கனிச்சாறு 4/086
82
சாலையின் ஓரத்திலே !
சாலையின் ஓரத்திலே - ஓடுஞ்
சாக்கடை நாற்றம்என் மூக்கைத் துளைத்திட
காலைவி ரைந்துவைத்தேன் - இரு
கண்களி ழந்தவன் மண்ணிற் புரண்டனன்!
மாலைப் பொழுதெனவே - பெரும்
மக்கள் குழாம்இரு பக்கத்திலும், கடும்
வேலை முடிந்தவகை - என
வீடு திரும்பிய வாறிருந்தார்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே!
1
தொண்டை கிழியும்வகை - அந்த
நொள்ளையன், ‘கஞ்சியும் இல்லைஇல்லை’ என
மண்டை உடைத் தழுதான் - அவன்
மாளாத சொற்களைக் கேளாத வாறாக,
அண்டை நடப்போ ரெலாம் - உடல்
ஆட்டுவதும் பல்லைக் காட்டுவதும், எனக்
கண்டுங் காணாதவர் போல் - போய்க்
கொண்டிருந் தாரதைக் கண்டு நின்றேன்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே!
2
பட்டில் உடை உடுத்தி - இரு
பாவைய ரோடெழில் மேவிச் சிரிப்பதும்,
வட்டிக் கணக்கை எண்ணி - உள்ளம்
வாங்குவதும், உடல் வீங்குவதும், பணப்
பெட்டியின் திறவுக் கொத்தைத் தொட்டுப்
பார்ப்பதுவும், இன்பம் சேர்ப்பதுவும், குடை
தட்டி நடப்பது மாய்ப் - பலர்
சென்றிருந்தார் அதை நின்றுகண்டேன்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே!
3
ஓடும் இயங்கி செல்லும் - இன்ப
ஊர்தி செல்லும், பல பேர்அங்குச் சென்றனர்.
ஏடு படித்த வரும் - சில
எத்தர்களும் பணப் பித்தர்களும், இந்த
நாடு திருத்து தற்கே - பல
நாட்டங்களை, மக்கள் கூட்டத்திலே சொல்லிப்
‘பாடு படுங்க’ ளென - நன்கு
பேசியரும் கைகள் வீசிச்சென்றார்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே!
4
உண்டி செரிப்பதற்கே - வழி
ஒன்றினை யெண்ணியே சென்றவரும், இளம்
பெண்டி ரெலா முடலைப் - பற்றிப்
பேசுவதும், எழில் வீசுவதும், புதுச்
செண்டு மலரணிந்து - குழற்
சீவி முடிந்ததை நீவிச்செல் வாரிதைக்
கண்டுளம் வெந்து நின்றேன் - அந்தக்
குருடனைச் சென்றாரில் ஒருவரும் காணோரே!
சாலையின் ஓரத்திலே!
5
கத்திப் புரண்டழுதான் - ஒரு
காசு கொடுப்பவர் யாருமில்லை; பலர்
செத்துக் கொண்டே யிருக்க - சிலர்
செல்வத்தினை, அதன் இன்பத்தினை என்றும்,
எத்தித் திருடுவதேன்? - இதை
ஏனென்று கேட்டிட, நானென்று நிற்பவர்
பத்தி லொருவ ருண்டோ? - எனப்
பார்த்திருந் தேன்;உளம் ஆர்த்துநின்றேன்!-அந்தச்
சாலையின் ஓரத்திலே!
6
-1956