கடக்கிட்டி முடக்கிட்டி/கடக்கிட்டி முடக்கிட்டி
வயதான கிழவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அவனுக்கு உதவி செய்பவர்கள் யாருமே இல்லை. அதனால் அவன் தானே பாடுபட்டுப் பணம் சம்பாதித்தால்தான் பிழைக்க முடியும்.
அவன் ஒரு அடர்ந்த காட்டுக்குப் பக்கத்தில் சிறிய குடிசை ஒன்று போட்டுக்கொண்டான். அந்தக் காட்டில் நாள் தோறும் விறகு ஒடித்து வருவான். பிறகு அதைச் சுமையாகக் கட்டுவான். பக்கத்தில் இருந்த ஒரு பட்டணத்தில் அதை விற்று, அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வயிறு வளர்த்து வந்தான்.ஆனால், விறகுச் சுமையைத் தலையில் வைத்துக் கிழவனால் சுமந்து செல்ல முடியுமா ? அதற்காக அவன் ஒரு கழுதையை வளர்த்து வந்தான். அந்தக் கழுதையின் மேல் விறகுக் கட்டை வைத்துப் பட்டணத்திற்கு ஓட்டிச் செல்லுவான். விறகு விற்று வரும் பணத்தைக் கொண்டு சமையலுக்கு வேண்டிய அரிசி பருப்பு முதலியவற்றை வாங்கி வருவான். இப்படி அவன் வாழ்நாள் கழிந்து கொண்டிருந்தது.
இளம் வயதிலிருந்தே அந்தக் கழுதை விறகைச் சுமந்து சென்றதால் அதன் பின் கால்கள் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உன் பக்கம் வளைந்து விட்டன. அதனால் அந்தக் கழுதை நடக்கும்போது பின்கால்கள் ஒன்றோ டொன்று இடித்துக் கொள்ளும். அப்படி இடித் துக்கொள்ளும்போது “கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி” என்று சத்தம் கேட்கும். கழுதை விரைவாக ஓடும்போது இந்தச் சத்தம் மேலும் அதிகமாகக் கேட்கும். அதனால் அந்தக் கழுதைக்குக் கிழவன் ‘கடக்கிட்டி முடக்கிட்டி’ என்றே செல்லமாகப் பெயர் வைத்துவிட்டான்.
பட்டணத்திலிருந்து மாலை நேரத்தில் திரும்பிய பிறகு கிழவன் சமையல் செய்யத் தொடங்குவான். அதற்காக அரிசியையும் பருப்பையும் தண்ணீரில் தனித்தனியாகப் போட்டு அரித்து உலையில் இடுவான். அப்படிச் செய்வதால் கிடைக்கும் கழுநீரைத் தன் கழுதைக்கு வைப்பான். கழுதையும் ஆவலோடு அதைக் குடித்துவிட்டுக் குடிசைக்குப் பக்கமாக வெளியே புல் மேயச் செல்லும். நன்றாக இருட்டும் வரையில் அது மேய்ந்து விட்டுக் குடிசைக்கு வந்துவிடும்.
குடிசைக்குப் பக்கத்தில் உள்ள காட்டிலே புலிகள் இருந்தன. அவற்றால் இந்தக் கழுதைக்கு ஏதாவது தீங்கு நேராமல் இருப்பதற்காகக் கிழவன் ஒரு தந்திரம் செய்தான். நல்ல செம்மண்ணாகப் பார்த்துக் கொண்டு வந்து தண்ணீரில் கரைத்தான். அதைக் கழுதையின் கால்களை விட்டுவிட்டு உடம்பு முழுவதும் நன்றாகப் பூசினான். பச்சைத் தழையைக் கசக்கிக் கழுதையின் கால்களுக்கும் முகத்திற்கும் பசேலென்று சாயம் தீட்டினான். இவ்வாறு செய்த பிறகு பார்த்தால் கழுதையின் உருவமே அடையாளம் தெரியாமல் மாறி விட்டது. ஏதோ ஒரு விநோதமான விலங்கு போல் அது காட்சி அளித்தது. சாயம் கொஞ்சம் மங்கும்போது மறுபடியும் அடித்து விடுவான்.
