உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/029

விக்கிமூலம் இலிருந்து

26

தொண்டன், நீ!


அரசியல் தெரிந்துகொள்;
அறமும் தெரிந்துகொள்;
வரிசையாய் நேர்மையும்
வாய்மையும் கடைப்பிடி;
முரசின் முழக்குப்போல்
முறுக்கேற்று குரலில்;
உரைக்கத் திறன் பெறு;
ஊர்க்கு உழை; தொண்டன், நீ!

கொடிபிடித் திடுவதும்
கூச்சல் இடுவதும்
அடிபிடி வேலை;
அரசியல் அன்று!
மடிபிடித் தென்றும்
மாங்காய் பறியாதே!
குடிகள் நலம் பெறக்
கொடு,உனை; தொண்டன், நீ!

கரையற்ற வேட்கை,
கடமையின் எழுச்சி
தரையெலாம் பாயும்
தணல்கின்ற எண்ணம்,
புரையிலா அன்பு,
பூக்கட்டும் நெஞ்சில்!
விரையும் பொருட்குனை
விற்காதே; தொண்டன், நீ!

வழக்கிடும் பதவிக்கு
வால்பிடிக் காதே!
பழக்கமும் நெகிழ்ச்சியும்
பாழ்செய்யும் உன்னை!
ஒழுக்கமே உடலுரம்!
உழைப்பதே இன்பம்!
மழுகில்லா முயற்சி கொள்;
மருளாதே; தொண்டன், நீ!

உள்ளத்தால் பேசிடு;
உரைக்குச் செவிகொடு;
கள்ளத்திற் கஞ்சு;
கனிவுக்குக் கனிவு செய்;
பள்ளங்கள் நயத்திலும்
பணிவிலும் இருக்கலாம்;
எள்ளலை எடுத்தெறி!
எழு,நட! தொண்டன், நீ!

-1970

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/029&oldid=1838877" இலிருந்து மீள்விக்கப்பட்டது