கனிச்சாறு 4/104
100
பொதுமை உலகம் புதுக்குக இளைஞனே!
அன்றைய வாழ்வில் அமைதி இருந்தது!
நன்றே செய்யும் நாட்டம் இருந்தது!
மெய்சொலல் உயர்வெனும் மேன்மை இருந்தது;
பொய்சொலல் தீதெனும் போக்கு வாழ்ந்தது,
அறியாமை இருந்தது; எனினும் கல்வி
5
நெறியே பெரிதென மக்கள் நினைத்தனர்;
வறுமை இருந்தது; எனினும் வாழ்க்கை
வெறுமை என்னும் நினைவால், விளைந்ததைப்
பங்கிட்டு உண்ணும் பழக்கம் இருந்தது!
‘ஈ’யென் றிரப்பதை இழிவாய் எண்ணினர்;
10
‘கொள்’எனக் கொடுப்பதை உயர்வாய்க் கொண்டனர்!
கலைகள் இருந்தன; கயமைகள் இல்லை;
கொலையுங் களவும் இருந்தன வாயினும்
அறமுறை, நடுநிலை - அவற்றைக் குறைத்தன.
வாணிகம் இருந்தது; வாய்மையும் இருந்ததால்
15
தூணெனத் துரும்பை அளக்கும் வழக்கிலை!
நறுஞ்செயல் யாவும் மிகுத்துநம் தமிழகம்
அறஞ்செய் உலகமாய் அன்றைக் கிருந்தது.
இப்படி இருந்த இனியநம் நாட்டில்
செப்படி வேலைகள் சிறிது சிறிதாய்
20
மிகுந்த வந்தன! மேற்கிலும் வடக்கிலும்
புகுந்தனர் மாந்தப் புல்லியர் ஒருசிலர்!
வந்தவர் தாமும் வாழ விரும்பினர்!
‘மந்திரம்’ என்றனர்; ‘மாயம்” என்றனர்;
தந்திரம் பலவும் செய்து தமிழரைக்
25
குலம்பல வாக்கினர்; புதுநெறி கூறினர்;
வலக்கா ரத்தால் வாழ முனைந்தனர்!
‘சாதி’ புகுந்தது; மிகுந்தது, சழக்கு!
‘வேதியர்’ என்றும், சூத்திரர்’ என்றும்
உயர்வும் இழிவும் பலப்பல உரைத்தனர்!
30
மயர்வற அவற்றை ‘மறை’என எழுதினர்.
‘மறைகள்’ சொன்னதால் ‘மறையோர்’ ஆயினர்!
‘வேதம்’ உரைத்ததால் ‘வேதியர்’ ஆயினர்!
கதைத்த பொய்களைக் கதைகள் ஆக்கினர்.
புதுப்புதுப் புளுகுகள் ‘புராணங்கள்’ ஆயின.
35
அமிழ்ந்தனர் அனைவரும்; அவற்றுள் மயங்கினர்!
தமிழர் உயர்வு வரவரத் தாழ்ந்தது.
இனம்பிள வுண்டதால் ஒற்றுமை இழந்தனர்.
மனமயக் குற்றதால் மானம் இழந்தனர்,
வெள்ளைத் தோலுக்கு அடிமையாய் விழுந்தனர்.
40
சள்ளைகள் மிகுந்தன; சண்டைகள் எழுந்தன!
சேரனைச் சோழனும், சோழனை மாறனும்
ஓராது போர்செய்து ஒழித்துக் கட்டினர்!
அறந்தலை உலகில் மறந்தலை நின்றது!
சிறந்த தமிழர் சிதைந்துவே றாயினர்.
45
தமிழன் குடுமியைத் தமிழனே உலுக்கினான்;
தமிழன் முதுகில் தமிழனே குத்தினான்!
‘மறையோர்’ அவற்றை ‘மறைந்து’ செய்தனர்.
‘வேதியர்’ அதுவே ‘வேதம்!’ என்றனர்.
அன்று தொடங்கி அடிமுதல் இழிந்தே
50
இன்றைய உலகம் ஏமாற்று உலகமாய்
மிளிர்ந்தது தம்பி! - மேனி எல்லாம்
குளிர்ந்ததா? இல்லை; கொதிப்புற் றதடா!
என்ன நினைக்கிறாய்? - எதிர்கால உலகை
இன்னும் இழித்திட எண்ணுகின் றாயா?
55
அல்லது உயர்த்திட ஆர்வமுற் றாயா?
சொல்; உலகு உனக்குச் சொந்தந் தம்பி!
சாதிக் குப்பையைச் சாம்ப லாக்கு;
பாதியை அறிவுப் பயிருக்கு உரமிடு!
மீதியை ஒற்றுமை மேன்மைக்கு உரமிடு!
இனமும் ஒன்றுதான்; இறையும் ஒன்றுதான்!
60
மனமும் ஒன்றுதான்; மக்களும் ஒருவரே!
இறைபல இருந்ததால் மதம்பல விருந்தன.
மதம்பல விருந்ததால் குலம்பல வெழுந்தன;
குலம்பல வெழுந்ததால் கொடுமைகள் நிறைந்தன;
65
உலகம் எல்லாம் ஒருகுலம் என்னும்
உயர்ந்த கொள்கைக்கு உரமிட்டு வளர்க்க!
அயர்வின்றி உழைக்க! ஆக்கம் உறுதி
உழைப்பிலார் சேர்த்த உடைமையை உலுக்குக!
உழைப்போர் இழந்த உடைமையை மீட்க!
70
வயிறு காயும் வறுமையைக் கொல்க!
உயிருவந் தூட்டும் உழவரைப் பேணுக!
பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!
-1970