உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/124

விக்கிமூலம் இலிருந்து

121

துள்ளுவாய்! ஆடுவாய்!
தூய்தமிழ்ப் பாடுவாய்!


தலைமாலை சூட்டித் - தமிழ்த்தாயைப் போற்றி
வளைவாக ஆடி - வணங்குவாய் வாடி!

வெள்ளுடை மேனியில்
வெய்யில் ஒளிகிளரும்!
உள்ளெழும் உவகை
முகத்தில் களிஉமிழும்!
கள்ளவிழ் மலர்வாய்!
கருவிழி வண்டு!
துள்ளுவாய்! ஆடுவாய்!
தூய்தமிழ் பாடுவாய்! (தலைமாலை)

மாணிக்கக் கன்னம்!
மகிழம்பூ பின்னல்
கோணிக்கொள் கழுத்து,
கொண்டையில் மயில்தான்!
ஆனிப்பொன் முத்து,
அழகுப்பல் வரிசை!
நாணிக்கொள் இடைதான்
நறவே! நீ ஆடு! (தலைமாலை)

-1982

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/124&oldid=1851531" இலிருந்து மீள்விக்கப்பட்டது