கச்சத் தீவு
கச்சத் தீவு
ஆசிரியர்
முனைவர் புலவர். செ. இராசு
தலைவர், கல்வெட்டியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
வெளியீடு
கொங்கு ஆய்வு மையம்
பி-4, பல்கலைக்கழகக் குடியிருப்பு
தஞ்சாவூர் - 613005.
இந்நூலின் பகுதியையோ, கருத்துக்களையோ எவ்வழியிலும் விரும்பியோர் கையாளலாம் ; மறுபதிப்புச் செய்யலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.
இந்நூல், நாட்டுப் பற்றாளர்; பழம்பொருள் ஆர்வலர்; நாணயத் தொகுப்பாளர்; புத்தக நண்பர்; நாமக்கல் உரவணிகர் திரு.என்.பி. இராமசாமி அவர்களின் கல்வெட்டில் பொறிக்கத்தக்க நன்கொடையால் வெளியிடப்படுகிறது.
நூல் கிடைக்குமிடம்
கௌரி ராசு
கொங்கு ஆய்வு மையம்
பி-4, பல்கலைக்கழகக் குடியிருப்பு,
தஞ்சாவூர்-613 005.
விலை: ரூ.20/-
அச்சிட்டோர்: சோழன் ஆப்செட் பிரிண்டர்ஸ்,
ஈரோடு
பூ. அர. குப்புசாமி
வழக்கறிஞர்
கரூர்.
இந்நூல் ஆசிரியர் முனைவர் புலவர் செ.இராசு அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த ஒரு வரலாற்று ஆய்வாளர். அவர் தன்னகத்தே பலதுறை ஆற்றலையும் வைத்துள்ளார். சமூகஇயல், சமூகமானிட இயல், வாழ்வியல், கல்வெட்டுத்துறை, சுவடிகள் சேகரிப்பு, ஆவணச் சேகரிப்பு, அவைகளை மெய்வருந்தி ஒழுங்குபடுத்தி வெளியிடல், கள ஆய்வு இப்படி எத்தனையோ சிறப்பியல்புகளைக் கொண்டவரவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டியல்துறைத் தலைவராக உள்ள அவர் இன்னும் பல துறைகளுக்குத் தலைமை தாங்கும் திறமை பெற்றவர்.
கச்சத்தீவுப் பிரச்சனையைப் பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருப்பர். அது இந்தியாவிற்கு தமிழகத்திற்கு - மட்டுமே சொந்தம் என்பதையும் பலர் அறிந்திருப்பர். ஆனால், அது எப்படி நமக்குச் சொந்தம், அதைச் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தாரை வார்த்தது எவ்வளவு அக்கிரமமானது, தமிழகத்திற்கு முற்றிலும் விரோதமானது என்பதையெல்லாம் குறித்து ஏராளமான தமிழர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்நூல் ஆசிரியர் கச்சத்தீவு பற்றிய அனைத்துத் தகவல்களையும் அரும்பாடுபட்டுச் சேகரித்துள்ளார். கள ஆய்வு செய்துள்ளார். ஆபத்துக்களிடையே பிரயாணம் மேற்கொண்டுள்ளார். அதற்குமேலும் சென்று கச்சத்தீவை மீட்கும் பணியில் தன்னாலான செயல்களையும் செய்துள்ளார். மேற்கொண்டு அதைத் தொடர தக்க துணை இல்லையே என தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நடுவண் அரசு தமிழ்நாட்டிற்குச் செய்த பெரும் கேடு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது ஆகும். இலங்கை சிங்கள இனவெறி, பௌத்தமத வெறி அரசை இந்திய அரசு ஆதரிப்பதால் கொழும்பு அரசு அங்குள்ள தமிழர்களை அடக்கி உரிமைகளைப் செய்கிறது. பறித்து, ஊரைவிட்டு ஓடச்செய்யும் கொடுமைகளைச் செய்கிறது. முப்பது லட்சம் தமிழர்களில் சில இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர்காக்க வெளிநாடு சென்றுவிட்டனர். மீதமுள்ள தமிழர்கள் மீதும் முப்படைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் எல்லையை மாற்றியமைத்தல், அதன் ஒரு பகுதியை வேற்று மாநிலத்திற்குத் தரல் முதலிய உரிமைகளை மத்திய அரசுக்குத் தரப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட ஷரத்துக்கள் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் வழங்குகின்றன.
