

தமிழ்ப் பழங்குடிகள் புத்த தர்மத்தைக் கடைப்பிடிக்க அதற்கு எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நாளும் அறவுரை கூறிய அயோத்திதாசர் அவர்கள் பகைவர்களுக்கெதிராக எது நேரினும் வன்முறையில் ஈடுபடக் கூடாதென்றும் கடுமையாகப் பேசக் கூடாதென்றும் தீங்கு நினைக்கக்கூடாதென்றும் பகைவர்களை அன்பினாலும் பொறுமையாலும் வெல்ல வேண்டுமென்றும் எடுத்துரைத்து அவர்கள் செய்துள்ள கேடுகளையும் மோசடிகளையும் முறையாக வெளிப்படுத்த அவர்கள் வெற்றிக்குக் காரணமான அவர்கள் எழுதி வைத்துக் கொண்டுள்ள வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பழங்கதைகள், பொய்வரலாறுகள் ஆகியவற்றைக் கட்டுடைப்புச் செய்வதைத் தமது முதல் பணியாக மேற்கொண்டார். தமிழ்ச் சமுதாயததின் மீது அவர்கள் பெற்றுள்ள ஆதிக்கத்திற்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள வடமொழிச் சொல்லாடல் காரணமென்று கருதிச் சொல்லாடல் தனி மனிதருக்கும் ஒரு கூட்டத்திற்கும் பேராற்றல் அளிக்கவல்லது (Discourse is power) என்பதை உணர்ந்து அதையே தமது ஆயுதமாகப் பயன்படுத்தினார். பகைவர்களின் தொன்மங்களைக் கட்டுக்குலையச் செய்து காட்டுவதோடு அவற்றில் சிலவற்றை மீட்டுருவாக்குதலையும் சில புதிய தொன்மங்களைப் படைப்பதையும் அவர்களை முறியடிக்கும் தலைசிறந்த வழியென்று அதனைப் பின்பற்றினார். அவர்கள் இந்திய நாடு, இந்துச் சமயம், வடமொழி, தென் மொழி, ஆரிய திராவிட இனங்கள் ஆகியவை பற்றி எழுதி வைத்துள்ள வரலாறு முற்றும் பொய்யானதென்றும் தங்களுக்குள் மறைவாக வைத்துக் கொண்டு மகிமை பேசி வரும் வேத உபநிடதங்கள் உண்மையான வேத உபநிடதங்கள் ஆகாவென்றும் கிருஷ்ணன் சொல்லியதாகக் காட்டிப் புகழ்ந்து வரும் கீதை உண்மையான கீதை அன்றென்றும் அவர்களுடைய இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மேலான அறம் வளர்ப்பவை அல்லவென்றும் இவைகளுக்கு மாற்றுகள் புத்த சமயத்தில் காணக் கிடைக்குமென்றும் வற்புறுத்தினார்.

வரலாறு மட்டுமன்று, தொன்மங்களும் மீண்டும் எழுதப்பட வேண்டியவை. எழுதப்படக்கூடியவை என்று உணர்ந்தார். இதிகாசங்களும் புராணங்களும் அயோத்திதாசரின் கட்டுடைப்புக்கு எளிதில் இடந்தருகின்றன.

இராமாயணத்தைப் படிப்பதும் சுகம், கேட்பதும் சுகம் என்பதாயின் அனுபவத்திற்குப் பொருந்துமோ, ஒருக்காலம் பொருந்தாவாம். எங்ஙனம் என்பரேல், இராமனது மனைவியை இராணவன் எடுத்துப் போனதால் அந்த யுத்த கதை நேர்ந்ததென்பது கருத்து. அதனுள் ஒருவன் தாரத்தை எடுத்துப் போனதால் அவ்வூரையும் அவ்வூரிலுள்ள மக்களையும் நாசப்படுத்திவிட்டால் அவனையும் அவனை அடுத்தோர்களையும் துன்பப்படுத்த முயன்று தானும் கேடு அடைவானா, அடைய மாட்டானாவென்பதைச் சீர் தூக்கி ஆலோசிப்பானாயின் அக்கதையைப் படிக்கும் சுகமும் கேட்கும் சுகமும் அன்றே விளங்கும்.


பாரதக் கதையைப் படிப்பதனாலும் சுகமுண்டு, கேட்பதனாலும் சுகமுண்டு என்பாராயின் அதுவும் அனுபவத்திற்குப் பொருந்தாது. எங்ஙனமெனில் அக்கதா சுருக்கம் அண்ணன் தம்பிகள் பாக வழக்கு. அதையே மேலும் மேலும் கவனத்திற்கு வளர்த்து, தங்கள் சகோதரர்களையும், குருக்களையும், பந்துக்களையும் கொன்றதும் போதாது, மற்றைய தேச அரசர்களையும் படைகளையும் நாசப்படுத்தி விட்டார்களென்பதே. அத்தகைய கதையை

நாளெல்லாம் கேட்பவன் தனது சகோதரருக்குச் சேர வேண்டிய பாகத்தை அன்புடன் கொடுப்பானா அல்லது விரட்டியடிப்பானா. புராணங்களைப் படிப்பதாலும் கேட்பதாலும் சுகம் உண்டு என்பாராயின், அதுவும் அனுபவத்திற்குப் பொருந்தாது, எங்ஙனமென்னில் எங்கள் சாமி அன்னியன் தாரத்தை இச்சித்து அவளால் குழந்தையாக சபிக்கப் பெற்றார் என்றபோது சாமியே அன்னியன் தாரத்தை இச்சித்துள்ளார் என்னும் கதையைக் கேட்பவன் அவ்விச்சிப்பில் நிலைப்பானா அதனால் உண்டாய கேட்டில் நிலைப்பானா (அலாய்சியஸ் | 430).

நன்மையை விட தீமையே மாந்தர் உள்ளத்தை எளிதில் பற்றி ஈர்க்கும் என்பதைச் சுட்டுகிறார். இவ்வாறே பாமர மக்களை வலை வீசிப் பிடிக்கப் பயன்படுத்தப்பெற்ற எல்லாப் புராணங்களும் உரிய இடங்களில் விமரிசிக்கப் பெறுகின்றன.

பெரிய புராணம் சிறிய புராணங்களைச் சிறுவர்களுக்குக் கற்பிப்பதாயின் சீவகாருண்யம் நிலைத்துக் கொலை செய்யாமை, களவு செய்யாமை, கள்ளருந்தாமை, பொய் சொல்லாமை, பிறர்தாரம் இச்சியாமை என சுத்ததேகிகளாக உலாவும் சன்மார்க்கங்களையும் பெளத்தர்களைச் சீவகாருண்யமற்ற பஞ்சமாபாதகர்களும் துன்மார்க்கர்களும் கூடிக்கழுவிலும் கற்காணங்களிலும் வசியிலும் குத்தி வைத்துக் கொன்ற கதையை அவற்றுள் விசாலமாக வரைந்திருக்கின்றது . . . மற்றும் அக்காதையுள் சாமியே மனிதனாக வந்து ஏது திக்குமற்ற கைம்பெண் கிழவியிடம் சென்று உடைந்த ஏரிக்கரைக்கு மண்ணிடுவதாக ஒப்பந்தம் பேசி அவள் வயிறு பிழைக்க விற்றுண்ணும் புட்டுகளை எல்லாம் தின்றுவிட்டு ஒப்பந்தம் பேசியபடி செய்யாமல் பிரம்படி பட்டதாக வரைந்திருக்கின்றது (அலாய்சியஸ் | 459).

இரணியன் - பிரகலாதன் கதை, பிரகலாதன் என்னும் பிள்ளையைத் தன்வசப்படுத்திக் கொண்டு நாராயண நமோவென்று சொல்லும் தகப்பனாகிய இரணியனை வஞ்சித்துக் கொல்லும் கதையாகப் பண்டிதரால் வாசிக்கப் பெறுகிறது. பின்னால் அயோத்திதாசர் கூறும் கதைச்சுருக்கம் பாரதிதாசனால் “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” எனும் நாடகமாக உருப்பெற்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக, படித்தவர்களிடமும் பாமரர்களிடமும் புராணமாகவும் நாடகமாகவும் பெரிதும் பரப்பப்பட்ட அரிச்சந்திரன் கதை “அரிச்சந்திரன் பொய்கள்: அரிச்சந்திரன் மெய்யன் மெய்யன் என்னும் காதையும் பொய்யான விவரமும்” என்ற தலைப்பில் நீண்ட மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பெறுகிறது. அக்கதையைப் பெளத்தர்களைப் பறையர்களென்று தாழ்த்தி வைத்திருந்த கூட்டத்தார் “பறையனென்னும் பெயரைப் பரப்புவதற்காகக் காசியம்பதியில் வீரவாகு என்னும் ஒரு தோட்டிப் பறையன் சுடலையில் பிணங்களைச் சுடுவதும் குழி வெட்டியானாகவும், வரும் பிணங்களின் வாய்க்கரிசியும் முழந்துண்டும் வாங்கிக் கொண்டிருந்தானென்றும் கதை எழுதிப் பேதையர்களை ஏமாற்றி வருகின்றார்கள்” (பண்டிதர் | 134) என்பதற்கான ஆதாரங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது. விசுவாமித்திரனும் அரிச்சந்திரனும் சொல்லும் பொய்களை எடுத்துக் காட்டி “இந்துச் சகோதரர்களே! பொய் சொன்னானை மெய் சொன்னான் என்பீரேல் நீங்கள் மெய் சொல்ல வெட்கிப் போய் சொன்னதாகுமே! ஆதலால் அரிச்சந்திரன் பொய் சொன்னான் என்று நீங்கள் மெய் சொல்லி வெளி வாருங்கள். இதுவே நம் தேச தெய்வ முறைமை” (பண்டிதர் | 1142) என்று வேண்டுகோள் விடுக்கிறது. ஊன்றிப் பார்த்தால் சுயமரியாதையற்ற இந்துக்களையும் பறையர்களையும் வெள்ளென வெளுத்திருக்கும் அரிச்சந்திரன் கதையென்பது தெளிவாகும் என்று விளக்கி இக்கட்டுரை “புத்தபிரானுக்குச் சங்க அறரென்றும் சங்க மித்திரரென்றும் சங்க தருமரென்றும் அனந்தம் பெயர்கள் உண்டு. இதில் சங்க அறரென்னும் புத்தரைச் சிந்திக்கும் சங்கத்தோர்களைச் சங்கர சாதிகளென்று வகுத்து இவர்களே சுடலை காப்பவர்களென்று மனு நூலில் எழுதி வைத்திருக்கிறார்கள்; இன்னும் சம்மா, சம் புத்தா என்னும் பெயரைச் சாம்பார், வீர சாம்பவர், சாம்பவனார், சுடலைகாக்கும் வீரசாம்பவத் தோட்டி என்று பலவாறு இழிவு செய்து வருகின்றார்கள்” (பண்டிதர் | 152) என்று ஓரினத்தாரை இழிவு செய்யும் நோக்குடன் தொன்மம் எவ்வாறு கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

