ஓங்குக உலகம்/021-026

விக்கிமூலம் இலிருந்து

21. முரசுப் பாட்டு


ல்ல கவிஞன் நாட்டில் எப்போதோ ஒரு முறை பிறக்கின்றான். அவ்வாறு பிறக்கின்றவன் வையம் உள்ளளவும் வாழவும் செய்கிறான். இந்த மரபு எந்த மொழிக்கும் இயைந்த ஒன்றாகும். அந்த வகையில் தமிழில் பாட்டிசைத்த பாரதி தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கவி பாடி, என்றும் வாழும் கவிஞனாகி நிலைத்துவிட்டான். அவன் காலத்தில் நாடு அடிமைப்பட்டுக் கிடக்க, அதை உரிமை நாடாக்கப் பாரதி பாடிய கவிதைகளே பல; அதனால் விடுதலைக் கவிஞனானான். ஆனால் அவனுடைய பிற கவிதைகளே அவனை என்றும் வாழும் கவிஞனாக்கி விட்டன. அவன் தொடாத துறையில்லை; பாடாத பொருளில்லை. அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் பாடிய பல கருத்துக்கள் இன்று உரிமை நாட்டின் வாழ்விலும் செயலிலும் இடம் பெறுகின்றன. அவன் வாழ்க!

பாரதியின் கவிதைகளைத் தொகுத்தவர்கள் அதைப் பலவகைப்படுத்தினார்கள். அதில் ஒரு பகுதி நீதிப்பகுதி. மக்களின் அவல வாழ்வையும் பிற கேடுகளையும் கண்டு நைந்த உள்ளம் பலப்பல பாடல்களை இசைத்தது. அத்தகைய அவல நிலைக்கான அடிப்படை காரணங்களை ஆராய்ந்த உள்ளம், அம் மனிதன் சிறக்க வாழ வேண்டுமாயின் சில கொடுமைகளை அகற்றி, சில நல்ல நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என உணர்ந்தது. அந்த நெறிகளை விளக்குவதே நீதி-நீதிப்பகுதி. தொகுத்தவர் இந்த நீதிப்பகுதியில் ஆத்திசூடி, பாப்பா பாட்டு, முரசு என்ற மூன்றினை அடக்கி உள்ளனர். மூன்றும் எளிமையாக இளைஞரும் பிறரும் படித்து உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளமை அறிவோம். சிறு சிறு சொற்களால் அமைந்த ஆத்திசூடி, கொஞ்சும் மழலை மொழியில் பாப்பா பாட்டு, பின் சமுதாய எழுச்சி பெறத் தட்டி எழுப்பும் வகையில் முரசுப்பாட்டு. ஆம்! பண்டைத் தமிழ் மன்னர்கள் முரசறைந்து நாட்டில் அறத்தையும் பிற நிகழ்ச்சிகளையும் அறிவுறுத்திய மரபுப்படி நம் கவி அரசனும் முரசு கொண்டு, சமுதாய வாழ்வறத்தினை நமக்கு உணர்த்துகிறான். முரசின் தொடக்க நான்கு அடிகள் தனிப்பட்டன. பின்பே ஊருக்கு நல்லது சொல்லும் உபதேசம் தொடங்குகின்றது. முதல் நான்கு அடிகளிலும் இவ்வுலகை ஈன்ற அம்மை அப்பனை நினைவு கூறுமுகத்தான் அவர்தம் நிலைத்த வாழ்வினை நினைத்து அவர்கள் வாழ்த்த, மனித சமுதாயம் எல்லா வேறுபாடுகளையும் களைந்து ஒன்றிய உணர்வில் வாழ ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்ட’ முரசு முழக்க வேண்டுமெனக்காட்டித் தம் நீதியினைத் தொடங்குகின்றான் பாரதி.

இந்த முரசுப்பாட்டில் பாரதி, மனித சமுதாயம்-சிறப்பாக இந்தியச்சமுதாயம் வாழ அடிப்படையானசாதி, சமய வேறுபாடற்ற வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நீதியினை விளக்கி, அறிவை வளர்த்து, அன்பில் திளைத்து அச் சமுதாயம் வாழ வேண்டும் என்ற நீதியினையே பலப்பல வகைகளில் பலப்பல ஏதுக்கள் காட்டி எடுத்து விளக்குகிறான். புதிய ஆத்திசூடி, பாப்பா பாட்டு ஆகியவற்றில் எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்லிய பல நீதிகளை எல்லாம் தொகுத்து, இங்கே நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால், சாதியாலும் சமயத்தாலும் நடைபெறும் மாறுபாடுகளையும் போராட் டங்களையும் நீக்க வேண்டும் என வற்புறுத்துகிறான் பாரதி. இன்று (1981-82ல்) நம் நாட்டில் காணும் பல்வேறு சாதி சமயப் பூசல்கள், நாம் பாரதி வாக்கைப் பின்பற்றாத காரணத்தாலேயே நடைபெறுகின்றன என்பதை உணர வேண்டும். ஊர் நன்றாக வாழ வேண்டுமாயின் இந்தப் பூசல்கள் வேண்டாம் என்பதை விளக்கத் தான் முதலாவதாக ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற முன்னுரையோடு தன் நீதிநெறியைச் சொல்லத் தொடங்குகிறான்.

