உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/105

விக்கிமூலம் இலிருந்து


101

பொதுமை உலகம் !


ஒருதாய் நிலம்! ஒருதாய் மொழி!
உருவம், நிறம் ஒன்றே! - வாழ்
வுரிமை தனி அன்றே! - எனிற்
கருதாய் உடன் பிறந்தோர் பலர்
கண்ணீர் விடல் நன்றோ? - அவர்
கவலை யறல் என்றோ!

உருகாய் மனம்; உணராய் நிலை;
உழைப்போர் துயர் ஒருநாள் - கரை
உடைத்தே வெளி வருநாள் - புயல்
உருவாய் வரும்; பெறுவார் பலன்!
உண்மை இதை உணர்வாய்! - பொது
வுடைமை மனம் புணர்வாய்!

மனைகள் பல வெடுப்பார், தெரு
மண்ணில் புரள் வதுவோ? - உளம்
மறுகிக்குலை வதுவோ? - நாம்

புனைதற்குடை தருவார், வெறும்
புழுவாய் உருள் வதுவோ? உடல்
புழுதி படி வதுவோ?

பனியும் மழை வெயிலும் குளிர்
பாரா துழைத் திடுவார் - பயிர்
பலவும் விளைத் திடுவார் - இங்
கினியும் பசித் துயரால், உயிர்
இழத்தல் தொடர் கதையோ? - சிலர்
இறுமாந் திடல் நிலையோ?

உலகம் பொது; உழைப்பும் பொது;
உரிமை பொது வைப்போம்! - அதன்
உடைமை நலந் துய்ப்போம் - மிகச்
சிலரால் பலர் நலியும் நிலை
சிதைப்போம்; துயர் புதைப்போம் - பொதுச்
சீர்மை நலம் விதைப்போம்!

-1970

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/105&oldid=1839552" இலிருந்து மீள்விக்கப்பட்டது