ஒற்றை ரோஜா/இரண்டாம் அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

என் வண்டியில் ஏறிய மனிதர் "அப்பா! பயங்கரம்!" என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். படித்த நாகரிக மனிதராகக் காணப்பட்டார். வயது நாற்பது இருக்கும். ஐரோப்பிய உடை தரித்திருந்தார். அவருடைய கண்கள் ரயிலின் அபாய அறிவிப்பு விளக்கைப் போல் சிவப்பாக ஜொலித்தன.

சட்டைப் பையிலிருந்து ஒரு புட்டியை எடுத்து அதிலிருந்த பானத்தைக் கடகடவென்று வாயில் விட்டுக் கொண்டு குடித்தார்.

"ஐயோ! என்ன வெப்பம்! மரண தாகம் எடுத்துவிட்டது!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார்.

பிறகு, என்னை நோக்கி, "அந்த அற்புதத்தைப் பார்த்தீரா?" என்றார்.

"எந்த அற்புதத்தை?" என்று கேட்டேன்.

"இந்த ஒற்றை ரோஜாப் பூவைத்தான்!" என்றார்.

"அதில் அற்புதம் என்ன?" என்று சிறிது கோபமான குரலில் கேட்டேன்.

"அற்புதம் என்னவா! ஆம், உமக்குத் தெரியாது. தெரிகிறதற்கு நியாயம் இல்லை. அந்த ஒற்றை ரோஜாப் பூவிலேதான் என் உயிர் இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு, ஒரு விகாரமான புன்னகை புரிந்தார்.

அவர் ஏதோ அநுசிதமான பரிகாசம் செய்யப் போகிறார் என்று எண்ணினேன். ஆகையால் ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

"இன்னமும் எனக்குப் புரியவில்லை!" என்று கடுமையான குரலில் கூறினேன்.

"ஆமாம்; அந்த ஒற்றை ரோஜாப்பூவில்தான் என் உயிர் இருக்கிறது. ஆகையினாலே மூன்று நாளாகியும் அது வாடாமலிருக்கிறது!" என்றார்.

நான் சிறு பிள்ளையாக இருந்த போது, ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு தடவை எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாத்தியார் பிரம்பினால் சுளீர் என்று முதுகில் அடித்தார். அச்சமயம் என் தலையிலிருந்து ஆயிரம் மின்னல்கள் கிளம்பி வெளியில் சென்றது போலத் தோன்றியது. அத்தகைய உணர்ச்சி இப்போதும் உண்டாயிற்று. அந்த ஒற்றை ரோஜாப்பூ சிறிதும் வாடாமலிருப்பதின் அதிசயத்தை அதுவரையில் நான் எண்ணிப் பார்க்கவில்லை. அது நிஜ ரோஜாப் பூவாயிருக்க முடியாது; நிஜ ரோஜாவைப் போல் அபூர்வ வேலைப்பாட்டுடன் செய்த செயற்கை ரோஜாப் பூவாகத்தான் இருக்க வேண்டும். அதனால் என்ன! நிஜ ரோஜாப் பூவுக்குப் பதில் செயற்கை ரோஜாப் பூவை வைத்துக் கொள்வதில் என்ன தவறு? உடனே அவளுடைய தந்த வர்ணக் கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வட முத்துமாலை என் கவனத்துக்கு வந்தது. அதுவும் செயற்கை முத்துமாலைதான். அதானால் என்ன? அவர்களுடைய கையில் அணிந்திருந்த இரண்டு அழகிய சங்கு வளையல்களும் என் நினைவுக்கு வந்தன. தங்கத்தினாலும் வைரத்தினாலும் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்களினாலும் ஆபரணங்களைச் செய்து சில ஸ்திரீகள் போட்டுக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுடைய அழகு அதிகமாகி விடுகிறதா? அவலட்சணந்தான் அதிகமாகிறது!... இம்மாதிரிச் சிந்தனையில் நான் ஆழ்ந்திருந்தபோது அந்த மனிதர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இது இரண்டாம் வகுப்பு வண்டியா?" என்று கேட்டார்.

"ஆமாம்!" என்றேன்.

