உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/170

விக்கிமூலம் இலிருந்து


165

தொண்டர்க்கு ஒன்றுரைப்பேன் !


தொண்டுசெய்ய முன்வந்த
தூணவர்க்கிங் கொன்றுரைப்பேன்;
துவளா நெஞ்சம்,
மண்டுதுயர் யாவினுக்கும்
மழுங்கலிலாச் செந்துணிவு,
மயங்கா உள்ளம்,

கொண்டகொள்கை தனில்நெகிழ்ச்சி
கொள்ளாத வன்பிடிப்பு,
குலையாப் போக்கு,
பெண்டுபிள்ளை உறவினர்மேல்
பெரும்பிடிப்பு வையாமை
பேணு வீரே!

‘ஏற்றநறுந் தலைமைக்கே
எள்ளளவும் எதிராமை,
எக்க ருத்தும்
போற்றுநிலை உண்டாயின்
புகழ்ந்தேற்கும் நல்லமனம்,
புகன்ற ஒன்று

தோற்றநிலை பெறுமாயின்
உவந்தேற்கும் பெருந்தன்மை,
பிறர்க ருத்தில்
மாற்றுநிலை உளதாயின்
மனங்கொள்ள மறுத்துரைக்கும்
மாண்பும் வேண்டும்!

தொடக்கத்தில் விறுவிறுப்பும்,
படிப்படியாய் விளர்விளர்ப்பும்,
தொய்வும் வேண்டா!
படக்கத்திப் போராட்டப்
படபடப்பும் துடிதுடிப்பும்
பயனே இல்லை!

இடக்கற்ற அமைந்தவுரை
எள்ளலில்லா நறும்பேச்சோ
டெதிரி கட்கும்
அடக்கத்தைக் கற்பிக்கும்
பண்புநடை, அயர்வின்மை-
அனைத்தும் வேண்டும்!

-1986

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/170&oldid=1839763" இலிருந்து மீள்விக்கப்பட்டது