உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/124

விக்கிமூலம் இலிருந்து


120

உலகம்வாழ் தொழிலாளர்
ஒன்றுபடும் நன்னாள்!


எடுப்பு


உலகம்வாழ் தொழிலாளர்
ஒன்றுபடும் நன்னாள்!
இலகுபெரு மேநாள்!
எல்லார்க்கும் பொன்னாள்!  (உலகம்
வாழ்)


தொடுப்பு


விலகிற்று வல்லடிமை!
விளங்கியதே ஒருமை!
வெற்றிபெறத் தொடங்கியதே
உழைப்பாளர் உரிமை!  (உலகம்
வாழ்)


முடிப்பு


வெயர்வைக்கடல் பொங்கிற்று!
வெடித்ததடா புரட்சி!
வீழ்ந்ததடா மாய்ந்ததடா
முதலாளர் திரட்சி!
அயர்வென்ப தில்லையினி;
ஆர்த்தது,மு ழக்கம்!
அகன்றபெரும் உலகம்,இனி
உழைப்பாளர் பக்கம்!  (உலகம்
வாழ்)


பாடுபடும் கைகளெல்லாம்
இணைந்தன,காண் ஒன்றாய்!
பாட்டாளர் உழைப்பெல்லாம்
விளைந்தன,நெல் குன்றாய்!
மேடுபள்ளம் தூர்ந்ததினி!
வெளுத்ததடா சாயம்!
மேலோங்கி வளர்ந்தது காண்
பொதுமைக்குமு காயம்!  (உலகம்
வாழ்)

அடிமைத்தீ அவிந்ததடா!
முதலாளர் ஆட்சி
அகன்றதடா; எழுந்ததடா
தொழிலாளர் மாட்சி!
குடிமைநலம் சிறந்ததுகாண்!
உழைப்பாளர் கூட்டம்
கூடினகாண்! பாடினகாண்!
குவிந்ததடா ஈட்டம்!  (உலகம்
வாழ்)



நீல்வானம் செங்கதிரால்
சிவந்தது,பார் எங்கும்!
நிலமெல்லாம் தொழிலாளர்
புரட்சிஇனிப் பொங்கும்!
மேல்கீழாம் வேற்றுமைகள்
அகன்றன பார்! இன்பமும்,
மேம்பட்டு வளர்ந்ததடா!
இல்லையினித் துன்பம்! (உலகம்
வாழ்)

-1983

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/124&oldid=1839632" இலிருந்து மீள்விக்கப்பட்டது