கனிச்சாறு 5/040
தோற்றம்
37 பெட்டைக் கோழி!
முட்டைக்குக் கால் முளைத்ததைப் போல
மொட்டு மொட்டான குஞ்சுகள்! - அவை
பெட்டைக் கோழியின் பின்னால் சுற்றும்
பிரியாக் கோழிப் பிஞ்சுகள்!
உழுந்தைப் போலும் கண்கள்! கோதுமை
உமியைப் போலும் மூக்கு! - பூங்
கொழுந்துக் கால்கள்! குடுகுடு ஓட்டம்!
கொட்டைப் பாக்குத் தலைகள்!
வெள்ளை கறுப்பு சிவப்பு மஞ்சள்
வேறு வேறான வண்ணம்! - ஐயோ
கொள்ளை அழகு! இலவம் பஞ்சின்
குளிர்மை தோய்ந்த உடல்கள்!
பெட்டை சீய்ப்பது போலச் சீய்க்கும்!
பேசிக் கொண்டே தின்னும்! - கோழி
கட்டைக் குரலைக் கேட்டதும் ஓடும்;
கதவின் மூலையில் பதுங்கும்!
-1969