ஓங்குக உலகம்/010-026

விக்கிமூலம் இலிருந்து

10. பண்டிதமணி

சைவ சித்தாந்த மகாசமாசத்தின் ஆண்டு விழாக்களில் பண்டிதமணி அவர்கள் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். நான் 1931 முதல் என் இளமை தொட்டே அவ் விழாக்களில் கலந்து கொள்வேன். பண்டிதமணி அவர்கள் சமாச விழாக்களில் ஆற்றும் சொற்பொழிவுகள் பொருள் ஆழம் பொதிந்தவையாயும் திருவாசகம் போன்ற சமய இலக்கியங்களின் நுண் பொருளை விளக்குபவைகளாகவும் அமையும். ஒருமுறை திருவாசகச் சொற்பொழிவில் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்ற தொடருக்கு அவர் தந்த விளக்கமே என்னை அவரிடம் ஈர்த்துப் பழக வைத்தது. அத் தொடருக்கு அதற்குமுன் பலர் விளக்கம் சொல்லவும் எழுதவும் கேட்டிருப்பினும் ‘உள்’ என்ற சொல்லுக்குப் பண்டிதமணி அவர்களே தெளிந்த விளக்கந்தந்தனர்.

‘ஒரு உள்ளே புழையுடை மூங்கில் குழாய்’ உள்ளே எறும்பு புகுந்தது. மூங்கிலின் இருபுறமும் தீ பற்றிக் கொண்டது. எப்படி அந்த எறும்பு தப்ப முடியும்? வெறும் ‘இருதலைக் கொள்ளி’ எறும்பு என்றால் அந்தக் கொள்ளி பற்றி நிற்கும் இடத்தின் வழி அது தப்பலாம். ஆனால் உள் எறும்பு தப்ப இயலாதே. இதை எண்ணியே மணிவாசகர் ‘உள்’ எறும்பு என்று உவமை காட்டித் தன் நிலையை விளக்குகிறார் என்ற வகையில் பண்டிதமணி அவர்கள் விளக்கங் கூறினார்கள். அப்படியே பொருள் விளங்காத பல திருவாசகத் தொடர்களுக்கு அவர்கள் காட்டிய விளக்கங்கள் அனைவரையும் மகிழச் செய்யும்.

அப்படியே மற்றொரு சமாச மாநாட்டில் ‘ஞானத்தின் திருவுருவை’ என்ற பெரியபுராணப் பாடலின் விளக்கமும் அப்போது அவர்களது தம்மை மறந்த உணர்வு நிலையும் என்னை மறக்கச் செய்தன.

அவர்தம் கதிர்மணி விளக்கம் என்ற திருவாசகத் திருச்சதக உரையிலும், உரைத் தொடக்கம், முன்னுரை முதலியவற்றிலும் அவர்தம் உணர்வும் மொழித்திறனும் சமய ஈடுபாடும் பிற இயல்புகளும் நன்கு விளங்கும். அந்நூலை நான் இன்றும் நாள்தோறும் போற்றிப் பயின்று வருநிலையில் அதன் பெருமையை உணர்கிறேன். சைவ சித்தாந்த சமாசத்திற்கு வந்து தங்குங்கால் பல விடங்களில் இராப்பொழுதில் அவர்களோடு அருகே இருந்திருக்கிறேன். அக்காலத்தில் உறங்குமுன் அவர்கள் திரு. சுந்தர ஓதுவாமூர்த்திகள், தூத்துக்குடி சிவகுருநாதப் பிள்ளை போன்ற பலப்பல பெரியார்களோடு சமய இலக்கியங்களுக்குப் புதுப் புதுவகையான பொருள் காண்பதும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பிள்ளை உள்ளத் தோடு பேசுவதும் இன்றும் என் நினைவில் உள்ளன. ஒருமுறை தூத்துக்குடி மாநாட்டிற்குச் சென்றபோது ஓர் இரவு முழுவதும் அதேபோல் பேசிக் கொண்டிருந்ததில் பொழுது விடிந்ததே தெரியவில்லை.

அப்போது ஒருவர் பண்டிதமணியை நோக்கி ‘தாங்கள் குழந்தைபோல் பேசுகிறீர்கள்’ என்றார். உடனே பண்டிதமணி அவர்கள் ‘ஆம் நான் குழந்தை தான். என்னால் நடக்க முடியாது! எனக்குப் பற்கள் இல்லை. குழந்தையாயிருப்பதற்கு வேறு என்ன வேண்டும்’ என்றார். அனைவரும் நகைத்தோம். இவ்வாறு பலப்பல விதமான பேச்சுக்களை அவர்கள் பேசுவார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழ் மன்றச் செயலாளனாக நான் இருந்த காலத்தில் (1933-34) அன்றைய செட்டி நாட்டு அரசர் நாண்மங்கல விழாவின் போது பண்டிதமணி உட்பட அன்றைய தமிழகப் பேரறிஞர் அனைவரும் வந்து கலந்துகொண்டனர். அவர்களுடன் தமிழ் மன்றத்தினர் எடுத்துக்கொண்ட புகைப் படத்தினை இன்றும் நான் போற்றிக் காக்கின்றேன். அதில் பண்டிதமணி அவர்களின் தோற்றம் எடுப்பாக உள்ளது. அதில் அக்காலத்திய பிற்காலத்திய பெரும் புலவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பண்டிதமணி அவர்தம் தெளிந்த வடமொழி, தமிழ்ப் புலமையும் சைவநெறி பற்றிய தளரா உணர்வும் பழகும் நல்ல பண்பும் எடுப்பான தோற்றப் பொலிவும் என்னால் என்றும் மறக்கமுடியாதவை.
—1981

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/010-026&oldid=1135797" இலிருந்து மீள்விக்கப்பட்டது