அப்படி மாற்றங்கள் செய்யும் போது அல்லது ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை மற்றொரு மாநிலத்திற்கு அளிக்கும்போது அந்த மாநிலத்தின் கருத்தை மத்திய அரசு கேட்கலாம். ஆனால், அதற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகவே கூறுகிறது.
கச்சத்தீவு விஷயத்தில் தமிழ்நாடு ஒற்றுமையாக இருந்து மத்திய அரசை எதிர்த்துப் போராடி இருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அன்றுமுதல் இன்றுவரை இங்குதான் ஒற்றுமை என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதே!
நேரு அவர்கள் பெருபாரி பகுதியை வங்காள தேசத்திற்கு மாற்றிக் கொடுத்தபோது எந்தப் பேதமுமின்றி வங்காளம் கொதித்தெழுந்தது. மேற்கு வங்காள முதல்வர் பி.சி. ராய் அவர்களை தன்னை வந்து சந்திக்கும்படி நேரு கேட்டுக்கொண்டார். அவர் வர முடியாது என மறுத்து விட்டார். பிறகு பல தூதர்கள் மூலம் அவரைச் சமாதானப்படுத்தி அந்தப் பிரதேசத்திற்கு விலையாக மத்திய அரசு மேற்கு வங்க அரசுக்கு .ரூ.3 கோடி நட்ட ஈடு கொடுத்தது.
ஆனால், அய்யகோ! தமிழகத்தின் பிரதேச உரிமைகள், நீர் உரிமைகள் மற்றும் பிற எத்தனையோ உரிமைகள் எல்லாம் தொடர்ந்து தட்டிப் பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்போதுகூட இன்றைக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விரோதம் காட்டுவது சாதிப் பிணக்குகள் அதிகமாவது காரணமாக நடுவண் அரசு தொடர்ந்து தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் துயர நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. எத்தனையோ மாநிலங்களில், கட்சிச்சண்டை, சாதிச்சண்டை போன்றவை இருந்தாலும் அந்த மாநில உரிமைகாக்க அவர்கள் ஒற்றுமையாக, குறிப்பாகக் கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசை எதிர்த்து ஒற்றுமைக்குரல் கொடுப்பதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தினர் தங்கள் மாநில வளப்பங்களைக் கட்டிக் காப்பதும், உரிமைகளை விட்டுக் கொடாமல் போராடுவதுமாக இருந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் படுபலவீனமான இச் சூழ்நிலை காரணமாகத்தான் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளே இருக்கின்ற மங்கலாதேவி ஆலயம் என்று அழைக்கப்படுகின்ற கண்ணகி கோட்டத்தைக் கேரள அரசு ஆக்கிரமித்துக் கொண்டு சித்திரா பவுர்ணமி விழாவிற்கு அங்கு செல்லும் தமிழர்களைத் துன்புறுத்துகிறார்கள். ஆனால், அவ்விடம் முற்றிலும் தமிழக எல்லைக்குள்தான் இருக்கிறது என்பதற்குரிய அனைத்து ஆவணங்கள் கொண்ட கோப்புகள் தமிழகத் தலைமையகத்திலேயே இருக்கின்றன. ஆனால், என்ன பயன்?
தமிழகத்தில் கட்சிகளுக்குப் பஞ்சமில்லை; தலைவர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், நாளும், நாளும் பறிபோய்க் கொண்டிருக்கின்ற தமிழக உரிமைகளைக் காப்பதற்கான முயற்சிகளுக்குத்தான் பஞ்சம்!
இந்த வகையில் தமிழக உரிமைகளில் ஒன்றான கச்சத்தீவைப் பற்றிய இந்நூலைப் படிக்கும் தமிழர்களிடையே இழக்கப்படும் தமிழர்கள் உரிமையை மீட்கவேண்டும் என்ற உணர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமையும்; அமையவேண்டும். என்று விரும்புகிறேன்.
