உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/157

விக்கிமூலம் இலிருந்து


152

உலகத் தமிழினம்
ஒன்றெனத் திரண்டது!


உரிமைகள் எழுந்தன!
கொள்கைகள் முழங்கின!
ஊமைக் கனவுகள் மழுங்கின! - நில
வுருண்டையில் வளமைகள் விளைந்தன!
நரிமைகள் ஒடுங்கின!
நாய்மைகள் நடுங்கின!
நம்நிலம் புதுமையால் மலர்ந்தது! - பொது
நலமிகும் உயிர்க்குலம் கிளர்ந்தது!

எண்ணங்கள் இணைந்தன!
எழுச்சிகள் முனைந்தன!
ஏழைகள் உழவர்கள் கூடினர்! - பெரும்
ஏய்ப்பரை - மேய்ப்பரைச் சாடினர்!
பண்ணெலாம் உரிமைகள்!
பாட்டெலாம் விடுதலை!
பாட்டாளிக் கைகளின் எழுச்சிகள்! - பார்
பாராளும் முதலைகள் வீழ்ச்சிகள்!

உலகத் தமிழினம்
ஒன்றெனத் திரண்டது!
உரமிகு கொள்கையை அமைத்தது! - அதற்
குயிரெனும் செயல்முறை சமைத்தது!
கலகக் கொள்கைகள்
கலகலத் துதிர்ந்தன!
கவின்மிகு தமிழ்நிலம் மகிழ்ந்தது! - அக்
காட்சியில் உலகெலாம் ஒளிர்ந்தது!

-1981

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/157&oldid=1839745" இலிருந்து மீள்விக்கப்பட்டது