கனிச்சாறு 6/086
81
எவ்வழி நினைவோ, அவ்வழி நிகழ்ச்சி!
உனக்கு முன்னும், இவ்
வுலகம் இருந்தது!
உனக்குப் பின்னும், இவ்
வுலகம் இருக்கும்!
ஊழியிற் சுழலும், இவ்
வுலக வண்டியில்
நாழியே ஏறிடும்
நல்வழிப் போக்கன், நீ!
தொடங்கிய தெங்கே?
தொடர்வது மெங்கே?
அடங்கா முடிவினில்
அடைவது மென்ன?
என்பவை எல்லாம்
எண்ணினும் விளங்கா!
மன்பதைக் கடலுள்
மண்துகள் அசைவு, நீ!
எந்த இடத்தினில்
இறங்கிடு வாயோ?
அந்த நொடிவரை
ஆர்ப்பரிக் கின்றாய்!
சொந்தமும் சுற்றமும்
சுழன்றிடும் அணுக்கள்!
சிந்துகண் ணீரும்
சிரிப்பும் கனவுகள்!
வந்தது நினையாய்!
வழிதடு மாறுவாய்!
வெந்தது தின்றிட
வீணிற் பேசுவாய்;
மந்தையில் ஆடுபோல்
மனத்தைச் சுழற்றுவாய்!
முந்தையர் விட்ட
முழுமை தொடருவாய்!
நினைத்தவை எல்லாம்
நிலைத்தவை ஆகா!
அனைத்து முயற்சியும்
அரைகுறை முயற்சியே!
மனத்திருள் குறைந்தால்
மனத்துயர் குறையும்!
மனத்தொளி பெறுதலே
வாழ்க்கையின் மலர்ச்சி!
ஒளிபெற எண்ணுவாய்;
ஒளித்துவை யாதே!
வெளிவான் விரிவுபோல்
விரியட்டும் நினைவுகள்!
துளியே யாயினும்
தூய்மையே வாழ்க்கை!
களிசேர்ப் பதுவும்
கசடிலா எண்ணமே!
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!
எவ்வழி நினைவோ
அவ்வழி நிகழ்ச்சி!
செவ்விய மனமே
செவ்விய வாழ்க்கையாம்!
-1974