உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/119

விக்கிமூலம் இலிருந்து

116

சீராடுவது ஏன்?


தலைவாராமல் பூச்சூடாமல்
தனியே நின்றேன் சிணுங்குகிறாய்? - பொற்
சிலையே நீஏன் பள்ளிசெல் லாமல்
சீராடிக் கண் கலங்குகிறாய்?

வண்ணப் பட்டை இருபுறம் கட்டித்
தலையை வாரிப் பின்னிடுவேன்! - உன்
எண்ணப் படியே பட்டுச்சட்டை
எடுத்துத் தருவேன்; பூவைப்பேன்!

தோளில் பையைத் தொங்கப் போட்டுத்
துள்ளிப் போவாய் மான்போல! - ஒரு
நாளில் உனக்குப் பூக்குடை வாங்கி
நாட்டித் தருவேன் வான்போல்!

காலில் செருப்பை அணிந்துகொள்வாய்!
கையை வீசிச் சென்றிடுவாய்! - பைம்
பீலி விரித்த மயிலின்குஞ்சே!
பிள்ளைக் கிளியே! மான்கன்றே!

-1979

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/119&oldid=1851512" இலிருந்து மீள்விக்கப்பட்டது