"அதுதானே பார்த்தேன்! என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறது. திண்டுக்கல்லில் முதல் வகுப்பு வண்டிக்குப் போய்விடுகின்றேன்" என்றார்.

உடனே எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதை அவரும் தெரிந்துகொண்டார். "அதற்குள் உமக்கு ஒரு எச்சரிக்கை செய்துவிட விரும்புகிறேன்."

"என்ன எச்சரிக்கை?" என்று கேட்டேன்.

"அந்த ஒற்றை ரோஜாப் பூக்காரிப் பற்றித்தான். அவளுடைய ஊர், பெயர் உமக்குத் தெரியுமா?" என்றார்.

"தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை!" என்றேன்.

ஆனாலும் அந்த மனிதர் விடவில்லை. "அவள் பெயர் மனோகரி; அவளுடைய ஊர் கொழும்பு!" என்றார்.

மனோகரி என்ற பெயரைக் கேட்டதும் என் உள்ளம் பூரித்தது. என்ன அழகான பெயர்! 'மனோகரி', 'மனோகரி' என்று இரண்டு மூன்று தடவை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

கொழும்பு நகரைப் பற்றி நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பார்த்ததில்லை. நவநாகரிகத்தில் சிறந்த அந்த நகரத்திலேதான் இத்தகைய பெண் பிறந்து வளர்ந்திருக்கக்கூடும். அதில் ஆச்சரியம் என்ன?

அந்த மனிதருடைய பேச்சைக் கேட்பதில் எனக்கு ஏற்பட்டிருந்த அருவருப்பு மாறிவிட்டது. திண்டுக்கள் ஸ்டேஷன் வருவதற்குள் அவரிடமிருந்து அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடிய வரையில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் உண்டாகிவிட்டது.

அடடா! அந்த ஆசையின் விளைவு என்ன கோரபயங்கரம்! முதலில் நினைத்தபடியே அவருடன் நான் பேச்சுக் கொடுக்காமல் இருந்திருக்கக் கூடாதா?

"உங்களுக்கும் கொழும்புதான் போலிருக்கிறது. அந்தப் பெண் கொழும்பில் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவளோ?" என்று கேட்டு விட்டேன்.

உடனே அவர் தம்முடைய கதையை ஆரம்பித்தார். பயங்கரமான விஷயங்களைப் படிக்க விருப்ப மில்லாத வாசகர்கள் இந்தப் பகுதியை இங்கேயே விட்டுவிட்டு, அடுத்த பகுதியிலிருந்து படிக்கத் தொடங்குவது நலம்.

அவர் கூறியதாவது:

"அவளும் நானும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அல்ல. கொழும்பு நகரம் மிகப்பெரியது. அதில் நான் ஒரு பக்கத்திலும் அவள் ஒரு பக்கத்திலும் இருக்கிறோம். கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் ரயிலில்தான் அவளை முதலில் சந்தித்தேன். அந்தப் பாதையில் வரும் போது இரு பக்கத்திலும் உள்ள அழகிய காட்சிகளைப் பற்றிப் பேசாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும்! நீர் இலங்கைக்கு வந்ததில்லை. வந்திருந்தால், கண்டி-கொழும்புப் பாதையில் பிரயாணம் செய்திருந்தால், உமக்கு நான் சொல்வது விளங்கும். அவ்வளவு அழகான இயற்கைக் காட்சிகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது." "நாங்கள் ஏறியிருந்த வண்டியில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆகையால், அவளுடனே நான் பேச வேண்டியதாயிற்று. அவளும் உற்சாகமாகவே பேசிக்கொண்டு வந்தாள். கொழும்பு ஸ்டேஷன் சமீபத்ததும் ஒருவருடைய விலாசத்தை ஒருவர் கேட்டுத் தெரிந்துகொண்டோ ம். அவளுடைய வாசம் வெள்ளவத்தை என்று தெரிந்துகொண்டேன். மதராஸுக்கு மாம்பலம் எப்படியோ, அப்படி கொழும்புக்கு வெள்ளவத்தை. தன்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் வரும்படி கேட்டுக்கொண்டாள். 'அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்,' என்று ஒப்புக்கொண்டேன். அந்தப்படியே மறு ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை சென்று, அவளுடைய வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். நான் போனபோது அவள் வீட்டில் இல்லை. வேலைக்காரன் ஒருவன் இருந்தான். 'இப்போது வந்து விடுவார்கள்; உட்காருங்கள்!' என்றான். வீட்டுத் தாழ்வாரத்தில் போட்டிருந்த சாய்மான நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். கடற்காற்று சுகமாக வந்து கொண்டிருந்தது. வீட்டு வாசலில் இருந்த சிறிய தோட்டத்தில் புஷ்பச் செடிகளும் அலங்கார குரோட்டன்ஸ் செடிகளும் கொழு கொழுவென்று வளர்ந்திருந்தன! அவற்றில் ஒரே ஒரு ரோஜாச் செடியும் இருந்தது. அந்தச் செடியில் ஒற்றை ரோஜா ஒன்று மலர்ந்தது. 'நான் தான் புஷ்பங்களின் ராஜா' என்று பறையறைந்து கொண்டிருந்தது."