இன்னொரு கட்டுரையில் கபிலர் அகவலும் இத்தகைய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப் பெறுகிறது. கபிலர் அகவல் என்னும் கட்டுக் கதையானது பெளத்தராகிய பறையர்களை இழிவுபடுத்தவும் பிறப்பிலேயே சாதிகள் உண்டு, பூர்வத்திலேயே வேஷ பிராமணர்கள் உண்டு என்று வலியுறுத்தவும் எழுதப் பெற்றது. பாலி மொழியில் உபநயனமென்றும் வடமொழியில் ஞானநேத்திரமென்றும் தமிழ் மொழியில் ஞானக்கண், உள்விழியென்றும் கூறப்பெறுவது புத்த தர்மப்படி ஒருவனுக்கு முப்பதாவது வயதில் அளிக்கப் பெறுவதாகும். கபிலருக்கு ஏழு வயதில் உள்விழி திறக்கச் செய்தார்கள் என்பது கபிலர் அகவலில் கூறப்பட்டுள்ள முதல் பொய். அவர் புத்த தன்மத்தைச் சார்ந்தவராதலால் உலகத்தை ஒருவன் படைத்தான் என்பதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். உலகத்தை நான்முகன் தோற்றுவித்தான் என்று அவர் கூற்றாகத் தந்திருப்பது இரண்டாவது பொய். தான் குறித்துள்ள நாடுகளில் பார்ப்பார்கள் இல்லையென்று சொல்லியிருப்பது மூன்றாவது பொய். புத்த சங்கத்தில் சேர்ந்து ஒழுக்கத்தில் நிற்கப் பார்க்கும் மக்கள் பார்ப்பாரென்று அழைக்கப் பெற்றார். அவர்கள் பல நாடுகளிலும் பரவியிருந்தனர்.

ஒரு காட்டில் விழுந்து கிடந்த குழந்தையை இன்னசாதி என்றறியாது பிராமணர் எடுத்து வளர்த்ததாகவும் காரணமின்றிக் கபிலர் என்று பெயர் வைத்ததாகவும் சொல்லியிருப்பது நான்காவது பொய். பிறப்பில் சாதியில்லையென்று கருதிய கபிலர் பறையர் வீட்டில் ஒளவை வளர்ந்தாள் என்றும் அந்தணர் வீட்டில் கபிலர் வளர்ந்தாரென்றும் சொன்னாரென்பது ஐந்தாவது பொய். புத்தபிரான் காலத்திற்கு முன்பே வேஷ பிராமணர்களும் அவர்களுடைய வேதங்களும் வேதாந்தங்களும் சாதி பேதங்களும் இருந்தனவென்று கூறித் தங்களைச் சிறப்பித்துக் கொள்ள இத்தகைய பொய் மலிந்த கதை எழுதியுள்ளார்கள் என்பது அயோத்திதாசரின் கண்டனம் (அலாய்சியஸ் | 1150-152).

அயோத்திதாசர் காலத்தும் அவர் காலத்துக்குச் சற்றுப் பின்னும் மேலை நாடுகளில் பல பேரறிஞர்கள் பெளத்த சமயத்தின் சிறப்புணர்ந்து அதன் பெருமையைப் பரக்கப் பேசினர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் பால் எல்மர் மோர் (Paul Elmer More), இர்விங் பாபிட் (Irwing Babbit) போன்றோரின் தாக்கத்தினால் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியச் சர்வாதிகாரி (Literary Dictator) என்று கருதப்பெறும் டி.எஸ்.எலியட் பெளத்த சமயத்தில் நாட்டம் கொண்டு அதனைத் தழுவவும் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் ஆனால் பின்னால் ஆங்கிலோ கத்தோலிக்கர் (Anglo-Catholic) என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டார் என்றும் அறிகிறோம். இந்தியாவிலும் தாகூர், குமாரன் ஆசான் போன்றோர் தமது கவிதைகளில் பெளத்தத்தைப் பாராட்டினர். ஆனால் உதட்டளவில் அல்லாது உள்ளத்து அளவில் அதனை முற்றுமாக ஏற்றுக் கொண்டு அதனோடு தம்மை இரண்டற இணைத்துக் கொண்டவர் அக்காலத்தில் அயோத்திதாசரே. அது தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமய சஞ்சீவியாக உதவும் என்பது அவர் முழு நம்பிக்கையாயிற்று.

இருக்கு, யஜுர், சாம, அதர்வண வேதங்களென்று இப்பொழுது சுட்டப்படுபவை உண்மையான ஆதி வேதங்கள் அல்லவென்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் மறை என்றும் முதல் நூல் என்றும் குறிப்பவை வேறென்றும் அயோத்திதாசருக்குப் பின் வந்த தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவரே அவை புத்தரது ஆதிவேதமென்றும் இதற்குத் தமிழிலுள்ள பஞ்ச காவியங்களும், பாலி மொழியிலுள்ள பிடகங்களும் திராவிட பெளத்தருடன் காலங் காலமாக வழங்கி வந்த சுருதியும் ஆதாரங்களென்றும் விளக்கினார். பாவம் செய்யாதிருங்கள், நன்மையைக் கடைப்பிடியுங்கள், இதயத்தைச் சுத்தி செய்யுங்கள், இவற்றின் பயன் வீடு பேறு என்பவையே நான்கு பேத வாக்கியங்கள். முதலில் தோன்றிய மூன்று பேத வாக்கியங்களோடு வீடு பேற்றையும் ஒரு பேத வாக்கியமாக்கி நான்கு பேத வாக்கியங்களென வழங்கியதுமல்லாமல் அதனதன் செயலுக்குத் தக்கவாறு இருக்கு, யசுர், தைத்திரியம், அதர்வணம் என்னும் நான்கு பெயர்களையும் அளித்து அவைகளுக்குச் சிறப்பு நிலையாம் ஆகமம், ஆரிடம், பிடகம், தந்திரம், பனுவல், சமயம் சூத்திரமென்னும் பெயர்களையும் கொடுத்தார்கள்.

முதல் பேத வாக்கியம் கன்ம பாகை. இதன் காரணம் பாவம் செய்யாதிருத்தல்; காரியம் மெய்யற வுணர்ச்சி. இதன் பெயர் அறத்துப்பால், பிடகம், இருக்கென்றும் கூறப்படும்.

இரண்டாம் பேத வாக்கியம் அர்த்த பாகை. இதன் காரணம் நன்மையைக் கடைப்பிடித்தல்; காரியம் மெய்ப்பொருள் அறிதல். இதன் பெயர் பொருட்பால், தைத்திரயம் என்னப்படும்.

மூன்றாம் பேதவாக்கியம் ஞானபாகை. இதன் காரணம் இதய சுத்தி செய்தல்; காரியம் மெய்யின்பமாம் பேரின் பவுணர்ச்சி. இதன் பெயர் காமத்துப்பால், சாமமெனப்படும்.

