உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/011

விக்கிமூலம் இலிருந்து

8  சென்னை சென்றேன்...!

“அருந்துகின்ற பொருளிலரை உண்ணுகின்ற
அரும்பொருளிற் பாதியெனக் கூறிநின்றும்
மருந்தெனினும் மறைக்காமல் மறுக்கா...
மரபினஎந் தமிழரது பண்டைக்காலம்!
விருந்தென்றாற் காதவழி யோடுகின்ற
வெறுஞ் சொல்லில் வல்லார்வாழ் கின்றா”ரென்றே
இருந்துவந்தேன், 'இல்லை'யெனக் கூறிநெஞ்சில்
இடம்பெற்றோர் வழியனுப்பச் சென்னை சென்றேன்.

விஞ்சுகின்ற அன்பை யள்ளி வீசுகின்ற
வாயெல்லா மென்பெயரே யொலிக்கும் அன்பால்
கெஞ்சுகின்ற கண்களில்நான் நிற்பேன் என்றும்
கிளர்த்துகின்ற சொல்லிலெல்லாம் ஒலிநான், நண்பர்

நெஞ்சுகளில் நிற்கின்றேன்; அஃதே யாற்றில்
நண்பரெல்லாம் என்னுடலில் ஓடுகின்ற
உஞ்சியெழும் குருதியிலே உயிராய் அன்பாய்
ஓடுகின்றார்; அவரனுப்ப, சென்னை சென்றேன்.

கண்ணோடென் கண்பிரிய, இனிய சொற்கள்
கழறும்வா யோடென்வாய் பிரிய, நெஞ்சு
புண்ணாகிப் போகந்தப் புண்ணில் வேலைப்
போட்டிட்டாற் போல் துடிக்க, நிலவுதன்னை
விண்பிரிதல் போல், நத்தை ஓடுவிட்டே
விலகுதல்போல், குருடனைக்கோல் பிரிதல் போலப்
பண்பாலும், அன்பாலும் ஒன்றாய் வாழ்ந்த
பறவையைப் போன் றன்பர்விட்டுச் சென்னை சென்றேன்.

படைதிரண்டு வரல்போல நண்பர் கூட்டம்
பதைபதைக்கும் பேச்சோடும் உள்ளத்தோடும்
விடைகொடுக்க, நானழுக, வந்தா ரெல்லாம்
விசித்தழுக, உடல்வருந்த உள்ளம் வேக
இடையில்வந்த புகைவண்டி என்னை ஏற்றி
இழுத்துச்செலப் பிரிந்த தந்தோ, குதித்து நீந்தும்
மடைவிட்ட தரைமீனாய்த் துடிதுடிக்க
மாண்புடையார் வழியனுப்பச் சென்னை சென்றேன்.

உருகுகின்ற உள்ளங்களைப் பிரிந்து வண்டி
ஓடிற்று! மடமையினால் சாகும் நாட்டைத்
தருகின்ற நல்லறிவால் திருந்து வோர்க்குத்
தளர்வூட்ட அறிவில்லா மக்கள் தம்மால்
வருகின்ற எதிர்ப்பு தன்னைப் பிளந்துசெல்லும்
வகைபோல இருள்கிழித்து வண்டி செல்லும்!
பருகுகின்ற காட்சிபல கண்டேன் நண்பர்
பிரிவினையும் ஒருவாறு மறந்து சென்றேன்.

பொருள்வைக்கும் பலகையிலே படுக்கை நீட்டிப்
புரண்டார்கள் ஓரிருவர் அவற்றிற் கெல்லாம்
அருள்கொடுத்து வைக்காத ஆட்கள் சில்லோர்,
அடித்தளத்தில் உருண்டார்கள்! அவர்கள் தம்மேல்
சுருள்சுருளாய் வட்டமிட்டு புகைகள் செல்லச்
சுருட்டுகளைப் பிடித்தார்கள் கிழவர் சில்லோர்!
இருள்வெளியின் தலைநீட்டிச் சிலபேர் என்போல்
எழுந்துவரும் வெண்ணிலவைக் கண்டு சென்றார்.

