உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/030

விக்கிமூலம் இலிருந்து

27

பாட்டெழுது!


பாட்டெழுது! தமிழ்ப்
பாட்டெழுது! - இந்தப்
பாரினில் உள்ளவர் பாட்டெழுது!
கூட்டில் உயிரினில்
யாவரும் ஒன்றென
எடுத்துரைக் கும்ஒரு
பாட்டெழுது! - புதுப் - பாட்டெழுது!

ஏட்டை எடு; ஒரு
தூவலெடு!, நன்றாய்
எண்ணிய பின்ஒரு பாட்டெழுது!
நாட்டைத் திருத்திட
நலிவை ஒழித்திட
நாளும் விளங்கிடும்
பாட்டெழுது - தம்பி - பாட்டெழுது!

நிலவெழுதி, ஆற்று
நீரெழுதி - பலர்
நீண்ட பொழுதினைத் தாண்டிவிட்டார்!
மலரினைப் பாடினார்;
மலையினைப் பாடினார்;
மக்களைப் பற்றி, நீ
பாட்டெழுது! - உயர் - பாட்டெழுது!

காதலினால், துன்ப
மோதலினால் - தென்றற்
காற்றையும் ஊற்றையும் பாடிவிட்டார்!
சாதலைப் பாடினார்;
ஈதலைப் பாடினார்,
சழக்கரைப் பற்றி, நீ -
பாட்டெழுது! - வெற்றிப் - பாட்டெழுது!

புல்லினைப் பார்; ஒரு
புழுவினைப் பார் - குப்பைப்
புழுதியில் உழன்றிடும் மக்களைப்பார்!
தொல்லையைப் பார்; அவர்
துயரினைப் பார்; அதைத்
தோண்டிப் புதைத்திடும்
பாட்டெழுது - மறப் - பாட்டெழுது!

-1970

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/030&oldid=1838878" இலிருந்து மீள்விக்கப்பட்டது