முதலாவதாக ஊர் நன்றாகச் சிறக்க வேண்டுமானால் தெய்வ வழிபாடு இன்றியமையாத ஒன்று என்பதையே, தொடக்கத்தில் நெற்றி ஒன்றைக் கண்ணனையும் அவன் தன் நித்த சக்தியையும் வாழ்த்துவதன் மூலம் காட்டி விட்டான். ஆம்! ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஒளவைப்பாட்டியின் அறநெறி யன்றோ! ஆயினும் அந்தக் கோயில் இறை வழிபாடு-வெறும் கல்லாலும் மரத்தாலும் ஆகிய கோயிலாக அல்லாது, உள்ளத் தூய்மையோடு வேறுபாடற்ற சமுதாய உணர்வோடு ஆக்கப்பெற்ற கோயிலாக அமையவேண்டும் என்ப்தைத்தான் பாரதி அடுத்த அடிகளில் விளக்கிக் கொண்டு போகிறான்.

முதலில் மக்களிடையில் சாதி வெறியும் வேறுபாடும் தாண்டவமாடுவதைக் கண்டு கண்டிக்கிறான். சமுதாய நலனுக்காக-வேலைகளைப் பிரித்துக்கொண்டு வாழ்வதற்காக அமைத்துக்கொண்ட நால்வகைப் பிரிவுகள், எப்படி விஸ்வரூபமெடுத்து, சாதிகளாகி, தீண்டா நிலையில் சிலரைத் தள்ளிவைத்து, ஒருவனை ஒருவன் தொடவும் கூசி ஒதுங்கும் வகையில் நாட்டை நாசப்படுத்தும் நிலையினை எண்ணி நடுங்கும் அவன் உள்ளத்திலிருந்து இந்த அடிகள் வருகின்றன.


‘நாலு வகுப்பும் இங்கொன்றே—இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிட சாதி!

ஆம்! பாரதி காண்பது ஒரே சாதி-மானிட சாதிதான். இந்த வேறுபாடுகளால் அந்தமானிட சாதியே அடியோடு அழியும் என்று எச்சரிக்கை செய்கிறான் அவன்.

இந்த வேறுபாடு எப்படி நீங்கும் என்பதற்கு ஒரு குடும்பத்தையே உதாரணமாகக் காட்டுகின்றான். தந்தை, தாய், மகன், மகள் ஆகியோர் பலப்பல வகைகளில் பணிகள் இயற்றினாலும் ஒரே குடும்பமாக வாழ்வது போன்று, உலகக் குடும்பமும்-பாரத சமுதாயம் பல்வேறு பணிகளைப் பகுத்துச் செய்துகொண்டே ஒரே குடும்பமாக வாழ வேண்டும் எனச் சுட்டுகிறான். குடும்பத்தைப் பற்றி நினைக்கும்போது, அதன் தலைவி-மனைவி-அவள் முன் நிற்கிறாள். பல குடும்பங்களில் பெண்கள் இழிவாக நடத்தப்படுவதை எண்ணி, அதனாலும் சமுதாயம் சீரழியும் எனச் சுட்டுகிறான். ஆணும் பெண்ணும் இரு கண்களைப் போன்றவர்கள் என்று உவமை வாயிலாகக் காட்டி, அவர்கள் இருவரும் ‘கண் இரண்டும் ஒன்றையே காண்’ என்றபடி இயைந்து வாழவே வையம் தழைக்கும் எனச் சொல்லுகிறான். இறைவன் படைப்பில் இருவருக்கும் வேறுபாடு இல்லை. என்றாலும் மனிதன் வேறுபாடுகள் கற்பித்து மாதர் அறிவைக் கெடுத்ததை,

‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்—உயிர்
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்—நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்’

எனச் சுட்டி, புவி நன்கு பேணப் பெற வேண்டுமானால் இருவரும் ஏற்றத் தாழ்வு இன்றி வாழவேண்டும் என்ற நீதியினை—நியதியினைச் சுட்டுகிறான்.

