உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/099

விக்கிமூலம் இலிருந்து

96  எச்சரிக்கையாயிரு தம்பி!


எவர் பேச்சைக் கேட்பது?
எவர் நூலைப் படிப்பது?
எச்சரிக்கை யாயிரு தம்பி! - குட்டிச்
சுவராக உனையாக்கும்
நூலுண்டு; பேச்சுண்டு;
தெளிய வேண்டும் நீ கண்டு!

கைக்குக் கிடைப்பன
எலாம்படிக் காதே!
காலத்தை வீணடிக்காதே! - தம்பி
பொய்க்கும் புரட்டுக்கும்
பளபளப் புண்டு; நீ
புரிய வேண்டும் அதைக்கண்டு!

பாலுக்கும் வெண்மை!
பழங்கள்ளும் வெண்மை!
பார்வையில் புரியாதோ உண்மை! - தம்பி
மேலுக்கு நல்லவரைப்
போன்றார் மிகவிருப்பார்!
மெச்சினால் கழுத்தையே அறுப்பார்!

இனிப்புள்ள சொற்களை
எவர்பேசி னாலும்
தனிப்புளு கென்றுநீ தள்ளு! - தம்பி
பனிக்கட்டி குளிர்ச்சியே!
பருகினால் மிகு சூடு!
பயன் என்ன என்பதையே தேடு!

நேருக்கு நேர் நின்று
சுடச்சுடச் சொல்லுஞ்சொல்
தேருக்கு அச்சாணி போல - வாழ்க்கைப்
போருக்குக் கேடயமாகும்!
புகழ்ச்சிக்கு மயங்காதே!
புரிந்துகொள்! நீ தயங்காதே!

கண்ணுக்குப் புறஞ்சொல்வான்
கழுத்துக்குக் கருக்கரிவாள்!
களையவேண்டும் அவன்நட்பு - துன்பப்
புண்ணுக்கு மருந்திடுவான்
பொய்மைக்கா விருந்திடுவான்?
புன்னகையால் பிறகு வருந்திடுவாய்!

ஏழ்மைக்குத் துணைநிற்பான்;
இழிவுக்குக் காப்பிடுவான்;
தாழ்ச்சியில் புறம்போகான் நண்பன் - அவன்
தள்ளினும் விலகாதே!
தவிர்ப்பினும் பிரியாதே!
எள்ளினும் இகழ்ந்துதிரியாதே!

-1969

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/099&oldid=1851222" இலிருந்து மீள்விக்கப்பட்டது