கடவுள் கைவிடமாட்டார்/நெஞ்சத்தில் நிம்மதி!
எங்கு பார்த்தாலும், எப்பொழுது பார்த்தாலும், அந்த ஊர் பசுமையாகவே காட்சியளிக்கும். ஊரைச் சுற்றிலும் நஞ்சை வயல்கள். உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளி மைதானங்கள். பார்க்க அழகாக இருக்கும்.
இவ்வளவு செழிப்பான ஊருக்கு என்ன பெயர் தெரியுமா? வாழவந்தபுரம். வயல் அறுவடை செய்வதற்காக வேலைக்கு வந்தவர்கள் எல்லோரும், இங்கே தங்கிவிட்டார்கள். குடிசைகள் பலதோன்றின. குடும்பங்களும் பெருகின. வாழ வந்தவர்கள் அனைவரும் மனத்தால் ஒன்று சேர்ந்தனர். குணத்தோடு பழகினர். அது ஊராயிற்று, சீராயிற்று.
அந்த ஊரிலே பெரும் பணக்காரராக இருப்பவர், நில புலம் நிறைந்தவராக வாழ்பவர் தருமலிங்கம். வாழவந்தபுரத்திற்கு முதன் முதலில் குடியேறிய குடும்பமும் அவருடையதுதான்.
குணத்திலே தருமர் போன்றவர். கடவுள் பக்தி நிறைந்தவர். பணம் இருந்தாலும் பகட்டோ, படாடோபமோ இல்லாதவர், பிறருக்கு மரியாதை தந்து பேசுபவர். திறமைக்கு மதிப்பளிக்கும் அரிய பண்பாளர்.
அவர், அழகும் அறிவும், அன்பும் அடக்கமும் நிறைந்த தன் மனைவி மீனாட்சியுடன் வாழ்ந்து வந்தார்.
வீடு, வயல், மாடு, மனை, கைநிறைய பணம் போன்ற எல்லா செல்வ வசதிகள் அவருக்கு இருந்தாலும், வீட்டிலே தவழ்ந்து விளையாட குழந்தைச் செல்வம் இல்லாமல் வாழ்ந்தது. அவர்களிருவருக்கும் பெரிய குறையாகவும் வேதனையாகவும் இருந்தது.
எவ்வளவோ வைத்தியங்கள் செய்தாயிற்று, எத்தனையோ வைத்தியர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டுப் பார்த்தாயிற்று, போகாத கோயிலில்லை, முழுகாத குளமில்லை, மேற்கொள்ளாத நோன்பில்லை, எல்லாமே ஏமாற்றமளித்தன. இதயத்தில் வேதனை அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. அலைகடல்போல மனம் தத்தளித்துத் தடுமாறியது.
எப்பொழுது பார்த்தாலும் மீனாட்சி மிக மனக் கவலையுடனேயே வாழ்ந்து வந்தாள். தருமலிங்கத்திற்கோ, தன் மனைவிக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்றே தெரியாமல், தவித்தவாறு வாழ்ந்து வந்தார்.
மனம் வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் மீனாட்சி, அம்பிகைக் கோயிலுக்குச் சென்று, மனம் உருக வேண்டிக் கொள்வாள், கடவுளின் சன்னிதானத்திலே தன் குறையைக் கூறிக்கொள்ளும்பொழுது, கண்ணீர் பெருகிவழியும், அப்பொழுது மனம் கொஞ்சம் சாந்தியடைவது போல் தோன்றும் அதனால் அம்பிகைக் கோயிலுக்கு அடிக்கடி போகத் தொடங்கினாள் மீனாட்சி.
மனிதர்களால் தன் குறையைத் தீர்க்க முடியாது என்ற ஒரு முடிவுக்கும் வந்து விட்டாள் மீனாட்சி, கடவுள் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை ஆலமரம்போல, அவள் மனதில் பல்கிப் பரவத் தொடங்கியது.
வழக்கம் போல, அன்றும் கோயிலுக்குப் போயிருந்தாள் மீனாட்சி, அன்பினால் நெகிழ, நம்பிக்கையுடன் அம்பிகையைத் தொழுதாள்.
“தாயே! நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என்னை இவ்வாறு சோதிக்கிறாய்?
மகப்பேறு இல்லாத மலடி என்று மற்றவர்கள் ஏசுவதற்காகவா என்னைப் படைத்தாய் ? எத்தனையோ வசதியைக் கொடுத்தாய்! எல்லையில்லாத இன்பம் பெறுக என்று செல்வமான வாழ்வினை அளித்தாய் இதில் மட்டும் ஏன் குறை வைத்தாய்?”
