உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/147

விக்கிமூலம் இலிருந்து

144

தமிழ்த்தாய் பெருமை!


ஆடிப் பாடுவீர் குழந்தைகளே! - நம்
அன்னை தமிழ்த்தாய் மகிழ்வுறவே!
தேடிப் பிடித்தவள் பெரும்புகழை - இத்
தேயம் உணரப் புகழ்வீரே!

பாடிக் களைத்த திருநாவும் - அவள்
பண்பில் திளைத்த வரலாறும்,
சூடிக் களித்த பெரும்புகழும் - உம்
சொத்தாய் மகிழ்ந்து போற்றுவீரே!

தன்னந் தனியாள்; மூத்துயர்ந்தாள்!, இத்
தரைநிலம் எங்கும் மொழிபயந்தாள்!
தென்னன் தடந்தோள் வளர்ந்தவளாம், இத்
திக்குகள் எட்டும் பரந்தவளாம்!

முன்னம் பெருமை தானிழந்தாள், அவள்
முகத்தில் கவலை தோய்ந்தயர்ந்தாள்!
இன்னம் அறியா திருக்கின்றோம்!, அவள்
ஏற்றம் உணர்ந்தே வாழ்த்துவிரே!

-1989

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/147&oldid=1851555" இலிருந்து மீள்விக்கப்பட்டது