கனிச்சாறு 4/036
33
கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமா ?
கல்விக் கழகத்துக் கணக்காயர்க் கெல்லாம்
சொல்லிக் கொள்ளுவேன் சொலல்வல் லவரே!
இற்றைக் காலத்துத் தளிர்விடும் இளையரைப்
பிற்கா லத்துப் பெருங்குடி மக்களாய்ச்
செய்ய வல்ல சீரிய பணியில்
மெய்யாய் உழைக்கும் மேன்மை யோரே!
பெற்றோர் யாவரும் பிள்ளைக ளைத்தம்
உற்றார் எனநினைத் தும்மிடம் விடுத்தே
அவர்தம் கல்வியும் அறிவும் உள்ளமும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாய்
10
வளர்ந்து வருமென வைத்த நம்பிக்கை
தளர்ந்து விடாமல் காக்குந் தகைமையீர்!
மக்களும் நாடும் மற்றிவ் வுலகமும்
தக்கவா றியங்கிடத் தவங்கிடந் துழலும்
வாய்மை நெஞ்சினேன் உங்களை வணங்கித்
தூய்மை விளைவு தொடங்கிடக் கூறுவேன்!
குணக்குன் றனையீர்! நீவிர் கொளத்தரும்
கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமோ?
அறிவியல் நுட்பமும் ஆய்வியல் முடிபும்
செறிவுறுங் கல்விச் சிறப்பெனில் ஒப்புமோ?
20
மண்ணியல் வளப்பமும் மாற்றமும் பருவமும்
விண்ணியல் விளக்கமும் வெளிக்கோள் உலாக்களும்
இற்றை மாணவர்க் கேற்ற கல்வியென்
றுற்ற முடிபாய் உரைத்திடல் தக்கதோ?
கற்றுணர்ந் தடங்கிய சொற்றவச் சான்றீர்!
உற்ற கல்வியின் உட்பொருள் கேண்மினோ;
மாந்தனை மாந்தனாய் மலர்த்துதல் கல்வி!
நீந்துயிர், நெளியுயிர், நெடுவான் மிதக்குயிர்,
முகன்வால் நீண்டு முதுகுகிடை யாக
உகலும் விலங்குயிர் யாவினும் ஓங்கிப்
30
படிப்படி யாகப் பண்பினும் அன்பினும்
வடிப்புற வளர்ந்து வான்வரை நிமிரும்
துடிப்பே கல்வியின் தொடக்கமென் றறிக!
முடிப்பில் லாதது கல்வியின் முதிர்ச்சி!
செப்பமாய்க் கல்விக்கு ஒப்புமை யாக
எப்புறக் கோட்டமும் ஏற்புற அமைந்தவோர்
மும்முனைக் கோணத்தை முடிபெனக் கூறலாம்!
அன்பும் பண்பும் அறிவும் மும்முனை!
எப்புற வளர்ச்சியும் இருமுனை வளர்ச்சிக்கு
ஒப்புர வொழுகலே உயர்வெனக் கொள்க!
40
அறிவு வளர்ந்துமற் றன்பும் பண்பும்
குறுகிப் போவதால் கொடுமையே மிகுந்திடும்!
பண்பிலாக் கல்வி பதர்மிகு விளைவு!
மன்பதை யழித்திடும் மண்மாரி யென்க!
அன்பும் பண்பும் அறிவின் எழுச்சிக்கு
முன்னும் பின்னும் முட்டுக் கால்கள்!
பண்பிலா அறிவுக்குப் பாக்கித் தானின்
அண்மைக் கால அழிசெயல் பொருத்துக!
அமெரிக்காவின் பண்பாட் டிழிவை
நம்மா ணவர்க்கு நன்கு விளக்குக!
50
எத்துறை யறிவும் பண்பா டிலாமையால்
இத்தரை யழிவுக் கேற்றிய தீயாய்ப்
பயன்பட் டிருப்பதும் பயன்படப் போவதும்
நலம்பெற மாணவர்க் குரைத்து நாட்டுக!
பண்பிலா அறிவு பயனிலை என்றே
துணுக்குறும் நெஞ்சொடு தொடுத்துக் கூறுக.
தொடுத்துக் கூறுவ தோடமை யாமல்,ஓர்
எடுத்துக் காட்டாய் நீவிரும் இலங்குக!
உடையினில், உரையினில், ஒழுக்கம் மிக்குயர்
நடையினில், பாணியில், நாகரி கத்தினில்
60
எவையெவை மாணவர்க் கேற்றமென் பீரோ
அவையா வற்றிலும் அவருமைக் கண்டு
பின்பற் றிடுமொரு பண்புடை யாளராய்
அன்புறக் காணுமா றாட்சி செலுத்துக!
அறிவையும் பண்பையும் அன்பினால் வளர்க்க!
அறிவையும் அன்பையும் பண்பினால் ஆக்குக!
அன்பையும் பண்பையும் அறிவினால் விளக்குக!
என்பும் நெகிழும் இனிய உரையினால்
எதிர்வரும் உலகை ஏற்று நடத்த,அப்
புதுத்தலை முறையினர் பூட்கை கொளும்படி
70
மலர்தல் செய்குவிர் மாண்பரீர்!
உலர்தலும் வளர்தலும் உலகத்து விருப்பே!
-1971