தடித்தசிலர் சிரிசிரித்துக் கூச்சல் செய்து
தறுதலைபோல் பெண்கள்பாற் றிரும்பிப்பார்த்தே
இடித்தஇடி போல்சிரிப்பார்! சிலரோ பெண்ணை
இடித்துவிட்டு ‘வண்டியின தசைவே' என்பார்!
படித்தபடி சிலபேர்கள் இருப்பார்; ஆனால்
பார்வையெலாம் நூல்நோக்கும் எண்ணம் பெண்மேல்!
மெத்ததலை யாடுதல்போல் சிலபேர் நன்றாய்க்
குறட்டைவிட்டுத் தூங்கி யசைந் தாடுவார்கள்!

வண்டி விரைந்தோட, அதனின்வாய் சங்கூத
வால்போல் வருந்தொடர்கள் தாளம்போட
எண்டிசையும் இருள்தோய்ந்த காற்றின் ஊடே
எதிரொலிக்க, மலைகடந்து, வெளிகடந்து,
மண்டியுள்ள மரக்காடு கடந்தே, ஓடை
மரப்பாலம் பலகடந்து, ஊர்கடந்து
அண்டியுள்ள நிலையங்கள் கடந்து செல்ல,
அரைத்தூக்கத் தோடேநான் அமர்ந்து சென்றேன்.

கவிந்துள்ள மையிருளும் மறைந்துசெல்லக்
கீழ்வானும் வெளுத்துவரப் பரிதிச் செல்வன்,
குவிந்துள்ள தாமரைமொக் கவிழ்தல் போலக்
கொல்லனுலைக் களத்திரும்பின் செம்மை பூசிக்
கவின்செய்தான்; வண்டியினுள் ளிருந்த வாறே,
காட்சியினைக் கண்டுணர்வால் பூரித்தேனே!
நவில்கின்ற செந்தமிழால் இனிக்கும் உள்ளம்;
நற்காட்சி தனைக்கண்டு குளிரும் கண்கள்!

‘இரவி'யெழுந் தொருமணிக்குள் வண்டி சென்று
இறக்கிற்று! நடுநிலையம்!! அடடா, அங்கு
அரவந்தான் என்ன! அங்கே ஆட்கள்கூட்டம்
அழகொழுகும் கண்காட்சி! இவைக ளூடே
வரவுக்குக் காத்திருந்தான் உறவோன்; ஓடி
வந்தெனது பெட்டியினை வாங்கிக் கொண்டு
பரவியுள்ள மக்கள்புன லூடே சென்று
பாதையினை அடைந்திட்டான்! பின்னால் சென்றேன்.

கொண்டுவரும் பெட்டியினைப் பிடுங்கிக் கொண்டு
கூலியாள் வேண்டுமா என்பார்! வந்து
வண்டியினுள் ஏறிப்பெரும் மூட்டை தூக்கி
வந்திடுவார்! ஓர்புறத்தில் தேநீர் விற்கும்!

“ரண்டி, ரண்டி” என்றிடுவார் ஒருவர் “ஈதர்
ஆவ் ஜீ"” என்பார் ஒருவர்; வந்து நின்ற
வண்டியினின் வந்தவரைச் சென்று பார்த்(து) “ஐ
வெல்கம் யூ” என்றிடுவார் தமிழைக் காணேன்!

ஆங்கிலத்தில் அரைகுறையாய்ப் பேசுவோர்கள்!
அதுவிளங்காத் தெலுங்கினிலே விடைசொல் வோர்கள்;
காங்கிரசு உடையணிந்தார் இந்தி பேசிக்
களித்திருப்பார்! அண்டையுள்ள பெண்கள் எல்லாம்
பாங்கோடு செல்லுகையில் உதட்டுச் சாயம்
பூசிப்பின் கண்ணாடி பார்ப்பார்! ஈதை
யான்கண்டு மனம்புழுங்கி நின்றேன்; செம்மை
யறிவுள்ள செந்தமிழ்த்தேன் நாடாம்; ஈதோ?

விரிந்துள்ள பாதை! ஒரு மருங்கினின்று
விரைந்து வரும் இயங்கிகளோ தொடர்ந்து காணும்
சரிந்துவிழும் போலவரும் பின்னி யங்கி!
சாலையின திருமருங்கும் மக்கள் கூட்டம்!
வரிந்தபடி இடுப்பினிலோர் வேட்டி கட்டி,
வண்டிகளை மாடுகள்போ லிழுத்துச் செல்வர்!
புரிந்துவரும் புன்னகையால் குடைகள் ஆட்டிப்
போவதுமாய் இருப்பதுமாய் இருப்பர் பெண்கள்!