மூன்று பேதவாக்கியங்களுக்கு மேல் நான்காவது பேத வாக்கியம் இல்லாவிடினும் மூன்று பேத வாக்கியங்களின் சாதனம் கொண்டு விவேகம் முத்தினவனாதலால் அவற்றை நிருவான பாகையாகவும் சுயம்பிரகாச வீடு பேற்றை அதர்வண பேத வாக்கியமெனக் கூறி நான்கு பேத வாக்கியங்களென வகுத்துள்ளார்கள். (ஆதிவேதம் V)

என்பது அயோத்திதாசரின் வேதத் தோற்றம் வளர்ச்சி பற்றிய விளக்கம். வேதங்களின் விரிவுகள் என்று சொல்லப்படும் உபநிஷதங்கள் பொருள்களில் அவற்றினின்றும் வேறுபட்டும் கருத்துக்களில் அவற்றினின்றும் முரண்பட்டும் இருப்பதை மேலை அறிஞர்கள் சான்றுகளோடு எடுத்துக் காட்டியுள்ளனர். உண்மையான உபநிடதங்கள் யாவையென்பதையும் அயோத்திதாசர் சுட்டிக் காட்டுவார். நான்கு பேத வாக்கியங்களின் உட்பொருள் பலருக்கும் விளங்காமல் மறை பொருளாய் இருந்தபடியால் ஒவ்வொரு பேத வாக்கியத்திற்கும் எவ்வெட்டு உட்பொருள்கள் கூறி, முப்பத்திரண்டு உபநிட்சை யதார்த்தங்களை வகுத்து உபநிடதங்களென்னும் பெயர் தந்தார்கள். நான்கு பேத வாக்கியங்களின் முப்பத்திரெண்டு உட்பொருள் நுட்பங்களையும் புத்த சமயக்கோட்பாடுகளின் வழி அயோத்திதாசர் நிரல்படுத்துவார். பிறவுயிர்களுக்குத் துன்பம் செய்தல், பிறர் பொருளைக் கவர்தல், பிறர்க்குத் தீங்கு நினைத்தல், பிறன்மனை நயத்தல், பிற சீவன்களைக் கொல்லுதல், பிறர் மனம் புண்படப் பேசல், பிறரை வஞ்சித்து வருந்தச் செய்தல், பிறரை மதுவூட்டி மயங்கச் செய்தல் ஆகிய எட்டும் பாவச் செயல்களாம்.

பிறவுயிர்களுக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கி ஆதரித்தல், பிறர்க்கு இல்லாத பொருள் ஈந்து சீர் பெறச் செய்தல், பிறரைத் தன்னவர் போல் நேசித்தல், பிறர் மனைவியரைத் தாய் தங்கையர் போல் பாதுகாத்தல், பிற பிராணிகளைக் கொலைக்கேவாமலும் கொலை செய்யாமலும் இருத்தல், பிறர் உள்ளமும் உடலும் மகிழும் இன்சொல் பேசுதல், பிறர்க்குப் பயன்படும் சொற்களைப் பேசி அவர் வளம்பெறச் செய்தல், பிறரின் அறிவைப் பெருக்கி அமுதுண்ணச் செய்தல் ஆகிய எட்டும் நன்மைகளாம்.

சினவாதிருத்தல், தன்னிடத்திலுண்டாம் காமத்தை அகற்றி அன்பைப் பெருக்கல், தன்னிடத்திலுண்டாம் மயக்கங்களை அகற்றி அறிவை வளரச் செய்தல், வஞ்சினம் பொறாமைகளை அகற்றி நல்வாழ்வை விரும்பல், தன்னிடத்திலுண்டாம் பொய்ப் பொருளாசையை அகற்றி மெய்ப் பொருள் தேடுதல், தன்னிடத்திலுண்டாம் சிற்றின்பச் செயல்களை அகற்றிப் பேரின்பத்தை நாடல், தன்னிடத்திலுண்டாம் தற்பெருமையை அகற்றி அடக்கத்தில் நிற்றல், தன்னை வஞ்சித்துத் துன்பப்படுத்தியவனை அன்புடன் ஆதரித்தல் ஆகிய எட்டும் இதய சுத்தங்களாம்.

தன்னிடத்துண்டாம் பற்றுகளற்று ஆனந்தத்திலிருத்தல், தன்னை மாறி மாறிப் பிறக்கச் செய்யும் மரணத்தை வெல்லுதல், எப்பொழுதும் தன்னைத் துயரத்தில் ஆழ்த்தும் காமவெகுளி மயக்கங்களை அறுத்தல், தானே தோன்றுகிறதும் கெடுகிறதுமாகிய மனத்தைத் தோன்றாமலும் கெடாமலும் நிறுத்தல், தனக்குண்டாகும் பிறப்பச்சம், இறப்பச்சம் நீக்கிக் கலங்காதிருத்தல், தன்னுள் தானாய் விளங்கும் உண்மையான பேரின்பம் அடைதல், தானே சுயம்பிரகாச சதாநித்திய சித்தாம் ஆனந்த நிலையடைதல் ஆகிய எட்டும் வீடுபேறாம் நிருவாணமாகும்.

அவலோகிதரால் அக்கை, தங்கையர் போலாக்கிய வடமொழி, தென்மொழி இரண்டின் ஆதரவால் திரிபேத வாக்கியங்களாகும் முதல் நூலை ஆதி நூல், எழுதாக் கேள்வி, ஆரணம், ஒத்து, சாகை, சுருதி, இருக்கு என்னும் ஏழு பேதமாக வழங்கி வந்தார்களென்பதற்கு ஆதாரமாகப் பனம்பாரனார் கூற்றையும், நன்னூல், சீவகசிந்தாமணி, சூளாமணி அடிகளையும் மேற்கோள் காட்டுவார் அயோத்திதாசர். புத்தரது மகா வாக்கியங்களே ஆதிவேதம் என்று கூறும் பண்டிதர் பிராமண வேதங்கள் என்று அறியப்பட்டவைகளை ஆழமாகப் பயின்று கட்டுடைப்புக் கலையை மேற்கொள்கிறார். வேதங்களின் தோற்றம் பற்றி அவை கூறும் கருத்துக்களே முரண்படுகின்றன. இருக்கு வேதம் வேதங்களைச் சில ரிஷிகளும் சில அரசர்களும் எழுதியதாகக் குறிப்பிடுகிறது. நான்கு வேதத்தின் பாயிரத்துள் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து பிரம்மா முனிவருக்குப் போதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மனு நீதி ஓரிடத்தில் பிரம்மா அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் ஆகிய மூவரிடத்திலிருந்து வெளிப்படுத்தினாரென்றும் மற்றோரிடத்தில் நாய், நரி, கழுதை, பசு, தவளை ஆகியவற்றின் வயிற்றில் பிறந்த மனிதர்கள் வேதங்களை எழுதினார்களென்றும் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு வேத உற்பத்தி பற்றி நான்கு மூலங்கள் குறிக்கப்பட்டிருக்க அவை கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தன என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. நான்கு வேதங்களையும் முழுவதுமாகச் சங்கரரோ, இராமானுஜரோ, மாத்வரோ வைத்திருந்தார்களென்பதற்கும் சரித்திர ஆதாரம் கிடையாது. இவை இன்னின்ன வழிவந்தோரால் இன்னின்ன மடங்களில் வைக்கப்பட்டிருந்தனவென்பதைச் சொல்லும் செப்பேடுகளோ சிலாசாஸனங்களோ யாராலும் சுட்டப்படவில்லை.

வேதங்களை வாசிப்பதால் மனிதர்கள் சீரடைவார்களா, சீர் கெடுவார்களாவெனும் கேள்வியைக் கேட்டுக் கொண்டு பண்டிதர் அவை கொலை, களவு முதலிய பஞ்சமா பாதகங்களை நியாயப்படுத்துவதை எடுத்துக்காட்டுகளுடன் முன் வைப்பார். யஜுர்வேதம் 117 ஆவது வசனமும் அதர்வணவேதம் 160ஆவது வசனமும் வேள்வியாகிய நெருப்பில் சுட்டுத் தின்பதற்கு ஆயிரம் பசுக்களைக் கொல்ல வேண்டுமென்றும் பகைவர் யாவரையும் அழிக்க மந்திரம் உண்டென்றும் சொல்லும். இருக்கு வேதம் 20ஆவது வசனம் வசிட்டர் வருணன் வீட்டில் தானியம் திருட முயன்ற கதையைக் கூறும். இருக்கு வேதத்தின் 24ஆவது வசனம் இயமன் அவனது மகளாகிய யமுனா வென்பாளைக் கற்பழிக்க முயன்ற போது அவள் அவனுக்குக் கூறிய அறிவுரையாகும். யசுர் வேதத்தின் 95ஆவது வசனம் முதல் மனு தன் மகளை மணந்தது பற்றியதாகும். யசுர் வேதத்தின் 72ஆவது வசனம் விரங்கர் என்னும் அரசனுடைய ஐந்து பிள்ளைகளும் இதர மனிதர்களும் வேதத்தின் கிரந்த கர்த்தாக்களென்றும் அதே வேதத்தின் 112 ஆவது வசனம் வேதமெழுதியவர்களில் தரகர்களே இல்லையென்றும் பொய் பேசும். யசுர் வேதம் 111 ஆவது வசனம் சோமபாணம் சுராபானம் எனும் மயக்கப் பொருள்களை உண்டு செய்யும் முறைகளையும் அவற்றை உட்கொள்ளும் முறைகளையும் விவரிக்கும்.

