கனிச்சாறு 4/017
14
தம்பி ! நீ, புதிய தமிழன் !
தம்பி! நீதான் புதிய தமிழன்!
இம்மியும் கீழ்மை உன்னிடம் இல்லை.
சாதிச் செருக்கைச் சகதியில் போடு!
ஓதிய கல்வியும் ஒழுங்கும் கடைப்பிடி!
உலகை உயர்த்துதல் உன்றன் கடமை!
கலகம் செய்வோரைக் காறித் துப்பு!
உயர்ந்த கொள்கையும் உரங்கொள் நெஞ்சும்
அயர்வில் லாத அரும்பே ராற்றலும்
கொண்டு விளங்கு; தீமையைக் கொல்வாய்!
பண்டைச் சிறப்பையும் புதுமைப் பயனையும்
10
ஒன்றாய்க் கலந்து ஓர் உண்மைக் கொள்கையை
நன்றாய் வகுத்து நாடெலாம் பரப்பு!
மக்களை ஒன்றென மதித்து நடப்பாய்!
இக்கால் உலகம் இழிந்து செல்வதைத்
தடுத்து நிறுத்தடா புதுமைத் தம்பியே!
எடுத்த கொள்கையில் வெற்றியை ஏந்து!
செயல்செயப் புறப்படு! சீர்செய்! உலகத்தை!
தயக்கம் இன்றிக் கீழ்மையைத் தாக்கு!
மேல் பிறப் பென்றும் கீழ்ப்பிறப் பென்றும்
நால்வகை யாக நம்மவர் நாட்டிய
20
குலப்பிரி வுகளைக் குப்பையில் கிடத்து!
நிலமெலாம் ஒன்று! நிலத்துள மக்களும்
சரிநிகர் என்று சாற்றுவாய் தம்பி!
புரியும் தொழில்களால் பிரிவிலை என்பாய்!
உள்ளம் ஒன்றே மக்களை உணர்த்தும்!
குள்ள மாந்தரின் கூற்றைத் தகர்ப்பாய்!
எல்லா ஊரும் ஊரென ஏற்பாய்!
எல்லா நலமும் எல்லார்க்கும் என்பாய்!
ஊரை ஏய்க்கும் உலுத்தரை வீழ்த்து!
போரைக் கொண்டு, இவ்வுலகைப் பொசுக்கிடும்
30
தீய நினைவைத் தீயுனுள் தள்ளு!
ஏற நிகரமை எடுத்து முழக்கு!
காற்றும் நீரும் கதிரவன் ஒளியும்
நேற்றும் இன்றும் நாளையும் நிலத்தின்
எல்லா உயிர்க்கும் சரிநிகர், என்று
சொல்லால் செயலால் விளக்கிடு கண்ணே!
நிலமும் வளமும் நிகரென்று கூறுவாய்!
‘இலம்’என் றிருப்பார் தமைக்கண்டு இரங்கு!
உண்ணச் சோறிலாது ஒருவன் வாடவும்
எண்ணிலா நலன்கள் ஒருவன் எய்தவும்
40
இருக்கின்ற நிலைமை எப்படி வந்தது?
கருக்கின்ற வெயிலில் ஒருவன் காயவும்
நிழலில் ஒருவன் நீட்டிப் படுக்கவும்
பழமை உலகம் ஏன்பார்த் திருந்தது?
கட்ட ஒருமுழக் கந்தலும் இன்றிக்
கொட்டும் மழையிலும் குளிரிலும் ஒருவன்
வாடிக் கிடப்பதும் மாடியில் ஒருவன்
ஆடிக் களிப்பதும் எப்படி ஆனது?
உழைத்துழைத் தொருவன் ஓடாய்ப் போவதும்
உழைப்பிலா தொருவன் உண்டே உருள்வதும்
50
எப்படிச் சரியென ஏற்பது தம்பி!
அப்படி இருந்திடும் அமைப்பை மாற்றுவாய்!
பிறந்தவர் யாவரும் மாந்தப் பிறப்பே!
சிறந்தவர் என்பார் செயலால் உயர்ந்தவர்!
உலக நலன்கள் யாவர்க்கும் ஒன்றே!
சிலர்நலம் எய்தவும் பலர்துயர் எய்தவும்
வழிசெய் உலகினை மாற்றி வகுப்பாய்!
பழிசெய் வோரைக் களையெனப் பறித்தெறி!
ஆங்கொரு பேயன் அளவிலாப் பொருள்மேல்
தூங்குவான் ஆயின் அவனைத் துரத்து!
60
பறித்தவன் பொருளை யாவர்க்கும் பங்கிடு!
குறித்துவை இதனை உன்றன் நாட் குறிப்பில்!
இனிவரும் உலகம் எல்லார்க் கும்பொது!
தனியொரு மாந்த உடைமை தவறு!
பொதுநல உலகம் பூத்தது தம்பி!
புதுமைத் தமிழன் நீயடா தம்பி!
தமிழ்மொழி உன்னைத் தமிழன்ஆக் கட்டும்!
இமிழ்கடல் உலகில் பொதுமை என்பது
தமிழன் கண்ட தலைமைக் கொள்கை!
அமிழாக் கொள்கை அரிமாக் கொள்கை!
70
சிமிழ்க்காது இதனை உலகோர்க்குச் சொல்லு!
தமிழால் உலகத் தலைமை தாங்கு!
செயலால் உயர்ந்தது மேனாடு என்றால்
வயங்கிடும் உளத்தால் உயர்ந்ததுன் நாடு!
அவர்மொழி கண்டதோ அறிவியல் என்றால்
தமிழ்மொழி கண்டது மெய்யறி வென்றுரை!
அறிவியல் உடல்எனின் மெய்யறிவு உள்ளம்!
குறித்துவை இதனையும்! யாவர்க்கும் கூறிடு!
உயிர்களுக்கு உடலின் வளர்ச்சி போதாது!
உயிர்களை உயர்த்துதல் உள்ளம் தம்பி!
80
உள்ளம் தாழ்ந்த உண்மையால் அன்றோ
கள்ளமும், கவடும், கயமையும் பிறந்தன.
ஏழ்மையும் கீழ்மையும் மக்களுள் தோன்றின!
தாழ்மையும் சேர்ந்தது! மாந்தரும் தாழ்ந்தனர்.
எனவே தம்பி! இதனைக் கேள்நீ:
கனவே அன்று; கற்பனை அன்று!
தமிழக் கொள்கையைத் தரையெலாம் ஊன்று!
அமிழும் உலகைக் காப்பதும் அதுதான்!
புதுமையும் அதுதான் பொதுமையும் அதுதான்!
பதியவை நெஞ்சில்! உணர்வில்! உயிரிலே!
90
-1968