இவ்வாறு செய்தபிறகுதான் பயமில்லாமல் கழுதையை மேயவிட்டான். இருந்தாலும் கழுதை காட்டிற்குள் அதிகத்தூரம் செல்லாமலும், அதிக நேரம் இருட்டிலே வெளியில் இராமல் குடிசைக்கு வருமாறும் அவன் பழக்கி இருந்தான்.
இவ்வாறு கழுதைக்கு எவ்விதத் தீங்கும் வராமல் காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாள் கழுதைக்குக் காட்டிற்குள்ளே கொஞ்சம் நுழைந்தால் பசும்புல் நிறையக் கிடைக்கும் என்று தோன்றியது. விரைவில் குடிசைக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டு காட்டில் உள்ளே புகுந்து மேயத் தொடங்கிற்று. உள்ளே போகப்போகப் பசும்புல் நிறைய வளர்ந்திருப்பதைப் பார்த்து, அதை மேய வேண்டும் என்ற ஆசையால் அது அதிகத் தூரம் சென்று விட்டது. திடீரென்று சூரியன் மறைந்து நன்றாக இருட்டும் கட்டத் தொடங்கிவிட்டது.
அந்த வேளையிலே ஒரு புலி எதிரே வந்தது. புல்லை மேயவேண்டும் என்ற பேராசையால் உயிருக்கே ஆபத்து வரும் போலிருந்தது. இருந்தாலும் நடந்து போனதை எண்ணி வருத்தப்படுவதில் பயனில்லை என்று அதற்குப் பட்டது. அதனால் கடக்கிட்டி முடக்கிட்டி தைரியத்தை இழக்காமல் புலியிடமிருந்து தப்பவேண்டும் என்று எண்ணமிட்டுக்கொண் டிருந்தது.
புலி பலமுள்ளதாக இருந்தாலும் இயற்கையாகவே சந்தேகமுள்ள மிருகம். இந்தச் சந்தேகமும் கடக்கிட்டி முடக்கிட்டிக்கு உதவியாக அமைந்தது.
எதிரே வந்த புலி கடக்கிட்டி முடக்கிட்டியின்மேல் உடனே பாய்ந்து கொல்ல முயற்சி செய்யவில்லை. ‘நான் பார்த்துள்ள விலங்குகள் போல் இது இல்லையே! இது ஏதோ புது மாதிரியான விலங்குபோல் இருக்கிறதே! இதன் பெயர் என்னவாக இருக்கும்? இதன் மேல் பாய்ந்தால் ஒருவேளை ஆபத்தாக முடியுமோ?’ என்று புலி யோசித்தது. எதற்கும் அருகே சென்று பேசிப் பார்ப்போம் என்று அது மெதுவாக நகர்ந்து வந்தது. சிவப்புச் சாயமும் பச்சைச் சாயமும் கடக்கிட்டி முடக்கிட்டியைப் புதியதோர் விலங்காகச் செய்திருந்தன. சற்று அருகில் வந்ததும், “உன் பெயர் என்ன?” என்று புலி தயக்கத்தோடு கழுதையிடம் கேட்டது.
“கடக்கிட்டி முடக்கிட்டி” என்று தைரியமாகக் கழுதை பதில் சொல்லிற்று.
பெயரைக் கேட்டதும் புலிக்கு மேலும் சந்தேகம் வந்துவிட்டது. ‘இந்த மாதிரிப் பெயரை நான் கேட்டதே இல்லையே! மான், மாடு என்று இவ்வாறு பல மிருகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடக்கிட்டி முடக்கிட்டி என்று கேள்விப்பட்டதே இல்லையே! இருந்தாலும் நன்கு விசாரிப்போம்’ என்று புலி தனக்குள் தீர்மானம் செய்தது.