கடவுளைப் பற்றியும் பிரம்மத்தைப் பற்றியும் வேதங்களில் காணப்படும் கூற்றுகள் ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்பாடு உடையவை. இருக்கு வேதம், அக்கினி, வாயு, சூரியனென்று மூன்று கடவுளர்கள் உண்டென்றும் அவற்றுள் ஒரே கடவுளாகிய மகாத்மா உண்டென்றும் அம்மகாத்மாவே சூரியனென்றும் குறிப்பிடும். யசுர் வேதம் 121 ஆவது பாகத்தில் புசிக்கும் உணவு அல்லது உடலே பிரமம் என்றும் 122 ஆவது பாகத்தில் உயிர்ப்பாகிய பிராணனே பிரமம் என்றும் 132 ஆவது பாகத்தில் அறிவே பிரமமென்றும் 124 ஆவது பாகத்தில் ஆனந்தமே பிரமமென்றும் விளக்கும். ஆத்மா பற்றிய கூற்றுகளும் தெளிவற்றவை. சாமவேதத்தின் 146ஆவது பாகத்தில் வானமே ஆத்மாவென்றும் 147ஆவது பாகத்தில் சூரியனே ஆத்மாவென்றும் 148ஆவது பாகத்தில் வாயுவே ஆத்மாவென்றும் 149 ஆவது பாகத்தில் ஆகாயப் பரமாணுவே ஆத்மாவென்றும் 150 ஆவது பாகத்தில் உலகமே ஆத்மாவென்றும் 151 ஆவது பாகத்தில் மண்ணே ஆத்மாவென்றும் கூறப்பட்டுள்ளன.

வேத அந்தமெனப் போற்றப்படும் உபநிடதங்களும் பிரமம் பற்றிய வெவ்வேறு தொடர்பற்ற, பொருளற்ற விளக்கங்களையே முன் வைக்கின்றன. முண்டக உபநிஷத்து இரண்டாயிரம் முண்டகம் முதல் அத்தியாயத்தில் அக்கினியினின்று ஆயிரம் பக்கங்களில் பொறிகள் எப்படி உண்டாகின்றனவோ அது போல் அழிவற்ற பிரமத்திலிருந்து பல ஜீவாத்மாக்கள் தோன்றி மறுபடியும் அதில் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலவகார் உபநிஷதம் பிரமத்தை அறிவேன் என்பவன் அறியான், அறியேன் என்பவன் அறிவான், பிரமம் தெரியும் என்பவர்களுக்குத் தெரியாது, தெரியாதென்பவர்களுக்குத் தெரியும் என்றுரைக்கும் கடோபநிஷதம் மனத்தினால் மட்டுமே பிரமத்தை எட்ட முடியும் என்று தெரிவிக்கும். கேனஉபநிஷதம் பிரம்மத்தைக் கண்ணாவது வாக்காவது மனமாவது எட்டுவதில்லை, அதை நாம் அறியோம், அதைத் தெரிவிக்கும் வழியும் நமக்குத் தெரியாது என்று ஒத்துக் கொள்ளும் பிரஹதாரண்யக உபநிஷதம் குதிரையேயே பிரமம் என வருணிக்கும். வாஜகாநேய உபநிஷதம் பிரமம் எவ்வித சரீரமும் அற்றவர், ஒளி பொருந்தியவர், பாவமற்றவர், விவேகி, மனத்தை ஆள்பவர் என்றெல்லாம் வாதிடும். முண்டக உபநிஷதம் ஓரிடத்தில் கண்களாலோ, வாக்காலோ, மற்ற இந்திரியங்களாலோ, தவத்தாலோ, கர்மத்தாலோ பிரமத்தைப் புரிந்து கொள்ள முடியாதென்றும் மற்றோரிடத்தில் பிரமம் அணுவைப் போல் மிகச் சிறியவனாகவும் மனத்தினால் அறியத் தக்கவனாகவும் இருக்கின்றான் என்றும் வேறோரிடத்தில் விவேக பரிபூரணனும் சர்வக்ஞனும் எங்கும் பரவி மகிமையுள்ளவனுமாகிய ஆத்மா ஆகாயத்திலிருக்கிறானென்றும் மூன்று வெவ்வேறு உறுதிமொழிகளை அளிக்கும். சுவே தாசுவதர உபநிஷதம் ஓரிடத்தில் தியானத்தையும் யோகத்தையும் மேற்கொண்டோர் காலாத்துமாக்களோடமைந்த வேதாத்துவ சக்தியைக் கண்டார்களென்றும் இன்னோரிடத்தில் புருஷன் அந்தராத்மாவாகி விரலளவுள்ள மக்களின் இதயத்தில் இருக்கிறானென்றும் இயம்பும் (சிந்தனைகள் I 66-78).

இவற்றையெல்லாம் தொகுத்துத் தரும் பண்டிதர் வேதங்களும் உபநிஷதங்களும் பிரமத்தின் நிலையையும் ஆத்தும நிலையையும் ஆதாரமின்றிப் பிள்ளைகள் விளையாட்டில் கண்ணைக் கட்டியடிக்க ஆள் தெரியாது தடவி அவ்விடம் உள்ளவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லித் திரிவது போல் மாறுபடப் பேசுவதால் வேத அந்தங்களை வாசிப்பது விழலுக்கிறைத்த நீராய் முடியுமென்பார்.

இவ்வாறு வேதங்களும் உபநிஷதங்களும் கடவுள் பற்றியும் ஆன்மா பற்றியும், மறுமை பற்றியும் பொருளற்ற பிதற்றல்களைக் கொண்டு “பைத்தியக்காரனின் பாட்டுகளாக” அமைந்து மனித வாழ்வுக்குரிய நெறியைச் சொல்லாதிருக்கப் புத்தரது ஆதிவேதம் மனிதரால் அறிய முடியாதது பற்றி வீண் ஆரவாரச் சொற்களில் கதை சொல்ல முயலாது. இவ்வுலக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நெறிகளைச் சொல்லியிருப்பதை ஒப்பிட்டுக் காட்டுவார் பண்டிதர்.

இந்து சமயத்தார் குறிப்பிடும் கீதையைக் கண்டு கொள்ளாது பெளத்த ஞானிகள் கூறியுள்ள மூன்று அறவுரைகளை மூன்று கீதைகள் என்றும் மும்மணிகள் என்றும் மூன்று இரத்தினங்கள் என்றும் அறிமுகப்படுத்துவார் அயோத்திதாசர்.

மனுக்களில் பெருமையும் அருமையுமான ஆசானும் பகவான் சாக்கைய முனிவர் யாவருக்கும் குருவாக விளங்கி உலகில் முடிக்க வேண்டியதை முடித்துக் கரையேறி நிருவாணம் அடைந்த மங்களகரமான புத்தபிரானை யாங்கள் துணைக் கொள்கிறோம்.


காமம், அவா, துக்கம் இவைகளினின்றும் விலகச் செய்யும் தர்மமும் அழியாத தருமமும் குற்றமற்றதும் மதுரமானதும் தெளிவானதும் தருக்க நீதியானதுமான தர்மத்தை யாங்கள் துணைக் கொள்கிறோம்.

எட்டு மார்க்கங்களை உடையவர்களும் நான்கு வித வாய்மை உடையவர்களும் தர்க்கத்தில் தேர்ந்து அதன் பலனைக் கண்டடைந்த சங்கத்தை யாங்கள் துணைக் கொள்கிறோம் (ஆதிவேதம் 196).

புத்தாங்க சரணம், தர்மாங்க சரணம், சங்காங்க சரணம் எனும், இம்மூன்று, மாந்தர்களுக்கு நன்னெறியில் செல்ல வழிகாட்டும் உண்மையான கீதோபதேசங்களாகுமேயன்றி வருண பேதத்தை வற்புறுத்தும் கண்ணன் சொல்லியதாகக் கூறப்படும் கீதை நன்னெறிக்கு உதவாதது என்பது அயோத்திதாசரின் எண்ணமாம்.

புத்த சமயக் கொள்கைகள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு அவற்றை இந்து சமயக் கொள்கைகளாக விளம்பரம் செய்து புத்தரைத் திருமாலின் அவதாரங்களில் ஒருவரெனக் கூறி இந்து சமயத் தலைவர்கள் அவருக்குத் தங்கள் தொன்மங்களில் ஓரிடத்தைக் கொடுத்து புத்த சமயத்தை இந்தியாவில் வலுவிழக்கச் செய்தார்கள் என்பது இதுகாறும் சொல்லப்பட்டு வருகின்ற வரலாறு. இதற்கு எதிர்த் தொன்மம் (Counter myth) ஒன்றைப் படைக்கிறார் அயோத்திதாசர். இந்து சமயம் புத்தர் காலத்திற்குப் பின் வந்ததென்றும் இந்துக் கடவுளர்களைப் பற்றிய புராணங்கள் யாவும் புத்தர் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டன வென்றும் தமது தொன்மத்தின் மூலம் நிறுவுகிறார். புத்தரே ஐந்து இந்திரியங்களையும் அடக்கியாண்டதால் ஐந்திரன், இந்திரன் என்று பெயர் பெற்றதாகவும் சிவன், திருமால், விநாயகன், குமரன் போன்ற இந்துக் கடவுளர்களின் பெயர்களெல்லாம் அவருடைய பெயர்களேயென்றும் அவர்களுடைய செயல்களாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளனவற்றில் பல அவருடைய செயல்களேயென்றும் பாலி, தமிழ் மொழிகளிலுள்ள பழம் நூல்களின் ஆதாரங்களைக் கொண்டு தமது தொன்மத்தைக் கட்டமைத்துக் கொள்கிறார்.

