உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/047

விக்கிமூலம் இலிருந்து

44  நல்ல பழக்கங்கள்!

வெளியில் விற்கும் பண்டங்களை
நல்ல பாப்பா - நீ
விரும்பித் தின்னல் கேடு செய்யும்,
நல்ல பாப்பா!

அழுகிப் போன காய் கனிகள்
நல்ல பாப்பா - நீ
அருந்துவதால் வருந்திடுவாய்
நல்ல பாப்பா!

வளர்ந்து வரும் உகிர்களையே
நல்ல பாப்பா - நீ
வாயிலிட்டுக் கடித்திடாதே
நல்ல பாப்பா!

களைந்த வற்றை நீக்கி விடு,
நல்ல பாப்பா - நாளும்
கழுவி அதைத் தூய்மை செய்வாய்,
நல்ல பாப்பா!

நோய் வருமுன் காத்திடலே
நல்ல பாப்பா! - தீய
நோய் தடுக்கும் நல்லமுறை
நல்ல பாப்பா!

பாய்ந்து வரும் நீரை, முன்பே
நல்ல பாப்பா! - கரை
போட்டுத் தடுத்து விடு
நல்ல பாப்பா!

பசிக்கு முன்னே புசித்து விடல்
நல்ல பாப்பா! - நல்ல
பாலெனினும் நஞ்சே ஆகும்.
நல்ல பாப்பா!

புசிக்கை யிலும் அளவு வேண்டும்;
நல்ல பாப்பா! - இதைப்
போற்றி நடப்பாய் என்றும்
நல்ல பாப்பா!

-1970

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/047&oldid=1850703" இலிருந்து மீள்விக்கப்பட்டது