உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/096

விக்கிமூலம் இலிருந்து

93  தமிழும் ஆங்கிலமும் தவறாது கற்பாய்!

அருமைத் தம்பியே! அழகுத் தங்கையே!
பெருமைக் கல்வியைப் பிழையறக் கற்றுவா!

இமிழ்கடல் உலகில் இருக்கும் மொழிகளுள்
தமிழ்மொழி உனக்குத் தாய்மொழி அன்றோ?

இன்பத் தமிழே எல்லா மொழிக்கும்
முன்பு பிறந்த முதுமொழி யாகும்!
செம்மையும் நுண்மையும் செறிந்த மொழியிது!
நம்மையும் பிறரையும் நயந்த மொழியிது
பண்பும் பயனும் பயக்கும் மொழிதமிழ்!
இன்பமும் அறமும் ஈயும் மொழிதமிழ்!
நம்மின் உளத்தையும் நடப்பையும் வாழ்வையும்
செம்மைப் படுத்தும் சிறந்த மொழியிதே!
'ஒளிதரும் வாழ்க்கைக்கு உகந்த மொழி' - என
வெளிநாட் டறிஞரும் வியந்த மொழியிதே!

தமிழரின் பெருமை தமிழினால் வந்தது!
தமிழரின் சிறுமை தமிழ் கெட வந்தது!

ஆகவே தம்பி, அன்றன் றைக்கும்
அறிவும் உணர்வும் தமிழினால் அடைக!
நெறிகளும் முறைகளும் நிறைந்துள, தமிழில்!

தமிழ்மொழி அறிவைக் தவறாது பெறுக,நீ!
தமிழில் உள்ள நூல்களைக் கற்றுவா!
தமிழ்வர லாறும் தமிழரின் வாழ்வும்
கமழக் கமழக் கற்றுவா தம்பி!

ஆங்கில மொழியையும் அதனோடு கற்பாய்!
ஈங்கிவை இரண்டையும் இருவிழி எனநினை!
ஆங்கில மொழியினால் அறிவியல் தேறலாம்!
வீங்குநீர் உலகில் யாங்கணும் உலவலாம்!

ஆங்கிலம் நம்மின் அடிமையை மீட்டது!
தீங்குசெய் 'சாதி'யின் இழிவைத் தீய்த்தது!
உலக ஒற்றுமை உணர்வை வளர்த்தது!
கலக மாந்தரின் கயமையைப் புதைத்தது!

இலகு நூல்கள் பற்பல இயல்வது!
உலகத் தொடர்புக் கென்றும் உகந்தது!
அறிவை மதிப்பவர் அறிவு மொழி,அது!
அறிஞரை மதிக்கும் அறிஞர் மொழி,அது;
பாலில் கலந்த நஞ்சினைப் போலக்
காலப் போக்கில் தமிழில், தமிழரில்
கலந்து விட்ட கயமையை உணர்த்தி
நலந்தரும் வழியை நமக்கறி விப்பது!

எனவே, தம்பி இனிமைத் தமிழுடன்
ஆங்கில மொழியிலும் அறிவைப் பெறுக,நீ!
'அகம்' - தமிழ் மொழியெனில், ஆங்கிலம் 'புற’மாம்!

புகப்புக இன்பம் புகுத்தும் தமிழ்மொழி!
தொகத்தொக வாழ்வைத் துலக்கிடும் ஆங்கிலம்!
தகுமிவ் விரண்டையும் தவறாது கற்றுவா!

பன்மொழி யறிவதும் தவறிலை; எனினும்
இன்புறு வாழ்விற் கிருமொழி போதுமே!
கல்வி என்பது கருத்தை அறிவது;
பலவாம் மொழிகளைப் பயிலுதல் அன்று!

-1968

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/096&oldid=1851218" இலிருந்து மீள்விக்கப்பட்டது