உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/121

விக்கிமூலம் இலிருந்து

118

மருளாதே தம்பி மருளாதே!


மருளாதே தம்பி மருளாதே!
மயக்கம் கொண்டே மருளாதே!

இருளைக் கண்டோ
இழிவைக் கண்டோ
எதனைக் கண்டும் மருளாதே!
பொருளைக் கண்டோ
பொய்யைக் கண்டோ
போலியைக் கண்டோ வெருளாதே!

இழப்பை நினைத்தோ
இகழ்வை நினைத்தோ
எழிலை நினைத்தோ மயங்காதே!
உழைப்பை நினைத்தோ
உருவை நினைத்தோ
ஓய்வை நினைத்தோ தயங்காதே!

புகழைப் பார்த்தோ
புன்மையைப் பார்த்தோ
புரட்டரைப் பார்த்தோ கெஞ்சாதே!
இகழைப் பார்த்தோ
எதிர்ப்பைப் பார்த்தோ
இன்னலைப் பார்த்தோ அஞ்சாதே!

மருளாதே தம்பி மருளாதே!
மயக்கம் கொண்டே மருளாதே!

-1979

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/121&oldid=1851528" இலிருந்து மீள்விக்கப்பட்டது