கனிச்சாறு 4/159
154
இணைபவர்கள் இணையட்டும் !
பேசியவர் எல்லாரும் பேசிக்கொண்
டிருக்கட்டும்; பின்பு றம்போய்
ஏசியவர்கள் எல்லாரும் ஏசிக்கொண்
டிருக்கட்டும்; இறுமாப் பாய்க்கை
வீசியவர் எல்லாரும் வீசிக்கொண்
டிருக்கட்டும்; வினைகள் செய்வோம்!
பாசியகன் றிவ்வினத்தின் பளிங்குநீர்
தெளிவிப்போம்! பங்கேற் பீரே!
முகந்திருப்பிக் கொள்பவர்கள் முணுமுணுப்புச்
செய்யட்டும்; முரண்பா டுற்றே
அகந்திருப்பிக் கொள்பவர்கள் அண்ணாந்து
விம்மட்டும்; அகல்நி லத்தை
நுகந்தூக்கித் தோள்வலிக்க உழுதுபயிர்
விளைத்திடுவோம்! நோகா தங்கே
உகந்துண்ண வருவோர்க்கே உவந்தளிப்போம்!
உழைப்பளிக்க உதவு வீரே!
தூங்குபவர் தூங்கட்டும்; துலங்குபவர்
துலங்கட்டும்; தொளைகள் எண்ணி
வீங்குபவர் வீங்கட்டும்; விக்குபவர்
விக்கட்டும்; விளைவைக் கண்டே
ஏங்குபவர் ஏங்கட்டும்; எந்தமிழர்
நலங்காண இருகை ஏந்தித்
தாங்குபவர் தாங்கட்டும்! தயங்க, இனி
நேரமில்லை; தாவு வீரே!
இருப்பவர்கள் இருக்கட்டும்; இணைபவர்கள்
இணையட்டும்; இன்றும் நேற்றும்
தெருப்படியில் அமர்ந்தபடி படிப்படியாய்
நமையளந்து தேறிப் பார்த்தே,
உருப்படியாய் ஒருபடியும் அளக்காதார்
உட்கார்ந்தே வான்பார்க் கட்டும்!
நெருப்படியும் குளப்படியும் நீள்வினையார்க்
கொருபடியென் றிணைவீர் வந்தே!
நெடுங்காலம் உழைத்திட்டோம்! நின்றவரார்?
படுத்தவரார்? நிலையா வாழ்க்கை?
அடுங்காலம் வந்திடுமுன் பெருங்கொள்கை
சிறுமுயற்சி - ஆற்றல் வேண்டும்!
கெடுங்காலம் பற்றியவர் கீழ்நினைப்பர்;
நாமவரைக் கிளற வேண்டா!
நடுங்காத நாவினராய் நலஞ்செய்வோம்,
மொழி, இனத்தை - நாட்டைக் காத்தே!
1981