“கோட்டுகள்”மேல் தொங்கும்! ஒரு நீண்டசட்டை
குதிகால்கள் தெரியாது தொங்கும்; வாயில்
பாட்டு தெறித் தோடுமதன் ‘பாணி’வேறு!
பார்க்குமிட மெல்லாம்ஆங் கிலமே தோன்றும்!
‘சேட்டு’களும், தெலுங்கர்களும் அவர்கள் பேச்சில்
சொல்லிமகிழ் வெய்திடுவார்! தமிழர் மேலை
நாட்டுமொழி பேசிடுவார் நாடோ சென்னை!
நடப்ப தெல்லாம் ‘மதராசு’ம் ‘மெட்ராசும்’மாம்!

மக்களுடை ஆங்கிலத்தைக் காட்டும்; மக்கள்
மனத்தினிலே ஆங்கிலநீ ரோட்டம்! பேச்சில்
திக்கிவரும் ‘வார்த்தைகள்’, பத் தென்றால், பாதித்
தெலுங்கினிலும், ஆங்கிலத்தில் மூன்றும் போனால்
சிக்கியிருக் குமிரண்டு தமிழுங் கூடச்,
சரிக்குநிகர் வடமொழியாம்! தேடித் தேடித்
திக்குமுக்க லாடிவிட்டேன் தமிழைக் காண!
தெருவெல்லாம் தமிழ்த்தெருவே உருவம் வேறு!

மாடன்ன கைவண்டி இழுப்பார்! உள்ளே
மனைவியொடு கணவன் அவர் குழவியொன்று
ஓடன்ன கன்னம்!உலர் வயிறுகொண்டே
ஓடிடுவான் வைத்திழுத்துத் திணறும் மூச்சு!
நாடென்ன வென்றால்செந் தமிழ் நாடென்பேன்!
நடையென்ன வென்றால் காட்டிடையில் வாழும்
கேடுசூழ் 'மிருக'நடை என்பேன்! தூய
குறள்பிறந்த நாடேநீ இருள்வாய் என்பேன்!

'இல்'லென்னும் வண்டிதனை இழுக்கச் செய்வார்
என்றென்றும் பெண்டிரெல்லாம் ஆண்கள் தம்மை;
'நில்'லென்றும் 'போ'வென்றும் கூறி ஆட்டும்
நிலையாகக் கையிழுப்பு வண்டி யேறிப்
‘பல்'லெல்லாங் காட்டியே மைக் கண்களாட்டிப்
பாதத்தில் வண்ணத்தோல் குறடு தோயக்
'கொல்'லென்று பிறர்நகைக்கக் கால்மேல் மற்றோர்
கால்போட்டே யிருப்பாரை யிழுப்பார்க் கண்டேன்!

சுட்டெரிக் கின்றவெய்யில் பட்டுப் பட்டுச்
சுருண்டுவிழும் தோல்கருமை நிறத்தை வெல்லும்!
தட்டுத்தடு மாறிவண்டி யிழுத்துச் செல்லும்,
தளர்வுடையார்! வண்டிக்குள் வெளியிற் றொங்கும்
சுட்டுவிரல் நுனியும்வெம் பரிதிகாணாச்
சிவந்திருக்கும் செல்வத்தார் தம்மை ஏற்றி
முட்டிக்கா லொடியும்வகை யிழுத்துச் செல்லும்,
முதுகுவளைந் தாரிருக்கும் கருத்துத் தோன்றும்!

தெட்டுகின்ற மக்களெலாம் நடந்து செல்வார்!
தெருக்களிலே நடப்பவர்கள் வறுமை காண்போர்!
பட்டுடையில் பாதியுடல் மூடிப் பின்னைப்
பகட்டுடையிற் காலுடலை மூடிக் காலை
வெட்டவெளி யோடுவாய்ப் பண்ணும் பெண்டிர்,
வேளைக்கொரு மேற்றுணியும் நாளைக் கெட்டும்
கட்டுகையில் நடந்து செல்லும் வண்டிக்காரன்
கன்னிகளின் வெற்றுடலை வெய்யில் தீய்க்கும்!

இரக்கம் மென்ப துள்ளத்திற் கொள்ளாமக்கள்!
ஏன்வாழ வேண்டுமென் றெண்ணும் மக்கள்!
உறக்கமில தூணுமிலை பொருளைச் சேர்க்கும்!
உயர்மாடிக் காரருக்கே யுள்ளம் மட்டும்,

குறுக்கம் ஏன்? ஏழைகளின் எலும்பை வைத்தே
குருதியினைச் சேறாகப் பூசி, வானிற்
பறக்கின்ற கழுகுக்குப் பாது காப்பாய்ப்
பண்ணிவைத்த மாளிகைகள் கண்டேன் கண்டேன்!