அம்பிகையே! பழியோடு என்னை வாழவைக்காதே! உன் பாதார விந்தங்களில் என்னை எடுத்துக் கொள்வதானால் கூட, நான் நிம்மதியாக வருவேன். என் கணவன் மனங்குளிர, எங்கள் பெயர் சொல்ல, ஒரு குழந்தையைக் கொடு தாயே!
தாயே! எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால், உனக்கு வைரத்தோடு செய்து போட்டு, வான வேடிக்கையுடன், இதுவரை இந்த வட்டாரத்திலேயே இல்லாத அளவுக்குப் பெரிய விழாவே எடுக்கிறேன்!
என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, என் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். என்னை வருத்துகின்ற குறையைப் போக்க வேண்டும். உன்னைத் தவிர, நான் யாரிடம் போய் முறையிடுவேன்!”
மீனாட்சியின் கண்கள் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தன. கைகள் இரண்டும் குவிந்து தொழுது கொண்டிருந்தன. நின்ற நிலையிலே மெய்மறந்து, பிரார்த்தனை செய்த மீனாட்சி, அன்புக்கு ஏங்கிய குழந்தை ஒன்று தன் அன்னையின் முகத்தையே பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்பிகை தன்னையே பார்ப்பது போலவும், தன்னைப் பார்த்தே புன்னகை செய்வது போலவும் மீனாட்சிக்குத் தோன்றியது, தான் தேவியிடம் கோரிய கோரிக்கையும் நினைவுக்கு வந்தது.
அந்த நேரத்தில் கோயில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. வெளியே நின்றவர்களில் யாரோ ஒரு பக்தர், கோயில் மணியை அடித்து வேண்டிக் கொண்டதை, தனக்கு ஏற்பட்ட நல்ல சகுனமாகவே நினைத்துக் கொண்டு மீனாட்சி வீட்டுக்குப் புறப்பட்டாள்.
மனதிலே ஒரு நிறைவு, முகத்திலே மகிழ்ச்சி, நடையிலே ஒரு புது வேகம் என்றுமில்லாத ஒரு புதிய தெம்புடன் மீனாட்சி வீட்டுக்குள் நுழைவதை, வாசலில் நின்று கொண்டிருந்த தருமலிங்கம் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவளின் அருகிலே வந்தார்.
இவ்வாறு மகிழ்ச்சியாக மீனாட்சி இருக்க வேண்டும் என்பதுதானே தருமலிங்கத்தின் ஆசை! ‘வெளியில் ஏதோ நடந்திருக்கிறது. அதனால் தான் மீனாட்சி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள்’ என்று புரிந்து கொண்டார் தருமலிங்கம், தன்னிடம் வந்து கேட்பதற்கு முன்னே, மீனாட்சி முந்திக் கொண்டாள்.
தன் கையிலிருந்த கோயில் பிரசாதத்தைக் கணவனிடம் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்து வணங்கி எழுந்தாள்.
‘என்ன விசேஷம்’ என்று கேட்பது போல, தருமலிங்கம் தனது விழிகளின் புருவங்களை மேலே உயர்த்தியவாறு நின்றார்.
கோயிலில், அம்பிகை முன்னால் தான் வேண்டிக் கொண்டதையும், கோயில் மணி அசரீரீபோல ஒலித்ததையும், நமக்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும் என்று தான் நம்புவதாயும், மினாட்சி முகம் மலரக் கூறினாள். வைரத் தோடு போட்டு அம்பிகையை அலங்கரிக்க வேண்டும் என்ற தன் ஆசையையும் ஆர்வத்துடன் கூறினாள். வைரத்தோடு என்றதும், அவர் வீட்டில் இருக்கும் வைரக்கற்கள் தான் அவருக்கு நினைவு வந்தது.
அந்த வைரக் கற்கள் அவருக்கு பரம்பரைச் சொத்தாகும். பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வரும் வைரக் கற்களினாலேயே அம்பிகைக்கு வைரத்தோடு அணிவிக்க வேண்டும் என்று அவரும் ஆசைப்பட்டார்.
‘தேவிக்கில்லாத சொத்தா! என்று மீனாட்சியைப் பார்த்து சந்தோஷத்துடன் கூறினார்.
எப்படியும், இனி ஒரு மாதத்திற்குள், நீ நினைத்தது போலவே அபாரமாக செய்து விடுகிறேன். கவலையை விரட்டி விட்டு, களிப்புடன் நீ இருக்க வேண்டும்’ என்று கணவர் கூறியதும், மீனாட்சிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. குறையெல்லாம் போனது போலவும், குழந்தை கிடைத்தது போலவும் மீனாட்சி எண்ணி மகிழ்ந்தாள். நெஞ்சத்தில் நிம்மதி அடைந்தாள்.