கனிச்சாறு 4/048
45
நம்பிக்கை
கணியன் ஒருவன் மரத்தடியில்
கற்கள், சோழி, கரும்பலகை,
துணியின் மூட்டை, மணிமாலை,
சுவடிக் கட்டு, பொத்தகங்கள்,
பணியின் விளம்பரச் சிறுபலகை,
படங்கள் ஆகிய இவற்றுடனே
அணியணி யாகத் திருநீறும்
அணிந்தே முடுக்காய் அமர்ந்திருந்தான்!
1
தெருவில் நடந்து கொண்டிருந்தேன்!
திகழும் நிழலுக் காங்கொதுங்கி,
வருவோர் போவோர் வேடிக்கை
வாய்ப்பாய் நோக்கிய வாறிருந்தேன்!
தெருவில் செல்வோர் சிற்சிலபேர்
திருட்டுகள், வழக்கு, திருமணங்கள்,
வருவாய் வாய்பென் றிவைபற்றி
வந்தே கணியம் கேட்டிருந்தார்!
2
வந்தோர்க் கெல்லாம் பாட்டாலும்
வாயுரை யாலும், கோள்நிலைகள்,
முந்திய செயல்கள், நடைவினைகள்,
முடிவில் நடக்கும் விளைவெல்லாம்
தந்திர மாக அவரவர்க்குத்
தக்க படியாய்ச் சொன்னதுடன்
மந்திரம் மாயம் எனச்சிலர்க்கும்
மறைவா யுரைத்துக் கொண்டிருந்தான்
3
அரைமணி நேரம் சென்றிருக்கும்!
அடுத்தே நகர்ந்திட நினைத்திருந்தேன்.
விரைவாய் ஒருவன் மிதிவண்டி
மேலிருந் திறங்கி அதைநிறுத்தி,
உரைமுடி யாமல் கேட்டிருந்த
ஓரிரு பேரைத் தாம்விலக்கி,
இரைந்தே கணியனைக் கண்டபடி
ஏறாய் மாறாய் பேசிநின்றான்!
4
“மடையா, உனைப்போய்க் கேட்டேனே!
மதிப்பாய் இப்பணி விட்டுவிடு.
அடையாத் துன்பம் நீயடைவாய்
அடிப்பேன் செருப்பால் இப்பொழுதே
கடையா வைத்திருக் கின்றாய், நீ
கழுதை!” என்றே பலகூறி,
நடையன் எடுத்தான் அடிப்பதற்கே!
நடுத்தெருக் கூட்டம் கூடியதே!
5
எட்டியே நான்நின் றிருந்ததனால்
என்னென் றறியக் கூட்டத்தைக்
கிட்டினேன்; உள்ளே தலைநீட்டிக்
கிடைக்கும் செய்தி கேட்டிருந்தேன்!
முட்டிய வாறாய்ச் சிற்சிலரும்
முன்னடிக் கொண்டே பற்பலரும்
எட்டியும் எக்கியும் பார்ப்பபோராய்
இருந்தார் சிலரும் பார்த்திருந்தேன்!
6
கூட்டத் திருந்தோர் இருமுகமாய்க்
குறைகள் நிறைகள் பேசிநின்றார்
வாட்டத் துடனே கிழக்கணியன்
வாய்பே சாமல் நின்றிருந்தான்!
நாட்டத் துடனே செய்தியினை
நறுக்குந் துணுக்கு மாய்ச்சிலர்பால்
கேட்டுக் கொண்டேன், தெளிவாக!
கிழவன் மேலே பிழையில்லை!
7
பத்துப் பதினொரு நாட்களின்முன்
பார்த்தது, கணியம், மிதிவண்டி!
ஒத்து வராமல் சண்டையிட்டே
ஓடிப் போனாள் அவன்மனைவி!
“எத்திசை போனாள்? வருவாளோ?
எத்தனை நாளில் வந்திடுவாள்?
ஒத்திருப் பாளா?” என்றெல்லாம்
ஒருநாள் கணியனைக் கேட்டானாம்!
8
அதற்குக் கணியன் பலவாறாய்
அலசிப் பார்த்தே, “உன்மனைவி
இதற்கு முன்பே ஒருவனிடம்
ஈடு பாடாய் இருந்திருந்தாள்;
அதற்கும் கோள்கள் கரணியமாம்!
அவனுடன் ஓடிப் போயிருப்பாள்!
எதற்கும் காவல் நிலையத்தில்
இதனைச் சொல்லி முறையிடுவாய்!”
9
-என்றே கூறித் “தென்திசையில்
இருக்கும் ஊரில் இருந்திடலாம்!
இன்றே போய்ப்பார்” என்றானாம்!
இவனும் தேடித் திரிந்தானாம்!
அன்றோர் நாளில் அவன்மனைவி
அன்னை யுடனே திரும்பினாளாம்!
சென்றவள் நேரே தாயிடந்தான்
சென்றிருந் தாளென் றறிந்தானாம்!
10
வந்தது சினமும் கணியனின்மேல்!
வாழ்க்கை தவறினள் என்றன்றோ
இந்தக் கணியன் உரைத்திருந்தான்!
“என்றன் மனைவி சண்டையிட்டே
சொந்தத் தாயின் வீடன்றோ
சொகுசாய்ச் சென்று மீண்டுள்ளாள்!
எந்தப் படியாய்ச் சொன்னாய், நீ”
என்றே கேட்டுக் கொண்டிருந்தான்!
11
அவனை மெதுவாய் என்பக்கம்
அழைத்துக் கேட்டேன், “அப்பாநீ
அவளை மணந்தே எத்தனையாண்
டாயிற்” றென்றேன், “பத்தாண்டாய்
அவளோ டிருந்து வாழ்கின்றேன்”
என்றான், அவனும் பெருமையுடன்!
“அவளோ டித்தனை யாண்டிருந்தாய்!
அவளை உனக்குத் தெரியாதோ?”
12
உன்னோ டித்தனை ஆண்டிருந்த
ஒருத்தியை நீயும் நம்பாமல்,
என்ன வகையும் நீயறியா
திருந்தான் இவன்மேல் நம்பிக்கை
என்ன முறையால் கொண்டாய்,நீ”
என்றே கேட்டேன்; வாயடங்கி
என்னைப் பார்த்தான்; நடந்தேன்,நான்!
இருந்தவர் தாமும் கலைந்தனரே!
13
-1976