புத்தரே பகவன், காசி விசுவநாதன், தருமராஜன், கங்கையாதாரன், ஜகத்ரட்சகன், குமரக்கடவுள், மாதவன், விநாயகன், கமலநாதன், தேவாதி தேவன், எண் குணத்தோன், சக்கரவர்த்தித் திருமகன், ஜெகந்நாதன், ஒப்பிலாவப்பன், நடராசன், சுடலையாடி, சுப்ரதீபன், சின்மயமுத்ரன், தேசிகன், மாமறையோன், வீணைகோபாலன், அமலன், யானை உரணத்தோன், ஆதிமூலன், மூவாமுதல்வன், சங்கரன், திருமூர்த்தி, திருமால், உலகநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். மகடபாஷையாகிய பாலி ஒலி வடிவாயிருந்தபடியால் சகட பாஷையாகிய வடமொழி வரிவட்சரங்களையும் திராவிட பாஷையாம் தமிழ் மொழி வடிவட்சரங்களையும் உண்டு செய்து வடமொழியைப் பாணினிக்கும் தென்மொழியை அகஸ்தியருக்கும் போதித்தவர் புத்தரே. பொதியை விகாரம் நிறுவி அகத்தியரைப் பிரதம குருவாக ஆக்கியவர் அவரே. பொதியை யென்றால் பாலி மொழியில் மலையைத் துளைத்துப் போதிய அறைகள் உண்டாக்கல். சுடலையில் ஆணும் பெண்ணுமாகிய உருத்தோன்ற நடனமாடியவரும் புத்தரே. அவரது தந்தையாராகிய சுத்தோதயச் சக்கிரவர்த்தி இறந்த போது,

குடும்பத்தரசர்கள் யாவரும் வந்து கூச்சலிட்டழுது கண்கலங்கி பிரேதத்தைச் சுடலைக்கெடுத்துச் சென்று தகனத்திற்கு ஆரம்பிக்கும்போது அசோதரையும் இராகுலரும் அம்மடத்தைச் சேர்ந்த சங்கத்தவர்களும் பந்து மித்திரர்களும் சூழ்ந்து நின்றார்கள்.


தகனக் காட்சியைக் கண்டு நின்ற ததாகதர் சுத்தோதய மறுமை பிறப்பறுமோ அறாதோவென்று உள்ளத்துணர்ந்து அறுமென்னும் தோற்ற உணர்ச்சியால் ஆனந்தமுற்று மலைமகள் அசோதரையும் மற்றுமுள்ளோரும் காண, தகன குண்டத்தைச் சுற்றிச் சுற்றித் தனது ஏக சடையுடை துலங்க இவ்வுரு ஆணோ பெண்ணோவென்று கலங்க, சுடலையில் நடனமாடினார் (ஆதிவேதம் 211).

தனது தந்தை உயிருடன் இருந்த காலத்து இறுதி நாட்களில் அவருக்கு ஞானோபதேசம் செய்து தந்தைக்குக் குருவான குமரக் கடவுளும் புத்தரே. “உலகுய்யும் உமது சத்திய தன்மத்தை விளக்கி என்னை ஆட்கொள்ள வேண்டும்” என்று தந்தை மகனை வேண்ட, ததாகதர் அவருக்கு அருள்புரிந்தார்.

புத்தபிரான் தனது தந்தையாகிய சுத்தோதயச் சக்கிரவர்த்திக்குக் குருவாக விளங்கினது கொண்டு “தகப்பன் சுவாமி” என்றும் “பிதாவிதாதா” என்றும் அழைக்கலானார்கள் (ஆதிவேதம் 140).

கங்கையை மக்களுக்கு அளித்தவர் புத்தரே. அவர்கள் தவிப்பையுணர்ந்த அண்ணல் தனது ஏக சடையைக் கரத்திலேந்தி நீட்டியபோது அதனின்று பெருகிய நீர்ப்பிரவாகமாய்ப் பரந்து சகல சீவர்களும் பருகிவிடாய் தீர்ந்ததுகள்.

பாறையெங்கும் கங்கை பிரவாகமுற்றிருப்பதைக் கண்ட கருணாகரன் அங்குள்ள அன்பர்களைக் கொண்டு அவ்விடம் பரவும் அருவி நீரோடையை அடிவாரத்தில் கொணர்ந்து சகல ஜீவர்களுக்கும் உதவும்படி துவாரமிட்டு மலையின் அருவி நீர் பூமியில் வற்றாமல் ஓடி சீவர்களைக் காக்கும்படி செய்துவிட்டார். அம்மலையில் செய்த ஜலதார வழிக்குப் பகவன் பெயரில் ஒன்றாகிய அரித்துவாரம் என்னும் பெயரைக் கொடுத்ததுமன்றி அக்கங்கை நதி பெருகியோடுதற்குக் கங்கை நதியென்றும் புத்தபிரானே அதற்கு

ஆதாரமாய் இருந்தபடியால் அவரைக் கங்கை யாதாரனென்றும் போற்றினார்கள் (ஆதிவேதம் 135). “உருகிய மழுவை உள்ளங்கையேந்தி அருளொடு வாய்மை ஆற்றல் அருளி, கருவிலமைந்த காட்சியமைப்பை, திருவயினுள்ள செயலிதென்றானே.”

என்று திருமூலர் பாராட்டும் மழுவேந்திய பெருமான் புத்தரே. அவர் பெருமையறியாத கொல்லன் ஒருவன் ஊதுலையில் பழுக்கக் காய்ந்திருந்த இரும்புக் குண்டை அவர் முன்னுருட்டி எல்லாவுயிர்களிடத்தும் அன்பு உண்டென்று சொல்கின்றீரே இவ்விரும்பிலும் அன்பு உண்டென்று சொல்கின்றீரே இவ்விரும்பிலும் அன்பு உண்டோவென்று கேட்டபோது,

அருகக் கடவுளோ அவன் அறியாமைக்கு இரங்கி அக் காய்ந்துருகும் மழுவைத் தன் கரத்திலேந்திக் கன்னானை நோக்கியபோது அத்தழலானது ததாகதர் கரத்தில் தாவாது மேனோக்கி வீசிற்று. அதைக் கண்ணுற்ற கன்னான் அச்சுவாலை மேனோக்கி வீசுவதையும் அதன் தாண்டவத்தையும் உணர்ந்து திகைத்து நின்றான்.

இறைவனோ, தன் கரத்தேந்திய மழுவை எறிந்துவிடாது இன்னும் மேலேற்றிக் கன்னானை நோக்கி அன்பரே! உன்னிடத்திலுள்ள காமக்கினியின் சுடுகையை உணராமலும் கோபாக்கினியின் சுடுகையை உணராமலும் பசியாக்கினியின் சுடுகையை உணராமலும் இம்மழுவின் சுடுகையை மட்டுமுணர்ந்து மகிழ்ச்சி கொண்டது என்னோ வென்றார் . . .

அன்பரே! நீர் தண்மை அடைவீராயின் சகலமும் தண்ணுறும் நீர் கடுமை அடைவீராயின் சகலமும் உம்மைச் சுடுமென்றார் (ஆதிவேதம் 114-116).

சனகாதி முனிவர்களுக்கு அறநெறி கற்பித்தவரும் புத்தரே.

மாணாக்கருள் ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமரென்னப்பட்ட நால்வருக்கு ஜெயமுத்தி நிலையாகும் சின் முத்திரையை அளித்து எட்டுத் திக்குகளிலும் மெய்யறத்தைப் பரவும்படிச் செய்தார். (ஆதிவேதம் 43)

திருவாதிரை நட்சத்திரத்தில் நிர்வாணம் அடைந்த ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிய ஆதிரையானும் புத்தரே. எங்களைக் காப்பாற்றும் பொருள் உண்டா இல்லையா என்பதை விதர்ப்ப நாட்டரசனும் மந்திரியும் கேட்டபோது, புத்தர்

உண்டென்பதை அவனவன் உள்ளத்திலும் இல்லையென்பதை அவனவன் விசாரணையிலுமே தெரிந்து கொள்ள வேண்டியது இயல்பாமென்று தனது இரு கண்களையும் மூடி மார்கழி மாதம் பெளர்ணமி திதி திருவாதிரை நட்சத்திரத்தில் பரி நிருவாணமடைந்து விட்டார். (ஆதிவேதம் 286)

புத்தரின் வரலாற்றின் நிகழ்ச்சிகளாக அயோத்திதாசர் தொகுத்துரைப்பன யாவும் இந்துத் தொன்மங்களில் கடவுளரின் செயல்களாகக் கூறப்பட்டுள்ளனவற்றிலிருந்து ஒருவகையில்பெரிதும்வேறுபட்டிருக்கக் காணலாம். புத்தரின் உயர்வைக் காட்டும் இயற்கையிகந்த நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டிருப்பினும் புராணங்களிலுள்ள தெய்வங்களைத் தரம் தாழ்த்தும் ஆபாச, அருவருப்பூட்டும் நிகழ்ச்சிகள் அறவே நீக்கப்படுகின்றன. யாவும் பிறவுயிர்களிடத்துக் காட்ட வேண்டிய அன்பை வலியுறுத்தும் புத்தருடைய கோட்பாடுகளை வற்புறுத்தவே கட்டமைக்கப் பட்டுள்ளன. புத்தர் இந்த நாட்டிலுள்ள முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை நிலங்களுக்கும் சென்று மக்களுக்கு வாழும் வழிகளையும், தொழில்களையும் அறத்தையும் கற்பிக்கிறார். ஒடுக்கத்தால் உண்டாகும் இன்பமும் விரிவால் உண்டாகும் கேடும் அவரால் விளக்கப்படுகின்றன. அன்பே சிவம் என்னும் திருமூலர் கருத்திற்கேற்ப அருளே உருவாய்த்திகழ்கிறார் அயோத்திதாசர் காட்டும் புத்தர். அவர் வாழ்க்கை நிகழ்வுகளில் கீழான எண்ணங்களுக்கு இடமில்லை. மறுமை பற்றியோ, உலகைத் தோற்றுவித்தவராகக் கருதப்பெறும் இறைவனைப் பற்றியோ, மோட்சம், நரகம் எனும் கற்பனை உலகங்கள் பற்றியோ ஊகங்கள் ஏதும் உண்மைகள் போல் சொல்லப்படுவதில்லை. மகட பாஷையில் சிவம், பிரமம், ஈசன் என்று சொல்லப்படுபவை சகடபாஷையில் இதம், சாந்தம், தன்மம் ஆகுமென்றும் அவையே திராவிடபாஷையில் அன்பு, தண்மை, ஈகையென்றும் விளக்கப்படுகின்றன. அன்பையும் பிறவுயிர்களின் குற்றங்களைப் பொறுத்து ஆதரிக்கும் பண்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அன்பு, ஈகை, சாந்தமெனும் அமுதைத் திரட்டுங்கள் என்றும் புத்தவேதம் அவரது வாழ்க்கை வரலாறு மூலம் போதிக்கிறது.

