உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 3/087

விக்கிமூலம் இலிருந்து

83  பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை !
பிறந்துவிட்ட உரிமையெண்ணம் சாவதில்லை!


பேச்சுரையால் தமிழீழம்
பிறப்ப தில்லை!
பிறந்துவிட்ட உரிமையெண்ணம்
சாவ தில்லை!
மூச்செல்லாம் விடுதலைக்கே!
முயற்சி யாவும்
முழுவுரிமை பெறுவதற்கே!
முனைந்தோர் கையின்
வீச்செல்லாம் பகைப்புலத்தை
வீழ்த்து தற்கே!
வினையெல்லாம் தமிழீழம்
சமைப்ப தற்கே!
ஏச்செல்லாம் இழிவெல்லாம்
உரமே ஆகும்!
இளைஞர்படை எழுந்துவிட்டால்
கொடுமை சாகும்!

பதவியெல்லாம், நாற்காலி
நலன்கள் எல்லாம்,
பாய்ந்துவரும் எழுச்சிக்குத்
துணையும் ஆமோ!
உதவியெல்லாம் உரிமையினை
மீட்டி டாது!
உயிர் மீட்டும் விடுதலைக்கே
உரஞ்சேர்க் காது!
பொதுவான நடைமுறைகள்
உணர்வை வீழ்த்தும்!
பொய்ச்சலுகை, தூதுரைகள்
காலந் தாழ்த்தும்!
மெதுவான போக்குகளைத்
தவிர்த்தல் வேண்டும்!
மெத்தனங்கள் சூழ்ச்சிக்குக்
கைத்தா ளங்கள்!

உலகமென்னும் உருண்டைக்குள்
தமிழர்க் காக
உரிமையுள்ள ஒருநாடு
தோன்றல் வேண்டும்!
கலகத்தால் இனமழிந்து
சாகும் முன்னம்,
கயவரெல்லாம் தமிழ்க் குலத்தை
அழிக்கும் முன்னம்,
பலகற்ற சூழ்ச்சியினால்,
அதிகா ரத்தால்,
பைந்தமிழர் நைந்தழிந்தே
ஒழியு முன்னம்
விலகட்டும் பகை! உரிமைக்
கதிர்தோன் றட்டும்!
விடியட்டும் தமிழீழம்!
விளங்கட் டும்மே!

விடுதலைக்குத் தோள்கொடுக்கும்
இளைஞ ரெல்லாம்
வேற்றுமைகள் மறந்தொருங்கே
அணிசே ரட்டும்!
கெடுதலைக்குக் குழிவெட்டி
மண்மூ டட்டும்!
கீழறுப்பு வேலைகட்குத்
தீவைக் கட்டும்!
அடுதலையைத் தொடங்கட்டும்!
படைசூ ழட்டும்!
ஆர்ப்பரிப்பு வானத்தைக்
கிழித்தே கட்டும்!
படுதலையில் காலிடறப்
பகையோ டட்டும்!
பதவி நலம் நாடுபவர்
உளஞ்சா கட்டும்!

-1983

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_3/087&oldid=1837580" இலிருந்து மீள்விக்கப்பட்டது