உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/016

விக்கிமூலம் இலிருந்து

13

ஓ ! மாணவச் செல்வரே !


ஓ !
மாணவச் செல்வரே! மாணவச் செல்வரே!
ஊணும் உறக்கமும் உயிர்ப்பும் தமிழ்க்கென
நாளும் எண்ணி எண்ணி நலிகையில்
நீளப் படர்ந்தஎன் நினைவுத் திரையினில்
முன்னுறத் தோன்றி, முகிழ்த்தபுன் னகையோடு
தோளும் உணர்வும் தூக்கித் துவளுறா
ஆண்மை தெறிக்க ஆர்க்கும் குரலினால்
“நாளைத் தமிழகம் நம்முடைத் தமிழகம்”
என்றுரை சாற்றிடும் இளைத்திடா உணர்வுசேர் 10
மாணவச் செல்வரே! மாணவச் செல்வரே!

இருள்நிறைந் திருக்கும் இற்றைத் தமிழகம்
அருள்நிறைந் திலங்கிய அன்றைய நிலம்போல்
ஒளிபெற விளங்கிட விரும்பும் உணர்வினால்
ஆயிரம் கோடிப் பணிகள் ஆற்றிடப்
பாயிரம் எழுதிப் படைத்திடு வோரே!
பொங்கும் உணர்வொடும் பூரித்த அன்பொடும்
உங்களுக் காக ஒன்றிரண் டுரைப்பேன்!

நீட்டிய செவிகளில் நிறுத்துக இவ்வுரை!
பூட்டிய நெஞ்சினிப் புலர்ந்தது காண்! 20
அயர்வுற்ற தோளினி உயர்வுற்ற தென்க!
மயர்விலா அறிவும் மனமும் திறக்க!
எங்கணும் நல்லுணர் வேற்றம் பெறுக!
தங்கிய இருளெலாம் தகர்க்கப் படுக!

கற்ற கல்வியும் ஒழுங்கும் கால்கொள
நற்றவப் பயனால் நாட்டாண்மை செய்க!
தோளாண்மை பூண்டு குமுகாயத் தொண்டெனும்
வேளாண்மை செய்திட விரைந்திவண் வருக!
எத்தனை எத்தனை ஏற்றத் தாழ்வுகள்! 30
எத்தனை எத்தனை இழிசேர் குப்பைகள்!
செத்துக் கொண்டுள தமிழகச் சீர்மைகள்!
புத்துருக் கொண்(டு) அவை புதுக்கிடப் புகுக!
செந்தமிழ்ப் படையினை வடபடை வென்றது!

இந்த நொடியினில் ஏற்றம் பெறாதினி
எந்தக் காலத்து எழுவதோ? ஓர்மின்!
தமிழுக் குற்றது தமக்குற்ற தென்னும்
இமிழாக் கொள்கை எழுந்ததிங் கென்றால்,
அடிமை விலங்குகள் அறுக்கப் படாவா?
விடியாத் தமிழ்நிலம் விடிவுற் றெழாதா?
மடியினும் துயிலினும் மாண்டுகொண் டுள்ள 40
துடியாத் தமிழர்க்கு உணர்வுதோன் றாதா?

வானுற நின்று தோள்களை உயர்த்தி
வீணாம் நினைவுகள் விட்டு விலகி
உலகினைக் காண்பின்! மாணவர் உலகமே!
பலகலைக் கல்வி, பலதொழில், அறிவியல்,-
கலகல வெனப்பிறர் கற்பன காண்மின்!
தமிழகம் நாட்குநாள் தாழ்கின்ற தில்லையா?
உமிழத் தகும்படி உயர்வற் றோம்! காண்!
எழுதல் இயலுமா? எழுந்(து)அவர் போலும்
விழாமல் நடந்து வெற்றி பெறுவமா? 50
எண்ணத் தோன்றிட வில்லையா உமக்கே!
எண்ணி எண்ணி இளைப்புற வில்லையா?

இத்தகு நிலையில் என்செய் கின்றோம்!
மெத்தப் பழம்புகழ் மிகைபடப் பேசிக்
கத்தலும் அரற்றலும் கனைத்தலும் அல்லால்
இத்தரை நம்மால் எள்ளள வேனும்
விளைவுற்ற தென்றே விள்ள முடியுமா?
களைகளை அகற்றிடக் கருதி னோமா?

மாணவர் உலகமே! மதிதகு உலகமே!
பூணுக உறுதி! பூணுக எழுச்சி! 60
ஆட்டமும் கூத்தும் அறவே நீக்குக!
ஓட்டமும் நடையுமா ஓய்வற் றிலங்குக!
ஆரவா ரங்கள் அடிச்சிதைத் திடுக!
தீர நினைக்க! நினைத்துத் தேறுக!
போலித் தனங்களால், பொய்ம்மை நினைவினால்
வாலைப் பருவமும் வரட்சி யுறுவதோ?
உடுக்கையும் உண்கையும் ஊருலா வருகையும்
மிடுக்கையும் புனைவையும் மேனி மினுக்கையும்
கொண்டதே மாணவர் உலகெனக் கொடியவர்

கண்டதே போலும் காண்பதே போலும் 70
அலர்உரை செய்யும் அந்தப் படிக்கு,யாம்
இலம்இலம் என்றே எழுந்துரை செய்ம்மின்!