இந்து சமயத் தொன்மங்களில் பலவற்றைக் கட்டுடைத்து அவற்றிலுள்ள முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் விளக்கி அவை மக்களுக்கு நன்மை செய்யாமல் தீமை விளைவிக்கும் என்பதையும் எடுத்துக்காட்டி அவற்றை ரச மாற்றம் செய்து பெளத்த அறத்தை அடிப்படையாகக் கொண்ட தொன்மங்களாக மாற்றி அவற்றின் மூலம் யாவர்க்கும் நன்னெறி புகட்டும் முயற்சியில் அயோத்திதாசரால் எழுதப் பெற்றுள்ள கட்டுரைகள் மிகப்பல. குறிஞ்சி நிலத் தலைவனென்றும் தமிழ்க் கடவுளென்றும் போற்றப்பட்ட முருகன் சிவனுடைய மைந்தனாகிய சுப்ரமண்யக் கடவுளேயென்று அவனுடைய பிறப்புப் பற்றிய தொன்மத்தைப் படைத்துக் கொண்டது இந்து சமயம். இதைப் புறக்கணித்து முருகனைப் பெளத்த சமயத்தைச் சார்ந்த ஞானாசிரியனாகக் காண்கிறார் அயோத்திதாசர். பூங்குறிஞ்சி என்றும் பழனி என்றும் வழங்கும் மலையை ஆண்டு வந்த மருகன் என்னும் அரசனுக்கும் கங்கை என்னும் இராக்கினிக்கும் முருகன் என்னும் ஓர் மகவு விசாக நட்சத்திரத்தில் தோன்றி வளர்ந்து சரவண சங்கத்தை அடுத்துக் கலைநூற்கள் கற்று அரச பதவியேற்றுத் தெய்வானையென்னும் அரசியை மணந்து வள்ளியென்னும் மங்கையிடம் காதல் கொண்டு மஞ்ஞை ஊர்தி என்னும் ஒரு வாகனத்தில் அவளைக் கொண்டு வந்து சேர்த்தார் என்று முருகன் கதையைச் சொல்லும் தாசர் அவர் “விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்றும் தனக்குப் பின் சந்ததி இல்லாமையால் சூரப்பகைவனென்றும், கலைநூற்களைக் கற்றிருந்தமையால் புலவனென்றும்... சரவணப் பள்ளியாம் புத்த சங்கத்தில் சேர்த்து ஆறு அறகத்துகளின் ஞானாமுது உண்டபடியால் சரவண பவன் என்றும் இரு மனைவி பாகம் கடந்தபடியால் கடம்பன் என்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் பரி நிருவாணமுற்றபடியால் கார்த்திகேயன் என்றும்” (அலாய்சியஸ் II 71) ஞானானந்தப் பெயர்கள் பெற்றார் என்பர். இத்தொன்மத்தில் குமாரனின் பிறப்புப் பற்றி வடமொழியிலும் தமிழிலும் புராணங்கள் கூறும் ஆபாச நிகழ்ச்சிகளெல்லாம் அறவே நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்து சமயத்தைச் சார்ந்த சைவ மரபினரின் லிங்க வழிபாடும் தொன்மத் தூய்மையாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது. அயோத்திதாசர் ‘இலிங்கம்’ என்னும் சொல்லின் மூலம் ‘அங்கலயம்’ என்றும் ‘அங்கலயம்’ என்னும் சொல்லே ‘லய அங்கம்’ எனத் திரிந்து தற்காலத்தே லிங்கமென வழங்கி வருகிறது என்பார். புத்தபிரான் பரி நிருவாணம் அடைந்தவுடன் அவர் உடலை எரித்து அவர் அஸ்திரங்களை ஏழு அரசர்கள் கொண்டு போய் டாகோபா என்னும் கோபுரங்களைக் கட்டி அவற்றின் நடுவே அஸ்தியைப் புதைத்து அவ்விடத்தின் அடையாளம் என்றும் தெரிய வேண்டுமென்பதற்காக உயர்ந்த கற்களால் பீடங்கட்டி மத்தியில் பச்சைக் கல்லிலாலேனும் வைரத்தினாலேனும் கருங்கல்லினாலேனும் கொழுவிபோல் செய்து நாட்டிப் புத்த சங்கத்தார் யாவரும் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடத் தொடங்கினர். அதனையே பழங்காவியங்கள் தரும பீடிகை, மணியரைப் பீடிகை, கடவுள் பீடிகை, தருமபீடம், கடவுள் பீடம் என்றெல்லாம் கூறும். சங்கத்துப் பின்னடியார்கள் அடையாளக்கல் பீடத்தை அங்கலிங்க ஐக்கியமென்றும் லய அங்கம் என்றும் வழங்குதல் மரபாயிற்று. சப்த, பரிச, ரூப, ரச, கந்தம் என்னும் ஐந்து இந்திரியங்கள் அடங்கி ஆனந்தம் உதித்துப் பூரணநிலை பெறுவதால் அங்கலிங்க ஐக்கியம் என்ற வழக்கு ஏற்பட்டது. ஆனால் வேஷ பிராமணர்கள் தோன்றிய பிறகு அவர்களைப் பின்பற்றிய கூட்டத்தார் தங்கள் பொய்க் குருக்களிடம் சென்று அங்கலிங்க ஐக்கிய பூசை செய்ய வேண்டும் என்று வேண்டியபோது அதன் உட்பொருள் விளங்காமல் ஆவிடையார் கோவில் என்னும் கட்டிடத்தைக் கட்டி வைத்து அதன் நடுவே பெண்குறி ஆண்குறியை நாட்டி அங்கம் என்றால் தேகம், லிங்கம் என்றால் ஆண்குறி, ஐக்கியம் என்றால் பெண்குறியென்று ஓதி இதுவே உலக சிருட்டி முதலாய் இருக்கின்றபடியால் இதையே நீங்கள் பூசித்து வரவேண்டுமென்று காமிகார்ச்சனை என்னும் லிங்கமதத்தை ஏற்படுத்தினார்கள் (அலாய்சியஸ் II 74-5). லிங்கமதம் பரவுவதைக் கண்ட வைணவர்கள் தாருகாவனத்தில் ரிஷி பத்தினிகளைச் சிவன் கற்பழித்ததால் அவர்கள் சாபமிட அவர் குறி அறுந்து விழுந்ததாகவும் அதனையே சிலர் வழிபடுவதாகவும் கதை எழுதினர்.

‘லிங்கம்’ என்ற சொல் உடலும் மனமும் அயர்ந்த இடம், கருவிகரணங்கள் ஓய்ந்த இடம், ஒரு மருந்துக்கட்டி, செவ்வாய் எனும் கிரகம் எனும் பொருள்கள் கொண்டதேயன்றி ஆண்குறி என்று பொருள்படும் என்று எந்நூலும் கூறவில்லையென்பார் பண்டிதர். அயோத்திதாசர் இந்நாட்டின் தொன்மை பற்றியும் அதன் பொற்காலம், வீழ்ச்சி பற்றியும் ஆரியர்களின் தொன்மத்திற்கு எதிரான ஒரு தொன்மத்தைக் கட்டமைக்கின்றார். ‘இந்திரம்’ என்னும் சொல் ‘ஐந்திரம்’ என்பதின் திரிபாகும். சித்தார்த்தன் கல்லாலடியில் வீற்றிருந்து ஐம்பொறிகளை வென்ற திறத்தால் ஐந்திரர் என்று பெயர் பெற்றார். அது திரிந்து இந்திரர் என வழங்கி அவரது சங்கத்தார் கூடிய இடத்திற்கு இந்திர விகாரமென்றும் அவரை வணங்கிக் கொண்டாடும் விழாவிற்கு இந்திரவிழாவென்றும் அவரை வழிபட்ட கூட்டத்தார்க்கு இந்தியர் என்றும் அவர்கள் வாழும் நாட்டிற்கு இந்தியா என்றும் இந்திரம் என்றும் பெயரிட்டு அழைத்தார்கள். இந்நாட்டிற்குப் பரத கண்டம் என்ற பெயரும் உண்டு. புத்தர் அறவரத்தை ஓதியதால் அவரை வரதர், பரதர் என்றும் கொண்டாடினர். அவர் தந்த ஆதிவேதமாம் முதல் நூல் “வரதன் பயந்த அறநூலென்று” போற்றப்பட்டது. பொய் வேதத்தோரும் பொய் வேதாந்திகளும் பொய்க்குருக்கள்களும் தங்களை இந்துக்கள், இந்து சமயத்தோர் என்று சொல்லிக் கொள்ளத் தொடங்கினார்கள். இந்து மதமென்று ஆரியர்கள் கூறுவது கற்பனையானதே; அது ஆகாயக் கோட்டையும் அந்தரப் பூவும் போன்றதே. இந்து மதம் எதுவென்பார்க்கு அவர்கள் சைவமதம் என்றும் வைணவ மதம் என்றும் வேதாந்த மதம் என்றும் விசிட்டாத்துவ மதமென்றும் வேறு வேறு மாறுபட்ட மதங்களைக் கூறி மற்றவரை மயக்குறச் செய்வதுடன் தாங்களும் மயங்குவர் (அலாய்சியஸ் II 380) என்பார் தாசர்.