‘வாராது போல வந்த’ தமிழர்தம் மொழி, இன, நாட்டு உணர்வுகளையும், அமைப்புகளையும் போற்றி வளர்த்து, தமிழக உரிமைகள் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலாவது மீட்கப்படுமாக! அத்தகைய பெரும் பயணத்தின் தொடக்க முயற்சிகளில் ஒன்றாக இந்நூல் அமைகிறது என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் முனைவர் புலவர் செ. இராசுவிற்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
கச்சத்தீவு நாளிதழ்களில் அடிக்கடி காணக்கூடிய சொல. அரசியல். தலைவர்கள் பலர் தொடர்ந்து விவாதிக்கும் பிரச்சனைக்குரிய பெயர். தாய்த் தமிழ்நாட்டின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி. தமிழ் மண்ணான கச்சத்தீவை இலங்கைக்கு அளித்து 23ஆண்டுகள் ஓடிவிட்டன.
சேதுபதி அரசர்கட்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு அளித்ததால் தமிழகக் கிழக்குக் கடற்கரை மீனவர்கள் வாழ்வில் இடி விழுந்தது. தமிழ் மீனவர்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லை. இலங்கைக் கடற்படையின் வெறித்தனத்தால் நாளும் நாளும் நமது மீனவர்கள் தொல்லைகள் பல உற்று வருகின்றனர். தமிழக வேண்டுகோளுக்கு உரிய மரியாதையை மைய அரசு கொடுப்பதில்லை.
இலங்கைக் கடற்படையினரின் அடாவடித் தனத்தை இலங்கை அரசு அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் தமிழகக் கடல் எல்லைக்குள் வரும் இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் குண்டு ஒன்று கூடப் பாய்வதில்லை. உரிய மரியாதையுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
எதிர்காலத்தில் இந்தியப் பாதுகாப்பிற்குப் பேராபத்து கச்சத்தீவின் வழியாக வரலாம். எனவே, கச்சத்தீவு பற்றி இலங்கையுடன் செய்து கொண்ட 1974, 1976 ஒப்பந்தங்களை இரத்து செய்து கச்சத்தீவை இந்திய அரசு தன் உரிமையாக்கிக் கொள்வது மிகமிக அவசியம்.
இவ்வகையில் இந்திய அரசைத் தூண்ட தமிழகம் தயாராக வேண்டும். கச்சத்தீவு தமிழக மண்ணுக்குரியது; இந்தியாவின் ஒரு பகுதி, ஒருநாளும் அது இலங்கைக்கு உரியதாக இல்லை என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
நண்பர் செம்பியன் அவர்கள் கச்சத்தீவு பற்றி எழுதிய நூல் இரண்டு பதிப்புக்களைப் பெற்றது. அவருடைய பல கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவருக்கு என் நன்றி.
1974இல் ஈரோட்டில் கச்சத்தீவுக் கருத்தரங்கம் நடத்திய நாளிலிருந்து இந்நூல் வெளியிடவேண்டும் என்ற அவா நண்பர் கரூர் வழக்கறிஞர் திரு.பூ. அர. குப்புசாமி அவர்கள் தூண்டுதலாலும், நாமக்கல் நண்பர் திரு. என். பி. இராமசாமி அவர்கள் கொடையாலும் இப்போது வெளிவருகிறது.
கச்சத்தீவு பற்றித் தமிழக முதல்வர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் அண்மையில் சில நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என மீனவர் தொடர்பாக அவர் பேசிய உரை ஆறுதல் அளிக்கிறது.
கச்சத்தீவை மீட்கும் நல் முயற்சியில் தமிழக மக்களைத் தூண்ட ஒரு தூண்டுகோலாக இந்நூல் அமையும் என்பது என் எண்ணம்.
இந்நூல் உருவாக்கத்திற்கு உதவிய ஈரோடு சோழன் அச்சகத்தினருக்கு என் நன்றி.
தஞ்சாவூர் அன்பன்
7-2-97 செ. இராசு