உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/006

விக்கிமூலம் இலிருந்து

3

பெற்றவள் உவகை !


எடுப்பு


காட்டுப் புலியடி என்மகன் - தமிழ்
நாட்டுக்குப் பழியொன்று வாய்ந்திடிற் பாய்ந்தெழும்
(காட்டுப்)


தொடுப்பு


கூட்டுக்குள் இருப்பது போலென் சொல் - கட்டுப்
பாட்டுக்குள் இருப்பினும் பைந்தமிழ் நைந்திடில்
(காட்டுப்)


முடிப்பு


வீட்டுக்குள் என்னிடம் அஞ்சினும் - இரா
வேளையில் அவளிடம் கொஞ்சினும், - பண்புக்
கோட்டுக்குள் நின்றவன் வாழினும் - தமிழ்க்
கேட்டினுக் கவன்பொறான் யார்வந்து சூழினும்
(காட்டுப்)


ஏட்டுப் படிப்பினில் மன்னவன் - தமிழ்க்
கேகும் படையினில் முன்னவன் - தனை
மாட்டுஞ் சிறைக்கவன் பின்னிடான் - அவன்
மனைவியைக் குழந்தையை என்னையும் எண்ணிடான்
(காட்டுப்)


வாட்டும் வறுமையைப் பார்த்திடான் - பிறன்
வன்சொலைக் கேட்டவன் வேர்த்திடான் - உடற்
கூட்டுக்குள் உயிருள்ள வரையினில் - தமிழ்க்
காதலில் எந்நாளுங் கங்கு கரையிலன்
(காட்டுப்)

-1954

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/006&oldid=1838817" இலிருந்து மீள்விக்கப்பட்டது