அடுத்து, சமயத்தால் வரும் மாறாட்டங்களும் போராட்டங்களும் அவன் கண் முன்பு வருகின்றன. நீதி புகட்டத் தொடங்குகிறான். ‘தெய்வம் பலப்பலசொல்லிப் பகை தீயை வளர்ப்பவர் மூடர்’ என்றே சாடுகிறான். எங்கும் நிறைந்த இறைவன் ஒருவனே என்ற உணர்வு அரும்பாத காரணத்தால்தானே இன்று நாட்டில் மீனாட்சிபுரம், ‘மண்டைக்காடு’ காட்சிகள் நம் கண்முன் தெரிகின்றன. இதுபோன்ற கொடுமைகள் நிகழக் கூடாதென்பதற்காகவே பாரதி இதை நீதியாகவே காட்டி அமைத்தான். ஆயினும் நாம் அதைப் படித்துக் கொண்டே—பேசிக் கொண்டே, பக்கத்திலேயே சமயப் போராட்டங்களைத் தீவிரமாக்கிக் கொண்டே வருகிறோம்.

இந்த உண்மையினை விளக்குவதற்கும் பாரதி ஓர் எளிய உண்மையினையே கையாளுகின்றான். வீட்டில் உள்ள பூனை பல குட்டிகள் போடுகின்றது. ஒன்று வெள்ளை, ஒன்று கறுப்பு, ஒன்று சாம்பல், ஒன்று பாம்பு நிறம். இந்த வேறுபாட்டால் அவை மாறுபட்டுப் போர் விளைப்பதைப் பார்த்திருக்கிறோமா! மேலும் அவற்றுள் ஒரு நிறம் உயர்ந்தது, ஒரு நிறம் தாழ்ந்தது என்ற வேறுபாடுகளைத்தாம் அவை கற்பித்துக் கொள்ளுகின்றனவா? இல்லையே!

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்–அதில்
மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்மைகள் எல்லாம்—இங்கு
யாவர்க்கும் ஓன்றெனக் காணிர்!

என்பது பாரதி வாக்கு.


இந்த வாழ்வின் அடிப்படையான சாதி வேறுபாடற்ற, சமய வேறுபாடற்ற மெய்ந்நெறி வாழ்க்கையினை விளக்கவே இந்த ‘முரசு’ கொட்டி அறிவிக்கும் நீதியினை அவன் தொட்டான். இனி, மறுபடியும் முரசினை முழக்குகிறான் பாரதி. முழக்கி, இந்த வேறுபாடற்ற வாழ்க்கைக்கு அடிப்படையான அன்பினையும், நம்பிக்கையினையும், அஞ்சாமையினையும் அறிவையும் தொட்டுக் காட்டி முரச முழக்கத்தை முடிக்கின்றான்.

அன்பு வாழ்வின் அடிப்படை. எனவே ‘அன்பென்று கொட்டு முரசே’ என்கிறான் பாரதி. அதில் ஆக்கம் உண்டு, இன்பம் உண்டு, துன்பம் இல்லை; சூது பிழைகள் இல்லை என எக்காளமிடுகிறான். இந்த வாழ்வின் அடிப்படை இல்லாமையால்தான் எத்தனையோ பிழைகளை வளர்த்துக் கொண்டு மனித சமுதாயம் வாடி வற்றல் மரமாகி நிற்கிறது. பாரதிக்கு மறுபடியும் இறையுணர்வு மேலிடுகிறது. மனிதன் யாவும் தன்னால் ஆகின்றது என்ற தருக்கில் அல்லவா இத்தகைய வேறுபாட்டுக் கொடுமைகளையும் பிற் தீமைகளையும் புரிகின்றான். இவன் இறைவுணர்வு பெற்றால், ‘எல்லாம் அவன் செயல்’ என்ற நினைப்பில் தன்முனைப்பு அகலு மன்றோ! அதன் வழி தன் இனத்தான்—பிற இனத்தான் என்ற பேதம் போகுமன்றோ!

மேலும் பாரதி எல்லாரும் எல்லாச் செல்வமும் பெறின் பல சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அகலும் என்ற உண்மையினை உணர்ந்தவன். எனவே உணவை முதற்படுத்தி அது எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்ற குறிப்பில்,

‘வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்—இங்கு
வாழும் மனிதர் எல்லார்க்கும்

என்று கூறி, பின்னும்,

‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்—இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்,

என்ற உணர்வையும் வற்புறுத்தி முரசுவழி முழங்கும் நீதியினை முழக்குகிறான். இடையில் இவற்றுடன் அஞ்சாமை, அறிவு, கல்வி ஆகியவையும் சமுதாயம் உயர்ந்திடத் தேவையானவை என்பதையும் அவன் விளக்கத் தவறவில்லை. மேலும் திடங்கொண்டார் மெலிந்தோரை தின்று பிழைப்பதும், தம்பி மெலிவானால் அண்ணன் அவனை அடிமை கொள்வதும் சமுதாய நல்வாழ்வுக்குப் புறம்பானவை என்பதைச் சுட்டுகிறான். இன்று நாட்டில் இத்தகைய கொடுமைகள் நடப்பதையும் வழக்கு மன்றங்களில் இவற்றின் அடிப்படையில் எண்ணற்ற வழக்குகள் உள்ள நிலையினையும் நாம் நன்கு அறிவோம்.