கண்டுகண்டு கொதித் தெழுந்த குருதிதன்னைக்
கடற்காற்று குளிர்மைசெய் வகையால் நெஞ்சில்
பண்டுதமிழ் நூல்களையான் படிக்குங் காலைப்
படிப்படியாய் உயர்கின்ற இன்பத் தூற்றை
மொண்டுமொண்டு அருந்துதல் போல் இன்பஞ்செய்தும்
முன்கண்ட காட்சியெலாம் ஒன்று சேர்ந்து
‘தொண்டுசெய், தொண்டுசெய்’ என்று...
துணைசெய்யத் தமிழ்த்தாயை வேண்டி நின்றேன்!

‘கடற்கரைக்கு வரச்சொல்வாய்’ என்று சொன்னாள்
‘கவிதை’ப் பெண், “காற் றென்னுந் தோழியண்டை!
‘இடருற்ற நெஞ்சுக்கோ ருவகை’ என்றே
என்னைவந் தழைத்திட்ட தோழி யோடு,
கடற்கரைக்குச் சென்றே னோர்மாலை! நீலக்
கடல்தன்னை மறைத்துவிடும் மக்கள் கூட்டம்!
சுடரொளியாய்ச் செம்பரிதி பவளத் தூறல்
சொறிந்திற்று! மக்கள்சூழாம் கோவைக் காடு!

மேனாட்டி னுடையால்தம் மேனி மூடி
மேற்காகக் கிழக்காகப் போனார் சில்லோர்
கூனாட்டம் போடுகின்ற பெண்க ளோடே
குறுக்காக நடந்துமணல் மேல் கிடப்பர்!
தேனீட்டும் ஈக்கள்போல் சிறுவர் கூட்டம்
தின்பண்டக் கடைசூழும் பல்லாறாகத்
தானீட்டும் பொருள்பற்றி ஒருவன் பேசத்
தலையாட்டிச் செல்வார்நா லைந்து பேர்கள்!

‘கடலைப்பார் அலைவருது’ என்பா னோர்சேய்!
‘கடலைவாங் கித்தாநீ’ என்பா ளோர்பெண்!
‘உடலைப்பார்; அழகைப்பார்; இடைதன்னைப்பார்
ஒடிந்து விடும்போல் காணும்’ என்பான்காளை!
இடம்விடுங்கள் என்பானோர் வண்டிக்காரன்;
இழுத்தபடி ஓடிடுவான்; வண்டிக்குள்ளே,
“விடுடா, நீ, விடு விரைவில்” என்று கூறும்
வெறிபிடித்த கல்நெஞ்சன்! ஏழ்மைக்கூற்று!

காலைமுதல் மாலைவரைக் கொடியர் வாழ்வைக்
கண்டுள்ளம் வெந்தவகை மீற, மீற,
மாலையிலே பகலவனின் குருதி ஆறு,
மடைதிறந்து விட்டதுபோல் செம்மைப்பூச்சு,
சாலையிலும், மனைகளிலும், விழுந்துதங்கச்
சாயலினை யூட்டிப்பின் நீலவண்ண
வேலையிலும் வெள்ளிநிற அருவிமேலும்,
விழுந்ததுசெம் மணலெல் லாம்தங்கத்தூவல்!

செம்பரிதிப் பெருவிளக்கை யணைத்துவிட்டுச்
செம்மையெழி லோடுகுளிர் ஒளியைவீசும்
அம்புலியாஞ் சிறுவிளக்கை இயற்கைநங்கை
‘அவனி’யெனுந் திருவீட்டிற் கேற்றிவைத்தாள்.
செம்மைநிறம் நீங்கியெழில் நிலவுப்பூசல்
சிறுபொருளி னுருத்தெரியும் வகையில்நிற்க
தம்மைமறந் தின்காற்றி லுடலைத் தோய்க்கும்
தன்னலத்தார் கன்மனத்தார் வீடுசென்றார்!

