உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/022

விக்கிமூலம் இலிருந்து

19

விளம்பர உலகில் விலைபோகாதே !


வண்ண ஓவியம் மின்னும் முகப்புகள்!
எண்ணிக் கொள்வாய் தம்பி! இவையெலாம்
உன்னை மூழ்க்கின்ற ஓட்டைப் படகுகள்!
உன்னை வீழ்த்திடும் ஓங்காரப் பள்ளம்!
விளம்பர உலகில் விலைபோ காதே!
குளம்பொலி இசையெனக் குழம்பி டாதே!

மீசை முளையா இளைஞர் யாவரும்
காசைத் திரட்டக் கதைகள் எழுதி
அரையாடை யோடும் அம்மணத் தோடும்
உரையாட லோடே ஒளிப்படம் நிரப்பி 10
இதழ்நடத்து கின்றார்! இவற்றை யெல்லாம்
புதுமை விரும்பும் புன்மைத் தம்பிகள்,
எதுதம் தேவை என்றுண ராமல்,
கோமாளித் தனத்துக்கு ஏமாறுந் தங்கைகள்
ஈமொய்ப் பதுபோல் ஏறிட்டு வாங்கி
அணுஅணு வாகத்தம் அறிவை இழந்து,

உணர்வைத் தாழ்த்தி உள்ளத்தைப் புதைத்தே
உடலுறுப் புகளைப் படிப்படி யாகக்
கெடலுறச் செய்யும் கீழ்மை,என் னென்போம்?

தேனொலி செய்ய வேண்டிய, வீட்டின் 20
வானொலிப் பெட்டியின் வாயைத் திறந்தால்
கழுதைக் கனைப்பிலும் காக்கைக் குரலிலும்
இழுஇழு வென்றே குரலினை இழுக்கும்
பச்சைச் சொற்களில் வெள்ளை யான
கொச்சைப் பாடல்கள்! கோமாளிக் கூத்துகள்!
பள்ளியில் மாணவர் பயில்கின்ற கல்விக்குக்
கொள்ளிவைப் பதுபோல் கும்மாள வாழ்க்கை!

படித்த மடயர் பாழ்செய்யும் உலகம்!
வடித்த கயவரே வலம்வரும் உலகம்!
வீணர் நிறைந்த விளம்பர உலகம்! 30
நாண மற்றவர் நடிக்கின்ற உலகம்!

கலையெனும் பெயரால் காமத்தைப் பாய்ச்சும்
புலையர் புகுந்த புழுக்கறை உலகம்!
தூக்கில் இடத்தகும் துடுக்கரும் கொடியரும்
பாக்கள் இயற்றிப் பாழ்செயும் உலகம்!
கழுவேற்றத் தக்க களியரும் காமரும்
வழுவுறக் கதைகள் வடிக்கும் உலகம்!
ஒழுங்கிலாக் கயவர் ஒழுங்கைப் பயிற்றும்
மழுங்கல் உலகம்! மானமில் உலகம்!
கொள்கை யில்லாக் கூனர்கள் எல்லாம் 40
ஏழைகள் வயிற்றுத் தீனியைத் திருடும்
கோழையர் கொடிகட்டி வாழ்கின்ற உலகம்!
இவ்வுல கத்துள் இறங்கினாய் தம்பி!
ஒவ்வாத உலகில் உன்துணை உள்ளமே!
எஞ்சிய வாழ்க்கை இனிதாய் நடக்க,உன்
நெஞ்சை ஒருநொடி நிறுத்திக் கேள் நீ!
ஆக்கம் வேண்டுமா? அறிவு வேண்டுமா?
ஊக்கங் கொள், அஃது உணர்த்தும் வழியிலே!

-1969

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/022&oldid=1838867" இலிருந்து மீள்விக்கப்பட்டது