கனிச்சாறு 4/031
28
பழைய மனமே புதிய உலகம் !
எத்தனைப் பெரிய உலகம்! இதில்தான்
எத்தனை மக்கள்; எத்தனை இனங்கள்!
எத்தனை நாடுகள்! எத்தனை அரசுகள்!
எத்தனை மொழிகள்! எத்தனைத் தோற்றம்!
அத்தனை மக்களின் அமைப்பிலும் உள்ள
வாழ்க்கை நிலைகள் எத்தனை, தெரியுமா?
தாழ்ச்சி என்பதோ ஒருவனுக்கு உயர்ச்சி!
இன்னா தென்பது ஒருவனுக் கினியது!
நல்ல தென்பது தீதுஒரு வனுக்கே!
ஒருபுடை இருளும் ஒருபுடை ஒளியும்
10
மாறி மாறி இயங்குமண் ணுலகம்!
ஒருநாட்டில் ஒன்று பழைய தென்றால்
பிறநாட்டில் அதுவே புதியதென் கின்றான்!
நம்நாட்டில் ஒருவர் அறிஞர் என்றால்
பிறநாட்டில் அவரே மாணவர் ஆகிறார்;
நம்நா கரிகம் பிறநாட்டில் பழையது!
நமக்குப் பழமை பிறர்க்குப் புதுமையே!
பழக்கமும் உடையுமே பண்பா டாகுமா?
வழக்கம் ஒன்றே ஒழுக்கமாய் விடுமா?
நன்றாய் உடுத்துதல், நன்றாய் உண்ணுதல்
20
என்பதே ‘வாழ்க்கை’ என்றாகி விடுமா?
அழகிய தலைமயிர், அழகிய உறுப்புகள்,
பழுதிலா உருவம்,இத்தனை இருந்தும்
உழுதிடா உள்ளம் உவர்நிலம் அன்றோ?
‘நாகரிகம்’ என்பது நல்ல உடைகளா?
‘நாகரிகம்’ என்பது நன்றாய் உண்பதா?
உள்ளம் என்பதே உரைகல் தம்பி!
உள்ளமே வாழ்க்கை! உள்ளமே ஒழுக்கம்!
ஒருவன் பசித்திட ஒருவன் உண்பதா?
ஒருவன் மாடியில், ஒருவன் தெருவிலா?
30
எத்தனை அறிவியல் ஏற்றங் காணினும்,
எத்தனைக் கருவிகள் வாழ்க்கையைத் துலக்கினும்
ஒருவனை வீழ்த்தி, ஒருவன் உயர்வதால்
இருநிலம் உயர்ந்தது என்பது சரியா?
மக்களைத் தாழ்த்துதல் மனத்தை அழிப்பதே!
மனத்தை அழிப்பது மக்களை அழிப்பதே!
வலியவன் ஒருவனே வாழத் தக்கவன்;
மெலியவன் என்பவன் வீழத் தக்கவன்;
என்பதே உலகின் இயற்கை என்றால்,
கருவிகள் செய்வதே உலகக் கல்வியாம்!
40
அறிவியல் எதற்கு? ஆகும் பயனென்?
அன்பும், அருளும் அழிவுக் குழிகளா?
மென்மை யாவையும் அழிப்பதா வாழ்க்கை?
மலர்கள், பெண்கள், வானப் பறவைகள்,
கிளர்வுறும் பூச்சிகள், விலங்குகள் யாவுமே
அழிக்கத் தக்கன ஆகுமேல் உலகம்
வழிவழி யாக வாழ்ந்துகொண் டிருக்குமோ?
எனவே தம்பி; ஏற்றம் என்பது
புனைவும் பெருக்கமும் அன்று
மனமும் வாழ்க்கையும் மலரச் செய்வதே!
-1970