கனிச்சாறு 6/059
55
அருவி!
கடல் நீரை மேகம் உண்டு,
கருவுற்று, மென்பூந் தென்ற(ல்)
உடன் சேர்ந்தே உள்ளத் தன்பை
உலகினுக் கெடுத்துக் காட்டுங்
கடனென மழையை ஈன,
களிப்பினால் புனற் குழந்தை,
இடமதை விட்டு, வேறோர்
இடஞ்செலும் அழகின் ஆறு!
1
ஓடியும், குதித்தும், நீண்டும்
ஒடிந்துடல் வளைந்தும் பள்ளத்
தாடியும், இரைந்தும் சென்ற
ஆறு, பின் பள்ளத் தாக்கை
நாடி, மேல் நின்று கீழே
‘நறுக்’கென வீழ்தல் காணின்
கோடியாய் இன்பம் பொங்கிக்
கூத்திடும் அழகு நெஞ்சில்!
2
அருவிநீர், அழகின் பிள்ளை!
அணைந்துநீர் வீழும் இன்பத்
துருவினைக் கண்டால் உள்ளம்
உவந்திடும்! காதஞ் செல்லும்
பெருகொலி இன்பத் தெல்லை!
பெரும்புகைக் கூட்டம் போல
மருவிடுந் தென்றல் செய்யும்,
மஞ்சுகண் டுள்ளம் பொங்கும்!
3
வான்விடுங் கண்ணீர் தம்பி!
வறுமையுள் வாடுங் கூட்டம்
ஏன்எனக் கேட்கும் ஓசை!
இருந்துகேள்! அன்பின் ஊற்று,
தான்எனக் கூறு கின்ற
தண்புன லருவி யிந்த,
மானில மக்கட் காற்றும்
மாண்பினை யுற்றுக் கேட்பாய்!
4
ஒருபுறத் திருந்து சாரல்
உட்புகும் பறவைகள், மற்
றொருபுறஞ் சென்று பாறை
உயரமர்ந் திறகு தம்மை,
விரித்துடல் மீத டிக்க,
வியப்புமே லோங்கும்; துன்பம்
எரித்துடல் இளைத்தார்க் கெல்லாம்
இன்பமக் காட்சி என்பேன்!
5
மணமுழ வோசை! தென்றல்
மருவிடும் அருவிப் பெண்ணை!
தணல் வீசும் பரிதி வந்து
வானவில் மாலை சூட்டும்!
மணல் போலுஞ் சிறிய தூறல்!
மணப்பந்தர்! பறவைக் கூட்டம்,
மணக்குழு! விழுந்தெ ழுந்த
மீனினம் விருந்த வர்க்கே!
6
ஆலினுள் விழுது காற்றுக்
காடுதல் போலக் கொட்டும்
பால்புனல் தொலைவி னின்று
பார்ப்பதற் காடும்! நீண்ட
வாலுள குரங்கு தாவி
ஓடிடும்; நீரில் ஒற்றைக்
காலினில் நின்று நாரை
குதித் தெழும் மீனைக் கவ்வும்!
7
வானின்று சரிந்து வீழும்
மின்னல்போ லருவி! அந்தத்
தூநிறத் தருவி போடும்
பேரொலி இடிபோற் கேட்கும்!
மானிறப் பாறை தன்மேல்
‘மரகதப்’ பூச்சு அதன்மேல்
பூநிறங் கண்டு கண்டு
பூரிக்கும் இயற்கை யுள்ளம்!
8
தாமரைப் பரிதி தங்கத்
தழல்நிற ‘மகரந்’தத்தை,
நாமெல்லாம் நுகரத் தூவி
நடந்தது! மஞ்சள்! பூச்சு,
தேமலர்ச் சோலை மீதும்,
தெள்ளிய அருவி மீதும்,
மாமலை மீதும், பட்டு
மறைந்து, பின் இருளால் மாயும்!
9
இரவுக்கு வரவு கூறி
எழுந்தனள் நிலவு மங்கை!
வரவுக்கு நன்றி கூறி
வாழ்த்திடும் அருவி! ஈண்டவ்
வருவியோ நீண்ட வால்மீன்!
அழகிய காட்சி! கண்டு,
பருகினேன்! பன்னாள் சென்றும்
பூரிக்கும் எனது நெஞ்சம்!
-1950