"நேரமாக ஆக என் மனத்தில் ஒரு பதை பதைப்பு ஏற்பட்டது. 'இது யார் வீடோ , என்னவோ? அந்தப் பெண்ணுக்குச் சொந்தக்காரர்கள் எப்படிப் பட்டவர்களோ? அவள் அழைத்தாள் என்று நாம் வந்துவிட்டோ மே! இது சரியான காரியமா?' என்ற எண்ணங்கள் தோன்றி என் உள்ளத்தைக் குழப்பின."

"சிறிது நேரத்துக்கெல்லாம் மனோகரி வந்தாள்! என்னைப் பார்த்ததும் அவள் "வாருங்கள்! வாருங்கள், நீங்கள் வருவதாகச் சொன்னதை மறந்து விட்டேன்" என்றாள். பிறகு, அவளுடன் வந்தவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். பிறகு, என்னை உள்ளே அழைத்துப்போய், விருந்தினரை வரவேற்பதற்குரிய விசாலமான முன் அறையில் உட்கார வைத்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவளும் வந்து எதிரில் உட்கார்ந்து கொண்டாள். வேலைக்காரன் டீ கொண்டு வந்து கொடுத்தான். நான் டீ சாப்பிட்டுக் கொண்டேயிருக்கையில் என் பின்னால் வந்து யாரோ நிற்பதை உணர்ந்தேன். உடனே என் மண்டையில் 'படீர்' என்று ஒரு அடி விழுந்தது. அவ்வளவுதான்; செத்து விழுந்துவிட்டேன்.... ஆமாம், ஐயா, ஆமாம்! செத்துதான் விழுந்தேன். உமக்கு நம்பிக்கைப்படாதுதான். கதையைப் பூராவும் கேட்டுவிடும். செத்து விழுந்த என்பேரில் ஒரு கம்பளத்தைப் போட்டு மூடினார்கள். நான் செத்துப் போய்விட்டேன் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், என் உயிர் மட்டும் அங்கேயே சுற்றி வந்து கொண்டிருந்தது. என் உடம்பை இவர்கள் என்ன தான் செய்யப்போகிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் தான் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அன்று நள்ளிரவில் இந்தப் பெண்ணும் அவளோடு வந்த ஆடவனும் என் உடலைத் தூக்கிக் கொண்டு போனார்கள். தோட்டத்தில் ஒரு பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. அதில் என் உடம்பைப் போட்டுப் புதைத்தார்கள். எல்லாம் முடிந்ததும் மனோகரி ஒரு பெரு மூச்சு விட்டு "ஐயோ! பாவம்!" என்றாள்; அவள் கண்களில் கண்ணீர் துளிகளும் வந்தன. எனக்கு என்னவோ பரமதிருப்தி ஆகிவிட்டது. பிறகு, அவர்கள் கொஞ்ச தூரத்தில் பூச்சட்டியில் இருந்த ஒரு ரோஜாச் செடியைப் பெயர்த்து எடுத்து, என்னைப் புதைத்த இடத்தின் மேல் அதை நட்டுவிட்டார்கள். மனோகரி ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினாள். அந்தத் தண்ணீரோடு அவளுடைய கண்ணீர் துளிகளும் கலந்ததாக எனக்குத் தோன்றியது."