நிலவினொளி யோடுமின் னொளிவிளக்கு
நெடும்பாதை யிருமருங்கு மெழிலைப்பூசும்
பலவகையின் வண்ணவொளி விளக்குதோயும்
பகட்டெல்லாம் அந்நகரின் பெருமைகாட்டும்
உலவிவரும் மக்களெல்லாம் நெடியபாதை
ஓரங்கள்தாம் மறையும் வகையாய்ச்சென்றார்!
குலவிவரும் காதலர்கள்; குழவிக்கூட்டம்!
கூன்கிழடோ டேழைமக்கள் திரும்பக்கண்டேன்.

வெளிநாட்டி னின்றுவருங் கலங்கட்கெல்லாம்,
வழிவிளக்கும், நெடியமனை முகட்டினின்று
ஒளிவீசும்! ‘சென்னையிது; சென்னை'யென்று
ஓடுகடல் மீதுவரும் மக்கள்நெஞ்சில்
களியூட்டும் வகையாக வானைமுட்டும்
கலங்கரையின் விளக்கத்தின் விளக்கம்கூறின்,
‘எளியோர்கள் மாள, அவர்கள் உழைப்பில்வாழும்
ஏழுமனைக் காரர்களின் ஊர்’ என்றோதும்!

நடுத்தெருவின் இயங்கிகளோ டியங்கும்மக்கள்,
நாளடங்க நடக்கின்ற பாதைதன்னில்
படுத்துறங்கும் காட்சியினைக் கண்டுகண்டு
பதைபதைத்துத் துடிதுடித்துப் போனேன்! பெண்கள்

உடுத்திருக்கும் சேலையொரு முழமாமென்றால்
உலவிவரும் ஆண்களுக்கோர் கோவணந்தான்!
எடுத்தெறியும் செல்வர்மனைப் பொருளையெல்லாம்
ஏந்துகின்ற வயிறுடையார் நகரில்கண்டேன்!

படுத்தற்குப் பாயில்லாத் துன்பம், பெற்ற
பிள்ளைக்குப் பாலில்லாத் துன்பம், வாழ
நடுத்தெருவைப் பயன்படுத்திக் குடிலொன்றில்லார்
நலிவோடு, தலையணைக்கோ ருறையில்லாது,
படுத்திருக்கும் ஓர்எத்தன் கொள்ளுந்துன்பம்,
படித்தற்கும், கேட்டற்கும் ஒன்றாம்; ஆனால்
உடுத்தற்கே யுடையில்லா துழலுந்துன்பம்
உலகளவாம்; ஓரணுவாய் மாற்றான்துன்பம்!

துன்பத்தின் ஆழத்தைக் கண்ணீர் ஊ....
துளைக்கின்ற கடும்மிடியை, உடையில்காண
என்புத்தோல் உடலையெல்லாம் கண்ட...
எழில்துள்ளி விளையாடும் இடத்தில்மக்கள்
இன்பத்தோ டோங்குமனை மீதில்வாழ்ந்தே
இருப்பாரை மினுமினுக்கும் பெண்கள்தம்மோ
டன்பொழுகப் பேசியவர் வாயினிப்பில்
ஆழ்ந்தாரை யெல்லாம் நான் கண்டேன் அங்கே!

கைகோத்துக் கொண்டிருவர் போவார்தம்மைக்
கைநீட்டி யொருகுருடன் கதறிக்கேட்பான்
மெய்வேர்த்த வாறொருவன் இழுப்பான்வண்டி;
மேலேறித் தூங்கிவிழுந் தெழுந்து கையில்
பைபார்த்த வாறுபணந் தொட்டுப்பார்த்துப்
பல்லிளிப்பான்; ஒருபுறத்தில் இருவர்கூடி
மைவார்த்த கண்ணுடையாள் வரவைக்கண்டு,
மனச்சோர்வு நீங்கிமகிழ் வெய்துவோரே!

சென்னை ஒரு பெருநகரம்! உலகில்இன்னும்
சிறப்புள்ள நகரங்கள் கணக்கில் இல்லை!
சென்னைக்குச் சென்றேன்ஓர் உண்மைகண்டேன்!
செறிந்துள்ள காடுகளின் நடுவில் உள்ள
மண்ணைக்கொண் டொருகுடிசை கட்டிவாழ்ந்து
மலைகளையும் முகில்களையும் கண்டுகண்டு
கண்ணுக்கும் கருத்திற்கும் சேர்க்கும் இன்பம்
கவினுள்ள நகரத்தில் காணேன்காணேன்!

-1953(?)

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/011&oldid=1856073" இலிருந்து மீள்விக்கப்பட்டது