உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/055

விக்கிமூலம் இலிருந்து


52

பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன் விலகு!


உனக்கும்,உன் நிலைக்கும்
உன்அறி வுக்கும்!
ஒத்து வராததை
நினைந்துளம் உருகி
மனக்கற்பனை யாய்
வானள வெண்ணி
மண்ணாய்ப் போகாதே!-தம்பி
மண்ணாய்ப் போகாதே!

நினக்குப் பொருந்தா
நினைவுகள் உன்னை
நிலைகுலைத் தழிக்கும்!
பழியினை நிறுத்தும்!
அனற்காடாம் ஆசை!
அதனிடை வீழ்ந்தே
அழிந்து போகாதே!-தம்பி
அழிந்து போகாதே!

பொருத்த மானதை
எண்ணிடப் பழகு!
பொருந்தா ஆசையைப்
புதைத்துடன் விலகு!
கருத்த மனத்தினால்
கற்பனை மாளிகை
கட்டி யழியாதே!-தம்பி
காற்றில் உலராதே!

இயன்றதை நினைக்கவும்
இயன்றதை அடையவும்
எண்ணுதல் தக்கதாம்!
இல்லெனில் இழிவாம்!
பயன்தரா நினைவைப்
பகல்இரா நினைந்து
பாழாய்ப் போகாதே!- தம்பி
பழியில் வேகாதே!

-1977

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/055&oldid=1839290" இலிருந்து மீள்விக்கப்பட்டது