கனிச்சாறு 7/007
4 இருளின் அணைப்பு!
நல்லவிருள்! தூங்கு கின்றார்,
நானிலத்து மக்கள்;
மெல்ல மெல்ல இரவுப்பெண்
மேலிமைகள் மூடி,
வெல்ல என்னை வருடுகின்றாள்,
விரியிருட்கை நீட்டி!
வல்லுறக்கம் கலைந்த(து) இரு
விழிவருந்த எழுந்தேன்!
பகலுழைப் பால் பயன டைந்தார்,
படுத்த யர்ந்து விட்டார்!
அகல் விளக்கில் எண்ணெயில்லை!
அயரு கின்ற நேரம்!
துகள் கொணரும் காற்றில்லை!
தென்றல் என்னை நீவ
அகமெழுந்த துயர மென்னை
அலைக் கலைப்ப தேனோ?
இருட்டியதால் உறங்குகின்றாள்
இல்லாள் என்றன் அருகில்!
உருட்டுவிழி மூடியவா
றுறங்கிய தெம் குழந்தை!
திரட்டு பெருஞ் செல்வத்தினார்
தூங்குகின்றார் நன்கு!
மருட்டு மெனை வறுமை வந்து!
மாய்க்க வில்லை ஏனோ?
விடிந்துவிட்டால் வெம்பசிக்கு
வேக வைக்க, அரிசி
முடிந்து விட்ட தாலெனக்கு
மூளைசரி யில்லை!
கடிந்து கொண்டார் குடியிருப்புக்
கூலிக் கென்ன செய்வேன்?
மடிந்து விட்டால் ‘கோழை' யென்பார்
மாந்தரெனை; அறிவேன்!
வேலைக்கென வெளியிற் சென்று
வீடு நோக்கி வந்தேன்!
"மாலை வரக் கூறினை நீ
மாதமென்ன" என்றான்;
'காலை’ யென்று பல்லைக் காட்டக்
கடிந்து கொண்டான், செட்டி!
ஆலை சூழும் பஞ்சுபோல
அலைந்த தெவர் கண்டார்?
"சாலுக்குள்ளே அரிசி தேடித்
தேளைத் தொட்டு விட்டேன்;
“ஆளுக் கொன்றும் ஏதமில்லை"
என்று சொன்னான் ஐயன்!
பாலுக்கென நடை நடந்தாள்
பத்து தரம்" என்றாள்!
"நாலுக்குள்ளே ஒன்று சொல்வீர்"
என்று கேட்டாள் இல்லாள்!
'இரண் டென்றேன்; 'கட்டாயம்
இது நடக்கும்' என்றாள்;
'புரண்டுவரும் வெள்ளத்தின்
புதுச்சுவடி யிரண்டும்
திரண்டொருங்கே அச்சாகும்'
என்பதுதான் கருத்தாம்!
மருண்டபடி நின்றி ருந்தேன்!
செய்தி யொன்று கண்டேன்!
பகலிரவாய் அமர்ந் தெழுதிப்
பாவரிசை கொண்டு
திகழ்நூலை அச்சகத்தார்
திருப்பி யிருந் தாரே!
மகள் விழித்துக் கொண்டாள்!
மனைவி விரைந் தெழுந்தாள்!
அகல் விளக்கில் எண்ணெயில்லை!
அணைத்த தெம்மை இருளே!
-1951