உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/120

விக்கிமூலம் இலிருந்து

117

எழுதுக குழந்தாய்!


எழுதுக குழந்தாய்! எழுதுக குழந்தாய்!
பழுதறப் பைந்தமிழ் எழுதுக குழந்தாய்!

முழுதுமே தூய தனித்தமிழ் எழுது;
முத்தமிழ் மொழியில் முத்தென எழுது!
விழுது, நீ தமிழ்க்கு! வீழாது காப்பாய்!
வீணர்கள் உணர்ந்திட வெற்றியைச் சேர்ப்பாய்!

அற்றைநாள் தமிழில் அழகுற எழுது!
அறிவியல், அரசியல், அறவியல் எழுது!
எற்றைநாள் வரினும் எந்தமிழ் மொழியே
ஏற்றம் அவைக்கென எழுது, நீ குழந்தாய்!

வானியல் எழுது; வாழ்வியல் எழுது!
வல்லதாம் கலைகளும் வளர்ந்திட எழுது!
தேனிகர் தமிழ்மொழி திசையெலாம் கொடுபோய்த்
தென்னவர் அறிவினைத் தெளித்திட எழுது

எழுதுக குழந்தாய்! எழுதுக குழந்தாய்
பழுதறப் பைந்தமிழ் எழுதுக குழந்தாய்!

-1979

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/120&oldid=1851513" இலிருந்து மீள்விக்கப்பட்டது