கனிச்சாறு 5/094
91 தமிழ்க் கும்மி!
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்பி கொட்டுங்கடி!
வையம் பிறந்த முது மொழியாம், இங்கு
வாழ்பவர்க் கெல்லாம் அது விழியாம் - உயர்
மெய்யில் விளைந்த உயிர்க் கலையாம்; அருள்
மேன்மை பழுத்த பழக் குலையாம்!
ஊழி பலநூறு கண்டதுவாம், அறி
வூற்றெனும் நூல் பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பாண்டியன் வேல்கொண்டு காத்ததடி - உயர்
பாவியம் பற்பல பூத்ததடி, கடல்
தாண்டி மரக்கலம் ஏறி உலகெலாம்
தாவிப் பறந்தெழில் சேர்த்ததடி!
பாருக்கெல்லாம் அறம் சொன்னதடி -உயர்
பாவலர் பாச்சோறு தின்னதடி உயிர்
வேருக்குள் நல்லறம் வார்த்ததடி; பல
வேந்தர்கள் தம் அவை பார்த்ததடி!
ஆன்ற மொழியில் தனித்ததுவாம் - உயர்
ஆங்கிலர்க்கும் நன்கினித்ததுவாம்! - மண்
தோன்றி வளர்ந்த உயிரினத்தின் வெற்றி
தோல்வியை எண்ணிக் கணித்ததுவாம்!
கழகம் வளர்த்தநற் செல்வியடி - தொல்
காப்பியர் ஊட்டிய கல்வியடி! - அறம்
பழகுசெந் நாப்புல வோர்பலர் பேணியே
பாங்குறக் காத்த புதல்வியடி!
வள்ளுவரின் அறப் பால்குடித்தாள் - ஒலி
வார்க்கும் சிலம்பினைக் காலணிந்தாள் -எழில்
துள்ளுந் தமிழ்மணி மேகலையை மின்னல்
தோன்றிடும் தன்னிடை நூலணிந்தாள்
மண்டலப் பேரர சாண்டவளாம் - இந்த
மண்ணெலாந் தம்புகழ் நீண்டவளாம் - சுடர்க்
குண்டலச் செவியினள்! வளையொலி கையினள்!
கூத்திசை நல்லயல் பூண்டவளாம்!
சொல்லுக்குச் சொல் வெல்லக் கட்டியடி, அதில்
தோய்ந்திடும் நூல்கள்தேன் தொட்டியடி! - பொருள்
வெல்லப் பயின்றவர் தம்மினுக்கே - அதில்
வீறும் அறிவு பொன் பெட்டியடி!
பொய்யகற்றும்; உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் - உயிர்
மெய்புகட்டும்; அற மேன்மைகிட்டும்; இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!
கன்னியரே! கும்மி கொட்டுங்கடி - இது
கன்னித் தமிழ் எனக் கொட்டுங்கடி! - இங்கு
முன்னர் பிறந்ததும் பின்னர் சிறப்பதும்
முத்தமிழே என்று கொட்டுங்கடி!
சேயிழையீர்! கும்மி கொட்டுங்கடி - இது
செந்தமிழே எனக் கொட்டுங்கடி - நறும்
பாயிழை யோடுஞ்சொல் பல்கோடி கொண்டது
பைந்தமிழே எனக் கொட்டுங்கடி!
ஏந்திழையீர்! கும்மி கொட்டுங்கடி - என்றும்
இருந்தமிழே எனக் கொட்டுங்கடி; - உல
கேந்துபண் பாட்டினை ஏற்பதும் சேர்ப்பதும்
இளந்தமிழே என்று கொட்டுங்கடி!
கயல்விழியீர்! கும்மி கொட்டுங்கடி! - உயிர்
காந்தத் தமிழ் என்று கொட்டுங்கடி! - நெஞ்ச
மயலறுத் துலகம் மலர்த்துவ தெங்கள்
மணித்தமிழே என்று கொட்டுங்கடி!
தாழ்குழலீர்! கும்மி கொட்டுங்கடி - இது
தனித்தமிழே எனக் கொட்டுங்கடி! - மாந்த
வாழ்வழி முற்றும் வகைபடக் கூறுதல்
வளர்தமிழே எனக் கொட்டுங்கடி!
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, - தமிழ்க்
கோதையரே கும்மி கொட்டுங்கடி! - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் சுடர்
ஏற்றிடவே கும்மி கொட்டுங்கடி!
-1968