உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/126

விக்கிமூலம் இலிருந்து

123

பள்ளிக்குச் செல்லும்
பயனுள்ள தம்பி, கேள்!


பள்ளிக்குச் செல்லும்
பயனுள்ள தம்பி, நீ!
எள்ளி நகைக்காமல்
இவ்வுரையை எண்ணிப்பார்!

வீரத் திருமகன், நீ!
வீணான புன்செயல்கள்
ஆரத் தழுவி
அழிந்தொழிந்து போவதுவோ?

மன்னுந் தமிழ்மகன், நீ!
மக்கள்தொண் டாற்றாமல்
தின்னுந் தொழில் செய்தே
தீர்ந்துவிட எண்ணுவதோ?

ஆறறிவு பெற்ற
அருமாந்தச் சேயோன், நீ!
சோறுடைக்கே வாழ்ந்து
சொந்தவுயிர் மாய்வதுவோ?

தேய்ந்துவரும் எங்கள்
திருவினத்துக் கால்முளை,நீ!
ஏய்ந்துநில்! நின்றியங்கு!
எந்தமிழ்க்குத் தொண்டுசெய்!

சாய்ந்த தமிழினத்தைச்
சாகாமல் காத்துநில்!
வாய்ந்த தமிழ்க்கதிரே!
வந்தஇருள் சீய்ப்பாயே!

-1982

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/126&oldid=1851533" இலிருந்து மீள்விக்கப்பட்டது