உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/116

விக்கிமூலம் இலிருந்து

113

உண்மையும் பொய்யும்
உருவம் புரியாமல் உலவி வருகுது தம்பி!


உண்மையும் பொய்யும்
உருவம் புரியாமல்
உலவி வருகுது தம்பி! - ஒன்றாய்க்
குலவி மகிழுது தம்பி! - ஒரு
கண்ணிமை மறைவில்,
கவனம் குறைந்தால்
கைப்பொருள் மறைந்திடும் தம்பி! - நல்
கருத்தாய் இருந்திடு, தம்பி!

பெண்மையும் ஆண்மையும்
பிரிவு விளங்காமல்
பிணைந்து கிடக்குது தம்பி! - ஒன்றாய்
இணைந்து நடக்குது தம்பி! - அதால்
நன்மையும் தீமையும்
நடப்பு விளங்காத
நாடக மாயின தம்பி! - பல
நலிவுகள் சூழ்ந்தன தம்பி!

மூடரும் அறிஞரும்
மேடையில் ஏறி
முழக்கம் இடுகிறார் தம்பி! - மனக்
குழப்பம் பெருகுது தம்பி! - கொடுங்
காடரும் கயவரும்
கண்ணிய உடையில்
காட்சி தருகிறார் தம்பி! - அர
சாட்சி புரிகிறார் தம்பி!

பேச்சில் விளங்காது;
மூச்சில் விளங்காது;
பெருமையும் சிறுமையும் தம்பி! - மனக்
கருமையும் வெளுமையும் தம்பி! - வாய்
ஏய்ச்சில் மயங்காமல்
எதிர்ப்பில் தயங்காமல்
எண்ணித் தொடங்கிடு தம்பி! - செயல்
பண்ணி முடித்திடு தம்பி!

-1978

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/116&oldid=1851509" இலிருந்து மீள்விக்கப்பட்டது