"என் உயிருக்கு இன்னமும் அவ்விடத்தை விட்டுப் போக மனமில்லை. அந்தக் குழியையும் அதன் மேலிருந்த செடியையும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த ரோஜா செடியில் ஒரு மொட்டு விட்டது. அந்த மொட்டுக்குள் போய் என் உயிர் புகுந்து கொண்டது. மொட்டு மலர்ந்து பூவாயிற்று. நானும் அதிலேயே காத்திருந்தேன். மனோகரி அந்த ரோஜாவைப் பறித்துத் தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்ற ஆசையோடு காத்திருந்தேன். அம்மம்மா! அப்படி காத்திருக்கும்போது ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. கடைசியில், அவள் வந்து, தன் தங்கக் கரத்தினால் அந்த ரோஜாவைப் பறித்துத் தன் தலையிலே சூடிக்கொண்டாள். அப்புறந்தான் என் ஆத்மா சாந்தி அடைந்தது."

"தம்பி! உன்னைப் பார்த்தால் நல்ல அறிவாளியாகத் தோன்றுகிறது. ஆகையால், நீயே ஒருவேளை ஊகித்துக் கொண்டிருப்பாய். அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில், சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு சிறிது நேரம் தூங்கிவிட்டேன். அப்போது நான் கண்ட கனவையே இத்தனை நேரம் சொன்னேன். மனோகரி திரும்பி வந்த பிறகு அப்படியெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. மரியாதையாகப் பேசித் திருப்பி அனுப்பினாள். அதன் பிறகு அடிக்கடி நாங்கள் சந்திப்பதுண்டு. இருந்தபோதிலும், அவளுடைய கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூவைக் கண்டால் மாத்திரம் எனக்கு ஒரு திகில் உண்டாகி விடுகிறது. அன்று கண்ட கனவு நினைவுக்கு வந்துவிடுகிறது..." அம்மனிதர் பாதிக் கதை சொல்லிக் கொண்டு வந்த போது, அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி வந்தவராயிருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். அவரிடம் இவ்வண்டியில் தனியாக மாட்டிக் கொண்டோ மே என்று கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. அவ்வளவும் கனவு என்று அவர் கதையை முடித்தபோது என்னையறியாமலே பெருமூச்சு விட்டேன். இவர் ஒரு விளையாட்டு மனிதர் என்று முடிவு செய்து கொண்டேன். ஆயினும், இப்படியெல்லாம் பயங்கரமாக ஏன் கற்பனை செய்ய வேண்டும்? அவருடைய மூளையில் ஏதேனும் கொஞ்சம் கோளாறு இருந்தாலும் இருக்கலாம்.

ரயில் வண்டி தண்டவாளம் மாறும் கடபுட சத்தம் கேட்கலாயிற்று. திண்டுக்கல் ஸ்டேஷனுக்குள் வண்டி போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

"இதோ பாரும்! நான் திண்டுக்கல்லில் இறங்கி, முதல் வகுப்பு வண்டி ஏதாவது காலியிருக்கிறதா என்று பார்த்து வருகிறேன். அது வரையில் இந்தப் பெட்டி இங்கேயே இருக்கட்டும். ஒரு விஷயம்; அந்தப் பெண் உம்முடன் பேச மறுபடியும் வருவாள் என்று தோன்றுகிறது. அவள் கூந்தலில் உள்ள ஒற்றை ரோஜாப் பூவை எப்படியாவது நீர் எடுத்து வைத்திருந்து என்னிடம் ஒப்பித்தால், ஆயிரம் ரூபாய் உமக்குக் கொடுக்கிறேன். இல்லை; ஆயிரம் ரொம்பக் குறைவு, இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன். சரிதானே! ஆனால் அவளுக்கு மட்டும் தெரியக் கூடாது. தெரிந்தால் உயிருக்கே ஆபத்து தெரிந்ததா?"

இந்த மனிதருக்கு மூளைக் கோளாறு தான்! சந்தேகமில்லை, பெட்டியையும் எடுத்துக் கொண்டு தொலைந்து போகக் கூடாதோ! மறுபடியும் இவர் இங்கேயே வருவதாயிருந்தால் நாம் இறங்கி வேறு வண்டி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானித்தேன்.