இந்தியாவின் பொற்காலம் என்பது சத்திய தன்மமாம் புத்த தன்மம் ஓங்கியிருந்த காலமே. கருணையும் அன்பும் நிலைத்திருந்த அக்காலத்தில் மாதம் மும்மாரி பெய்ய, உழுதுண்போர் யாவரும் ஈகையாளராம் வேளாளர் என்று அழைக்கப் பெற்றுத் தன்னலம் பாராது பிறருக்காக உழைத்தார்கள். ஆனால் பெளத்த சமயத்தின் செல்வாக்குக் குறைந்தவுடன் பஞ்ச சீலங்கள் பாழடைந்து பஞ்சமா பாதகங்கள் மிகுந்து கயவர்களும் தன்னலமே குறிக்கோளாகக் கொண்டு, சோம்பித் திரிந்த சமயவாதிகளும் சாமிகளும் அதிகரிக்க அவர்களது வஞ்சகச் செயல்களும் பஞ்சமும் நாட்டைநிலைகுலையச் செய்தன.

கிருத யுகத்தில் பிராமணர்களால் இந்து தருமம் மேனிலையில் இருந்ததென்றும் கலியுகத்தில் சூத்திரர் ஆதிக்கத்தால் அது சீரழிந்ததென்றும் கட்டமைக்கப்பட்ட தொன்மத்திற்கு எதிராகப் பண்டிதர் இதை முன் வைத்தார்.

ஒளவை பற்றி வழங்கி வந்த கதைகளையெல்லாம் கட்டுக்குலைப்புச் செய்வதோடு ஒரு புதிய தொன்மத்தை உருவாக்குகிறார் அயோத்திதாசர். அவரைப் புத்த தர்ம சாட்சியக்காரர்களில் ஒருவரென்றும் அம்பிகை அம்மன் என்றும் உயர்ந்த பீடத்தில் ஏற்றி வைத்து மகிழ்கின்றார். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கைய சுந்திரவாகு என்னும் அரசனுக்கு மகளாகப் பிறந்து மங்கைப் பருவம் எய்தியபோது ஞானசங்கத்தில் சேர விருப்பம் தெரிவிக்க அவளது தாய்மாமன் கந்தருவதத்தனால் பொன்னினால் ஒரு பொட்டு செய்து அதைச் சரட்டில் இணைத்துக் கழுத்தில் கட்டச் செய்து உமள நாட்டு விகாரத்துப் பெண்கள் சங்கத்தில் சேர்ந்து விட்டார்கள் என்பது அவர் தரும் அவ்வை வரலாறாகும். அவளே புத்தரின் திரிபிடக தரும போதங்களை எளிய நடையில் ஆத்திச்சுவடி, குன்றை வேந்தன், வெற்றி ஞானம் எனும் திரிவாசகங்களாக மக்களுக்கு அளித்தவள். பிடகத்தை அறிவித்தவளாதலின் பிடகறி, பிடாரி யெனும் காரணப் பெயர் பெற்ற வேம்படியம்பாள் அவள். வைசூரி, வாந்திபேதி நோய்கள் நாகை நாட்டாரைத் தாக்கியபோது அவர்கள் அவளை அணுக அவர்களுக்கு “உங்கள் உள்ளங்களிலுள்ள அன்பையும் அறனையும் அகற்றி வஞ்சகம், பொறாமை, பொருளாசை போன்றவற்றால் தூண்டப்பட்டுச் செயல்பட்டதால் இவ்வாறு அல்லல் உறுகின்றீர், இனியேனும் உடலும் உள்ளமும் சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்குமாறு வாழ்வு நடத்துங்கள்” என்று அறிவுரை கூறிய பெருந்தகை அவ்வம்மன். அவள் இறந்த பின் மக்கள் அவளுக்குப் பல பெயரிட்டுச் சேரிகள்தோறும் விகாரம் கட்டி அது வீதியில் இருக்குமாயின் திருவீதியம்மன் என்றும் மத்திய எல்லைக்குள் இருக்குமாயின் எல்லம்மன் என்றும் கழிகளின் ஓரங்களிலிருக்குமாயின் திருக்கழி அம்மன் என்றும் முல்லை நிலத்திருக்குமாயின் துளிர் கானத்தம்மன் என்றும் பனைமரச் சோலைகளிலிருக்குமாயின் கருக்கம்மனென்றும் தண்டுகள் இருக்கும் இடத்திலிருக்குமாயின் பாளையத்தம்மன் என்றும் நந்தவனத்திலிருக்குமாயின் பூஞ்சோலை அம்மனென்றும் பெயர் வைத்து விழாவெடுத்தார்கள்.

திரிசிரபுரத்திலும் நாகை நாட்டிலும் புத்த தருமத்தைப் பரவச் செய்து வந்த தமிழ் அறிஞர்களும் பாணர்களும் யாழுடன் இசை கலந்து பாடும் யாழ்ப்பாணர்களும் மிலேச்சர்களின் மித்திர பேதத்தால் முகம்மதியர்களால் கொடுமை செய்யப் பெற்று இலங்கை முதலிய தீவுகளுக்குக் குடியேறினார்கள். புத்த மடங்கள் அழிக்கப்பட்டுப் புத்த விகாரங்களிலிருந்த பொற்சிலைகள் திருடப்பட்டன. போர்ச்சுக்கீசியர் வரவிற்குப் பின் வேற்கண்ணி அம்மன் விகாரம் இருந்த இடத்தில் அவர்கள் மதக்கோவில் கட்டப்பட்டது. வட இந்தியாவில் வங்கத்தை ஆண்டு வந்த காளியும் தமிழகத்துக் கோவலன் மனைவி கண்ணகியும் பின்னால் தெய்வங்களாக்கப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அம்பிகை அம்மனின் பெயர்களைப் பெற்றவர்களே தவிர அம்பிகை அம்மனாக ஏற்றுக் கொள்ளத் தக்கவர் அல்லர். அம்மன் பெயரைச் சொல்லிப் பொட்டுக் கட்டி, கோவில்தாசிகள் என்று பெயர் வைத்துப் பெண்களை விபச்சாரிகளாக்குவதும் பெண்கள் அம்மனே வந்து ஆடிப்பாடிக் குறி சொல்லுவதைப் போல் நடிப்பதும் புத்த தர்மத்திற்கு எதிரான நடைமுறைகள்.

அம்பிகை அம்மன் சரிதத்தை வெவ்வேறு சமயத்தார் பலமுறைகளில் மாற்றம் செய்து பொய்க்கதைகளைப் பரப்பிவிட்டுத் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்கள். உலக மாதர், வானவர் முதல்வி, அம்பிகை முதலிய பெயர்களைச் சிவன் மனைவிக்கும், நித்ய செல்வி, வாழ்வலங்காரி, பாக்யவதி, இலக்குமி முதலிய பெயர்களை விஷ்ணு மனைவிக்கும் சரஸ்வதி, கல்விக்கரசி, ஞானத்தாய் முதலிய பெயர்களைப் பிரமன் மனைவிக்கும் சூட்டிக் கொண்டார்கள். சிலர் அம்மனை ஆதியென்ற பறைச்சிக்கும் பகவன் எனும் பார்ப்பானுக்கும் பிறந்தவள்; பறை வள்ளுவனுக்குத் தங்கை என்றும் பரிகசித்துப் புத்தகம் எழுதி வைத்திருக்கிறார்கள் (சிந்தனைகள் II 172).

அயோத்திதாசரின் அவ்வை பற்றிய தொன்ம ஆக்கத்திலும் பெளத்த சமயக் கோட்பாடுகள் மேலோங்கி நிற்பதைக் காணலாம். ஆத்திசூடியை ஆத்திச் சுவடியென்றும் கொன்றைவேந்தனைக் குன்றை வேந்தன் என்றும் வெற்றி வேற்கையை வெற்றி ஞானம் என்றும் அழைக்கும் பண்டிதர் அவற்றின் கடவுள் வாழ்த்துப்பாக்கள் குறிப்பது புத்த தேவனையே என்பதாக விளக்கம் தருவார்.