‘சிற்றடிமை’ என்ற சொல்லைப் பாரதி பயன் தெரிந்து கையாளுகிறான். இன்றைய உலகில் காசு இருந்தால் வீசி எதையும் சாதிக்கலாம் என்ற நிலையினைப் பலரும் பேசுகின்றனர்; காண்கின்றனர்; அனுபவிக்கின்றனர். அன்றி, ஆட்சி பலம் இருந்தாலும் எதையும் செய்யலாம் என்ற நிலையும் உலகில் உள்ளதை அறிவோம். இந்த இரண்டு அவல நிலைகளும் மக்கள் வாழ்விலிருந்து நீக்கப்படவேண்டும் என வற்புறுத்துகிறான் பாரதி. இல்லையானால் அவற்றால் ஈர்க்கப்பட்டவன் ‘அடிமை’ அல்லன், ‘சிற்றடிமை’ யாவன் என்கிறார். அடிமையே சிறுமையைக் குறிக்கும்; சிறுமை என்னும் அடையைச் சேர்த்து, அந்தக் கேவலத்தை இன்னும் கேவலமாக்குகின்றான் பாரதி. அந்தக் காசுக்கும் அரசுக்கும் அஞ்சாது தலை நிமிர்ந்து ‘யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்’ என்ற அப்பரடிகள்தம் வாக்கின் வழியே அஞ்சாமை மேல் கொண்டு வாழ வேண்டும் என்கின்றான் அவன்.

‘செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி—மக்கள்
சிற்றடிமைப் படலாமோ’

என்பது அவன் வாக்கு.

செம்பு என்பது காசு—பணம்—லஞ்சம் என்பதைக் குறிக்கும், கொம்பு என்பது ஆட்சியினைக் குறிக்கும்.

ஆம். இத்தகைய அஞ்சாமையும் தெய்வ உணர்வும் பெறின், கல்வியும் நல்ல நிலையில் நாட்டில் மலரும். யாரும் யாவும் விடுதலை பெறும்நிலை உண்டாகும். கல்வியின் வழியே அறிவு பெருகும். அந்த ‘எனைத் தாலும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தாலும் மாணா செய்யாத அறிவு மலரின், ‘யாருக்கும் தீமை செய்யாது புவியெங்கும் விடுதலை பெறும்’ என்று காட்டுகின்றான் பாரதி. ‘இப்படி மனித சமுதாயம் இயங்கினால் சிறியார் உயர்வார்; உயர்ந்தார், தெய்வத்தால் உயர்த்தப் பெறுவார். எங்கும் ஏற்றத்தாழ்வு அற்ற சகோதரத் தன்மை காட்டும் சம தர்மச் சமுதாயம் பாருக்குள்ளே முகிழ்க்கும்’ என்று கூறி இந்த ஒருமை உணர்வினையே தன் இறுதி அடிகளாக ஆக்கித் தருகின்றான் பாரதி.

‘ஒன்றென்று கொட்டு முரசே—அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசே—இந்த
நானில மாந்தருக் கெல்லாம்’

என்பனவே அந்த முரசின் இறுதி அடிகள். தெய்வம் வாழ்ந்ததாக அமைந்த ஒன்று நீங்க, மற்றுள்ள முப்பத்தொரு கண்ணிகளிலும் பாரதி நீதியாக காட்ட நினைத்தது எந்த வேறுபாடும் அற்ற, எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்றுள்ள, அஞ்சாமை, அறிவு, அன்பு, கல்வி யாவும் பெற்ற, தெய்வ உணர்வு பொருந்திய நல்லதொரு சமுதாயத்தைத்தான். ஆயினும் அவன் மறைந்து அறுபது ஆண்டும் கழித்தும் அவன் கண்ட கனவு நனவாகவில்லை. இதோ அவன் பிறந்த நூறாவது பிறந்த நாள் விழாவும் நாம் இன்று கொண்டாடுகிேறாம், அவனுடைய சொல்லை நாம் செயலில் கொண்டு வாழ்வதே உண்மை விழாவாகும். இதை உணர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவின் அடிப்படையிலாவது மனித சமுதாயம் வேறுபாடற்று, விடுதலையுற்று, தெய்வநெறி பற்றி அன்பும் அறனும் அறிவும் திறனும் பெற்றுச் சிறக்க வாழுமா என்ற எண்ணச் சிதறல்களோடு விடை பெறுகின்றேன்.

—அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாரதி மலர்-1982

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/021-026&oldid=1135847" இலிருந்து மீள்விக்கப்பட்டது