உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/008

விக்கிமூலம் இலிருந்து

5

ஏன் பிறந்தாய் ?


மெச்சுந் தமிழ்க்குலமே மேலென்று கண்டோ, என்
அச்சு மலரே! அடிவயிற்றில் நீ மலர்ந்தாய்!

பச்சைத் தமிழே! பழங்கதையைக் கேட்டோ, என்
அச்சுப் படிவமே இங்கே அடியெடுத்தாய்!

இன்றைக் கிருக்கும் இழிநிலையை எண்ணாமல்
அன்றைக் கதைகேட்டோ ஆணழகே நீ பிறந்தாய்!

தில்லி யமைச்சன், திருத்தமிழன் வாயெடுத்துச்
சொல்லி முடிக்குமுன் சொல்லாதே என்பதையும்,

வேல்தூக்கிப் புண்பட்ட வேந்தர் வழிவந்தோர்
கால்தூக்கி வாழ்வதையும், காற்காசுக் கென்றாலும்

சென்னை அமைச்சன் சிறகுகட்டிப் போயங்கே
தென்னை மரமாக நிற்கும் திருக்கூத்தும்,

கேட்டால் விரும்புவையோ? கீழ்மைத் தமிழகத்தை!
பாட்டன் கதையைப் படித்துவிட்டோ நீ பிறந்தாய்!

செந்தமிழை மாற்றார் சிதைப்பதையும் வல்வடவர்
இந்திவந்தே நம்மொழியை ஏறி மிதிப்பதையும்,

நம்மவனே நம்மை நலமிழக்கச் செய்வதையும்,
இம்மென் றவன்சொன்னால் எந்தமிழன் ஓடுவதும்,

என்னவென்று சொல்வேன்?
இவற்றையெல்லாம் எண்ணாமல்
இன்னதமிழ் நாட்டில்வந் தேன்பிறந்தாய் செந்தமிழே!

கட்டிக் குடியிருக்கக் காணா வருவாயும்,
ஒட்டுக் குடியில் ஒருகோடிப் பேர்வாழும்

பாழ்த்த நிலையும், பசியடங்கா வெற்றுணவும்,
ஆழ்த்தும் வறுமையும் அல்லால் தமிழ்நாட்டில்

பேச்சென்ன உண்டு? பிறவாமல் நீயிருந்தால்
மூச்சிறுக்கிச் சாவேனே! முன்வந்தோர் போலின்றிச்

சாதிச் செருக்கும் சமயப் பழியுரையும்
மோதிப் புரள்கின்ற மக்களிடை யேன்பிறந்தாய்?

நாடு சிதைந்ததடா! நம்பெருமை தாழ்ந்ததடா!
“பூடற்றுப் போனார் பழந்தமிழர்!” என்னுஞ்சொல்

கேட்கத்தான் வந்தாயோ? கீழ்மைத் திறமகற்றி
மீட்கத்தான் வந்தாயோ? மீனவனே ஏன்பிறந்தாய்?

-1956

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/008&oldid=1838821" இலிருந்து மீள்விக்கப்பட்டது