இஸ்ரேலியர்களைக் காத்த மோசே ஒரு பெளத்த ஞானியேயென்று அயோத்திதாசர் கட்டமைக்கும் தொன்மமும் குறிப்பிடத்தக்கது. புத்த சங்கத்தோர் வகுத்துள்ள விதிகளின்படி மோசே ஓர் உண்மை அந்தணர் என்பது பண்டிதரின் முடிவு. தாயின் வயிற்றில் பிறந்த பிறப்பென்றும் உடலினின்றும் ஒளிமயமாக மாற்றிப் பிறந்த பிறப்பென்றுமாக இரு பிறப்பைக் கொண்டதாலும் எல்லாவுயிர்களையும் தன்னுயிர் போல் காக்கும் இரக்கவுள்ளம் பெற்றிருந்ததாலும் மோசே ஓர் யதார்த்த பிராமணர் ஆவார். அவர் எகிப்தியனாயிருந்த போதிலும் அவர் வாழ்ந்தது சீன பருவதத்திலேயே. ஆதலால் வட நாட்டாரால் சீனர்களென்றும் இசரேலர்கள் என்றும் தென்னாட்டாரால் நாகர்களென்றும் அழைக்கப்பெறும் கூட்டத்தார்க்கும் குருவாக விளங்கினார்; திபேத்தில் வாழும் புத்த குருக்களைப் போல் லாமா வென்று அழைக்கப் பெற்றார். ஏசு இறுதியாகப் பேசிய “ஏலி ஏலி லாமா சபக்தானி” எனும் தொடரில் உள்ள லாமா மோசேயைக் குறிக்கும் அழைப்பாகும். மோசே நித்திய சீவனாக வாழுதற்குத் திரி பீடங்களாகிய பாவம் செய்யாதீர், நன்மையைக் கடைபிடிப்பீர், உள்ளத்தைத் தூய்மையாக்குவீர் எனும் மூன்று கட்டளைகளே வழிகாட்டின. எனவே அவர் மரணத்தை வெல்ல முடிந்தது. பெளத்த அறிஞர்கள் யாவரும் உலகத் தோற்றத்தையும் அதன் முடிவையும் ஆராயாமல் உடலையும் அதன் உற்பவத்தையும் உண்மையையும் ஆராய்வார்களாதலால் மோசே எனும் மகா ஞானியும் கருப்பையின் வளர்ச்சியையும் முடிவையும் பற்றி விரிவாகப் பேசினார். மோசே களி மண்ணினால் தன்னைப்போல் ஓர் உருவம் செய்து தனது சுவாசத்தை அக்களி மண்ணுருவின் மூக்கில் ஊதி அதனை உயிர்ப்பித்தார் என்பதை உருவகமாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவன் என்னும் புனிதமான பொருளின் சுவாசமென்னும் அறிபொருள் இருக்கிறதென்று அஞ்சிப் பாவத்தின் பீடமாகும் காம, வெகுளி, மயக்கங்களை அகற்றி அறிவு, அன்பு, அமைதி, ஈகை ஆகியவற்றைப் பெருக்கி நன்னெறியில் நிற்க வேண்டுமென்பதே அதன் உட்பொருள். பெளத்த அறிஞர்கள் பெண்ணின் உடலில் மாணிக்கத்திற் கொப்பாகிய நற்பலன் என்னும் மக்கட்பேறும் நஞ்சிற்கொப்பாகிய தீய பலன் என்னும் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை உண்டென்றும் கூறியுள்ளது போல் மோசேயும் பெண்ணை ஒரு நந்தவனமாகவும் பெண்ணின் இடையை நன்மை, தீமை அறியத்தக்க மரமாகவும் இன்பத்தை ஒரு கனியாகவும் உருவகித்து அக்கனியை உண்பதால் மக்கட்பேறும் அக்கனியின்பத்தையே என்றும் கருதுபவன் இறப்பிற்கு ஆளாவான் என்றும் வற்புறுத்துவார்.

மோசே 39 வயது வரை எகிப்திலும், 79 வயது வரை டையர், போன்ஷியா நாடுகளிலும் வாழ்ந்து எண்பது வயதில் இஸ்ரேலியரை எகிப்திலிருந்து விடுதலை செய்து ஜெரிகோ நகரை இஸ்ரேலியர்க்குக் காட்டிவிட்டு ஒரு மலையில் சமாதியாகி விட்டபடியால் இவர் சீனா மலைக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறுவார்க்கும் விடையளிப்பார் பண்டிதர். புத்தபிரானின் அறவுரையை விம்பிசாரன் கல்மலையில் அடித்து வைத்திருக்க அக்கற்பலகையை எடுத்துச் சென்றவர் மோசே ஆவார். கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே திபேத்தியப் பெளத்த மடங்களில் பயன்பட்ட ஜெபமாலை, பொதுக் கோரிக்கை, வீதிவலம், பரிசுத்த ஜலம், தீபதூபப் பாடல், குருக்கள் உச்சிசவரம் போன்றவை யாவும் புனித அகஸ்தீன் காலத்தில் எகிப்து வழியாகக் கொண்டு போகப்பட்டதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆய்வுக் கட்டுரை தந்துள்ளார். கிறிஸ்து பிறப்பதற்கு 260 ஆண்டுகளுக்கு முன்பு அசோக மன்னர் பெளத்த ஞானிகளைக் காபூல், ஆப்கனிஸ்தான், சிரியா, மாசிடோனியா, கிரீஸ், எகிப்து ஆகிய இடங்களுக்கு அனுப்பியதாக வரலாறு உண்டு. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பெளத்தர்கள் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அறத்தைப் போதித்து வந்தார் என்பதை அங்குள்ள கல்வெட்டுச் சான்றுகள் நிறுவும். ஆதியில் இந்தியாவிலிருந்து பரவிய தத்துவ ஞானத்தை இந்தியர்களிடமிருந்து கிரேக்கரும் கிரேக்கரிடமிருந்து ரோமியரும் ரோமியரிடமிருந்து அவர் ஆட்சிக்குட்பட்ட நாட்டார் அனைவரும் பெற்றாரென்று ஆங்கிலேய அறிஞர் கோல்புரூக் கூறுவதும் கருதத் தக்கதென்று வாதிடுவார் அயோத்திதாசர்.

உலகில் இதுகாறும் தோன்றியுள்ள சீர்திருத்தக்காரர்களுள் உயர் பண்புடையவரென்றும் உலகம் முழுவதும் போற்றப்பட்டவரும் இன்றுள்ள அறிஞர்களால் புகழப்படுபவரும் புத்தபிரானே ஆவார். அவருடைய அறவுரையின் சிறப்புணர்ந்து தன் மதம் புற மதம் என்று சினமுறாமலும் தன்னினம் புறவினம் என்று பேதம் பாராமலும் களங்கமற்ற ஆய்வை மேற்கொண்டு நல்வழியில் நடப்பதே சத்திய தன்மமாகும் எனும் அறிவுரையோடு மோசே பற்றிய தொன்மத்தை அயோத்திதாசர் பரிந்துரைப்பார்.

அரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்டடிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்துச் சொல்லிய அயோத்திதாசர் தாழ்த்தப்பட்டோர் வாழ்விற்காக இந்த ஐந்து களங்களிலும் போராட வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தவர். ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டு தமிழ்ச் சமுதாயத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதைக் கண்டுகொண்ட அவர் தமிழ்க் குடிகள் வெல்ல வேண்டுமானால், ஆட்சி செய்யும் ஆங்கிலேயர்களின் துணை அவர்களுக்குப் பெரிதும் தேவையென்ற முடிவுக்கு வர நேரிட்டது. நாட்டிற்கு விடுதலை அளித்துவிட்டு அவர்கள் வெளியேறிவிட்டால் ஒடுக்கப்பட்டோர் நிலை மேலும் தாழும் என்பதால் சுதேசிகளின் போராட்டத்தை அவர் ஆதரிக்கவில்லை. நாட்டு விடுதலை முற்றுமாகத் தவிர்க்கப்பட வேண்டியது என்று அவர் கருதவில்லை. பூரண சுயராஜ்யம் என்பது அடித்தள மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட வேண்டியது என்பது அவர் முடிவு. வெறும் அரசு மாற்றத்தால் அவர்களுக்கு நன்மை ஏதும் விளையாததோடு பெருந்தீங்கும் விளையும் என்பது அவர் அச்சம். தமிழகத்தில் அவருக்குப் பின் வந்த தமிழ் அறிஞர்களும் சமுதாய இயக்கங்களும் நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் அவரைப் போல் சிக்கலின் முழுப்பரிமாணத்தைக் கண்டு கொள்ளவில்லை. எனவே ஐந்து முனைகளில் ஏதேனும் ஒரிரண்டிலேயே போராட முன்வந்தனர். தலைவர்களின் தன்னலம் காரணமாகவும் கட்சிகளின் பதவி ஆசை காரணமாகவும் அவர்களின் அரைகுறையான போராட்டங்கள் வெற்றி பெற முடியாது போயிற்று. அயோத்திதாசர் அஞ்சியது போலவே பகைவர்களின் கை ஓங்கிற்று. தமிழ்ப் பழங்குடியினரின் போராட்டம் கடுமையாக்கப்பட வேண்டிய நிலை அரசியல் விடுதலைக்குப் பின்னும் தொடர்ந்தது. இது அயோத்திதாசரின் அறிவாற்றலுக்கும் தொலைநோக்கிற்கும் பிற்காலம் அளித்த அவர் விரும்பாத சான்றிதழாகும்.