உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/019

விக்கிமூலம் இலிருந்து

16

தமிழ்த் தம்பியே ! உலகைத் திருத்தடா !


தம்பி! இதுகேள்! தங்கையே, இதுகேள்!
செம்பொன் மணிபோல் சிலஉரை சொல்வேன்!

உருண்டுகொண் டிருக்கும்இவ் வுலக உருண்டையில்
இருண்ட பகுதியும் ஒளிசேர் பகுதியும்
அரை அரை இல்லையா? அருமைத் தம்பியே!
இருள்ஒளி யாவதும் ஒளி இருள் ஆவதும்
மாறி மாறி வருஞ்செயல் இல்லையா?
கூறுதற் கரிய, இவ் வானப் பரப்பினுள்
எண்ணுதற் கரிய விண்மீன் கூட்டமும்
நுண்ணொளி வீசிடும் பால்வழித் திரட்சியும்
ஆயிரம் ஆயிரங் கோடி அளவின!

நீயும் நானும் நில்லாது எண்ணினும்
மாயும் வரைக்கும் எண்ணி மாளாது!
அத்துணைப் பெரியதிவ் வகன்ற விண்வெளி!
இத்துணைப் பெரிய இவ்விண் வெளியிலே
நுண்ணிய துகள்போல், நுண்ணிய அணுப்போல்
மண்ணுல குருண்டை மனத்தில்வை தம்பி!

இம்மண் உருண்டையுள் இருக்கின்ற நாமோ
அந்நுண் அணுவினும் அணுவாம் என உணர்!
இத்துணை அணுப்போல் இருந்து கொண்டுதான்
எத்தனைச் செருக்காய் இருக்கின்றோம், தெரியுமோ?

நமக்குள அறிவே பெரிதென் கின்றோம்!
நமக்குத் தெரிந்ததே சிறந்ததென் கின்றோம்!
நாம் உரைப் பதையே நல்லுரை என்று
வீம்புரை பேசி வீணரா கின்றோம்!
நம்கண் காண்பதே காட்சி என்றும்
நம்செவி கேட்பதே கேள்வி என்றும்
பித்துரை பேசிப் பிதற்றித் திரிகின்றோம்!
செத்துத் தொலையுமுன் செய்ததும் சொன்னதும்
கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தால்
ஈட்டம் என்பதோ இழிவும் பொய்யும்
கள்ளமும் குள்ளமும் கயமையும் அன்றிக்
கொள்ளச் சிறந்தது கோழி முட்டையே!
என்ன, தம்பி! விழிக்கின் றாய், நீ!
சொன்ன யாவும் உண்மையா, இல்லையா?

தம்பி! நம்மிடம் மாந்தத் தன்மை
இம்மி அளவே னும்இருக்கின்றதா?
அண்டையில் உள்ளவன் அயலில் வாழ்பவன்
உண்டானா? குடித்தானா? உடுத்தானா? என்று
கவலைப் படுகின் றோமா? இல்லையே!
(கவலை இலானைக் கயவன் என்று
வள்ளுவப் பெருந்தகை வாய்விட்டு உரைத்தார்)

ஒருவரைப் போலவே யாவரும் பிறப்பவர்!
ஒருவரைப் போலவே யாவரும் இறப்பவர்!

இருப்பினும் இந்த மக்களுக் கிடையில்
பெருமைப் படும்படி பேசஒன் றுண்டா?

யாவரும் ஓரினம் எனும்நினை விருந்ததா?
யாவரும் மாந்தரே எனநினைந் தனரா?

ஒருவர் பசித்திட ஒருவர் உண்கிறோம்!
ஒருவர் அம்மணம்! ஒருவர்க்குப் பட்டுடை!

கூரை பிய்ந்த குடிசை ஒருபுறம்!
காரை பூசிய கட்டிடம் ஒருபுறம்!

வீங்கிடும் வெற்றுக் கால்களோர் பக்கம்!
தூங்கிடச் செய்யும் ஊர்திஓர் பக்கம்!

மலக்கூடை ஒருத்தி மண்டையில் சுமப்பாள்!
மலர்க்கடை ஒருத்தி கொண்டையில் சுமப்பாள்!

பாலுக் கேங்கும் பசித்தொரு குழந்தை!
பாலைக் குமட்டிடும் பசியிலா தொன்று!

காயும் வெயிலில் கருகுவான் ஒருவன்;
ஓய்வெனக் குற்றாலம் ஓடுவான் ஒருவன்!

மருந்திலா ஏழ்மையில் இறப்பான் ஒருவன்!
விருந்து செரித்திட மருந்துண்பான் ஒருவன்!
மேல்பிறப் பென்றொரு மடையன் உளறுவான்;
கீழ்ப்பிறப் பென்றே ஒருவனைக் காட்டுடிவான்!

இன்னும் எத்தனை ஏற்றத் தாழ்வுகள்!
சொன்னால் நம்பவும் மறுப்பாய் தம்பி!
அடடா! தம்பி! ஆரெடுத் துரைப்பார்?

அன்பும் அறிவும் அகன்ற உள்ளமும்
இன்றைய வாழ்வில் யாருக்கு வேண்டும்...?
திருக்குறள் அறிவு செருப்புக் காகுமா?
இருக்கும் நூல்களை எவன்படிக் கின்றான்?

காசு பணங்களே கனவிலும் நனவிலும்
பேச்சிலும் செயலிலும் பெருமைப் படும்பொருள்!
பொன்னும் மண்ணும் என்றும் இருக்கும்!

இன்னும் இன்னும் என்கிற நாம்தாம்
மடிந்து மட்கி மண்ணாய்ப் போவோம்!
விடிந்தது முதலா இருள்வது வரைக்கும்
பணம்பணம் என்றே பேயாய் அலைகிறோம்!
மனத்தை எந்த மடையன் நினைத்தான்?
பொருள் தேவைதான்! பொருளே தேவையா?
இருள்உல கிதனை இடித்துத் தள்ளடா!
எத்துணைப் பெரிய உலகம் என்கிறோம்!
எத்துணைச் சிறியது மக்களின் உள்ளம்!

தம்பி! ஒன்று கேள் :
நாறும் மாந்தக் குலத்தைக் கழுவடா!
ஏறும் உணர்வால் அறிவொளி ஏற்றடா!
குள்ளக் கொள்கையைக் குப்பையில் போடு!
உள்ளச் செழுமைக்கு உரமிட்டு வா, நீ!
தூசு தும்புகள் உடனே துடைத்தெறி!
மாசினை அகற்று; மனத்தைத் தூய்மைசெய்!
காசைப் பெரிதெனக் கருதி விடாதே!
மூசைப் பொன்னும் மண்ணும் ஒன்றே!
வாழ்வு பெரிதிலை; வளமையே பெரிது!
தாழ்வைத் தூள்செய்! தயக்கம் கொளாதே!

கற்ற கல்வியால் கவின்செய் உலகை!
உற்ற இழிவுகள் ஊதித் தள்ளு!
மடமையை வீழ்த்து! மக்களை ஒன்றுசேர்!
கடமையை உணர்த்து! கன்னித் தமிழினால்
கமழக் கமழ உரைசெய்! வினைசெய்!
தமிழத் தம்பியே! தமிழத் தம்பியே!
உலகைத் திருத்தடா, தமிழத் தம்பியே!

-1968

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/019&oldid=1838864" இலிருந்து மீள்விக்கப்பட்டது