செய்திடக் கோடிக் கோடித் தொண்டுகள்!
எய்திடக் கோடிக் கோடி ஏற்றங்கள்!
வானை அளாவி நிற்பன காண்மின்!
மானங் கருதிடும் வினைகளை நோக்குமின்!
தமிழக மக்கட்குத் தக்கன செய்ம்மின்!
தமிழ்மொழிக் கின்னும் தகுவன புரிமின்!
‘சாதிப்’ பேய்களைத் தகர்த்துத் தள்ளுமின்!
சமயப் பூசலைத் தூவென இகழுமின்! 80
மன்பதைக் கள்ளரை மறித்து நொறுக்குமின்!
முன்புதை வுண்ட முத்தமிழ் புதுக்குமின்!
சாலா தனவெலாம் சகதியி லிட்டுத்
தோலா வெற்றியைத் தோள்களில் தாங்குமின்!

கல்லூரிக் கூடம் கலைவிளை கூடம்!
பல்வேறு உணர்வினைப் பயிற்றிடும் நறுங்களம்!

சொல்திறன், வினைத்திறன், மனத்திறன் எனும்படி
பல்திறன் விளைந்திடும் பல்கலைக் கழகம்!

தாழ்விலா வாழ்க்கைக்குத் தகவோர் ஆக்கிடும்
வீழ்விலாக் கல்வி வேளாண்மைக் கழனி! 90

நயனுறு உலகம் நல்லொளி பெறவே
பயனுறு மாந்தப் பயிர்விளை பழனம்!

எண்ணலும் இயற்றலும் இளையோர்க்குப் பயிற்றி
மண்ணுல குய்க்கும் மனம்விளை நல்வயல்!

கூனலும் கோழையும் குறுவுடல் நிமிரவே
மானமும் மறமும் வளர்புகு மறக்களம்!
நேர்மையும் தூய்மையும் நிறைவிற லாண்மையும்
சீர்மையும் பரிசுறச் செய்யும் அறக்களம்!

ஒழுக்கமும் விழுப்பமும் உயர்வுறு புலமையும்
அழுக்கா றின்றி ஆளும் அரசவை! 100

பொய்யும் புனைவும் புன்மையும் தீமையும்
உய்யும் உளம்புகாக் கொய்யும் கொல்களம்!

எனைத்துயிர்க் கெல்லாம் இம்மண் ணுருண்டையில்
தினைத்துணை உரிமையுண் டெனும்நெறி மன்றம்!

பிணைந்தும் பின்னியும் இணைந்தும் உயிர்க்குலம்
அணைந்தும் வாழ்ந்திடப் பயின்றிடும் அன்பகம்!

கயமையும் கொலைமையும் களவும் புகுமன
மயக்குநோ யகற்றி மருந்திடு மருந்தகம்!

நாட்டுப் பற்றையும் நம்மொழிப் பற்றையும்
பாட்டுத் திறத்தினால் பயிற்றும் பாசறை! 110

தீமையை வெல்லவும் திறம்பட உழைக்கவும்
ஏமக் கருவிகள் இயற்றும் பட்டடை!

உயிர்பெறு ஊதியம், இழப்பு,என் பவற்றை
மயர்வற நிறுத்திடு வாணிக ஆவணம்!

- அத்தகு பெருமையும் ஆன்றவிந் தடங்கிய
வித்தக ஏற்றமும் விளங்கிடு கழகத்துப்
பொத்தகத் துணைபெறு புதுமைசால் மாணவீர்!
எத்தகு திறத்தினை இத்தரைக் கீகுவீர்?
செத்தழிந் திடவோ உடலுயிர் செறித்தீர்?

இனியே ஆயினும் ஏற்றம் பெறுகுதிர்! 120
தனியே ஆயினும் தளர்வுறல் வேண்டா!
கல்விக் காலத்துக் கற்பன கற்க!
வல்வினைக் காலத்து வல்லாண்மை பெறுக!
இற்றைத் தமிழகம் மாணவர் தம்மையே
ஒற்றைத் துணையாக் கொண்டதை உணர்க!
புன்மை வினைகளைப் புறத்தே தள்ளுக!
மின்குழாம் அன்ன திரைப்பட மினுக்கிகள்
தம்மேல் எண்ணம் படர்வதைத் தகர்க்க!
பிடிப்புடை, விரைமா பூசிய முகங்கள்
துடிப்புளம், வெற்றுரை, பழிசெய் நூற்கள் 130
- என்னும் இவைதாம் மாணவர் உலகெனும்
இழிவுரை நீக்கி ஏறுபோல் எழுந்து
முத்தமிழ் பேணுக! மாணவ மணிகளே!
புத்துல கெய்துக! புதுக்கலை புதுக்குக!
நாட்டின் விடுதலை நண்ணுக!
ஏட்டின் வரலாறு எழுதுக இன்றே!

-1968

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/016&oldid=1838861" இலிருந்து மீள்விக்கப்பட்டது