“உனக்கு அண்ணன் தம்பிகள் உண்டா?”
இரண்டு பேர் அண்ணன் உண்டு. மூத்தவன் ‘சடக்கிட்டி முடக்கிட்டி’ ; இரண்டாவது அண்ணன் பெயர் மடக்கிட்டி முடக்கிட்டி'. எனக்குத் தம்பி இல்லை" என்று கடக்கிட்டி முடக்கிட்டி பதில் சொல்லிற்று.இந்தப் பெயர்களைக் கேட்டதும் புலிக்கு மேலும் சந்தேகம் அதிகமாகிவிட்டது. “பெயரெல்லாம் விநோதமாக இருக்கிறதே!” என்று தாழ்ந்த குரலில் புலி கேட்டது.
“ஆமாம், மூத்த அண்ணன் புலியின் கழுத்தைச் ‘சடக்’கென்று கடித்துக் கொல்வான். அதனால் அவன் சடக்கிட்டி முடக்கிட்டி. இரண்டாவது அண்ணன், புலியின் முதுகு எலும்பை ‘மடக்’ என்று கடிப்பான். அதனால் அவன் பெயர் மடக்கிட்டி முடக்கிட்டி. நான் ‘கடக்’ என்று கடிப்பேன். அதனால் நான் கடக்கிட்டி முடக்கிட்டி” என்றது கழுதை.
“அது சரி. எல்லோருக்குமே முடக்கிட்டி என்று பொதுவாக எப்படிப் பெயர் வந்தது?"
“அதுவா? அது எங்கள் அருமையான பட்டப்பெயர்” என்று கழுதை தலையை நிமிர்த்திக்கொண்டு சொல்லிற்று.
“யார் அப்படிப் பட்டம் கொடுத்தார்கள்?”
“நம் சிங்க ராஜாதான் கொடுத்தார். வேறு யார் கொடுப்பார்கள்?”
“எதற்காக அப்படிப் பட்டம் கொடுத் தார்?”
“எல்லாம் எங்கள் வீரச்செயலைப்பற்றி அறிந்து தான் கொடுத்தார். மூத்த அண்ணன் நூறு புலிகளைச் ‘சடக்’ என்று கடித்துக் கொன்றார். சின்ன அண்ணன் இருநூறு புலிகளை ‘மடக்’ என்று கடித்தெறிந்தார். நான் அவர்களையெல்லாம் மீற வேண்டுமென்று இதுவரை இரு நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது புலிகளை ‘கடக்’ என்று கடித்துக் கொன்றிருக்கிறேன். இன்னும் முந்நூறு ஆகவில்லை. நல்ல வேளை, இப்பொழுது நீ வந்து அகப்பட்டிருக்கிறாய். உன்னையும் ‘கடக்’ என்று கடித்துக் கொன்று விட்டால் சரியாக முந்நூறு ஆகிவிடும்" என்று கடக்கிட்டி முடக்கிட்டி தனது வாயைத் திறந்து பல்லைக் காட்டிற்று.
புலி பயந்து ஓடியே போய்விட்டது. கழுதையின் பல்லையெல்லாம் பார்க்க அது நிற்கவே இல்லை. தப்பினால் போதும் என்று ஓடிவிட்டது.
‘பசும் புல்லின் மேலிருந்த பேராசையால் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போலிருந்தது. நல்ல வேளை, தைரியத்தை இழக்காமல் அறிவைப் பயன்படுத்தித் தப்பினேன். இனி மேல் இவ்வளவு தூரம் வரவே மாட்டேன்’ என்று எண்ணிக்கொண்டே கிழவனுடைய குடிசையை நோக்கி வேகமாகக் கழுதை நடந்தது. அப்பொழுது பின் கால்கள் ‘கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி’ என்று சத்தம் செய்வதைக் கேட்க வேண்டுமே!