உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/078

விக்கிமூலம் இலிருந்து

75  காரணம்!

தவ்வித் தவ்விப் போவதால்
'தவளை' என்று சொல்கிறோம்!
வௌவிக் கிளையைப் பிடித்தலால்
‘வௌவால்' என்று சொல்கிறோம்!

குதித்துக் குதித்துச் செல்வதால்
'குதிரை' என்று சொல்கிறோம்!
தத்திச் செல்லும் கிளியினைத்
'தத்தை' என்று அழைக்கிறோம்!

வெட்ட வெட்ட வாழ்வதால்
'வாழை' என்று கூறுவோம்!
கட்டிச் செய்த சுவர்களைக்
'கட்டிடம்' என்றியம் பிடுவோம்! -1960

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/078&oldid=1850940" இலிருந்து மீள்விக்கப்பட்டது