உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/020

விக்கிமூலம் இலிருந்து

17

கண்ணீர் நெஞ்சம்!


இறைவா! நின் அருளறஞ்சேர் பேருள் ளத்தை
இயற்கைசெயும் அசைவிலெல்லாம் நெளிவி லெல்லாம்
நிறைவாக அறிகின்றேன்; உணரு கின்றேன்;
நீள்விசும்பு, கதிர், உடுக்கள், புடவி எங்கும்
மறைவான செய்தியில்லை; அறிந்து கொள்ள
மலைப்பூட்டும் உண்மையில்லை; எனினும் ஒன்றைப்
பொறைதீர நினைக்கின்றேன்; விளக்கம் இல்லை;
‘புவி’க்குள்ளே ஏன் என்னை உலவ விட்டாய்?

பொய்மாந்தர் நடுவினிலே மெய்ம்மை பேணிப்
போராடும் நெஞ்சினையேன் எனக்குள் வைத்தாய்?
செய்வினையில் தூய்மையற்றே அறம்பே ணாத
சிறுமையினார் கூட்டத்தில் எனையேன் விட்டாய்?
வெய்யகொடும் நினைவினிலே தீப்போல் காந்தும்
வீறார்ப்பு மக்களிடை, சிறுதீங் கிற்கும்
தொய்வுற்றுச் சாத்துயரம் கொள்ளு கின்ற
தூங்காத உள்ளத்தை எனக்கேன் தந்தாய்?

கரடுமுர டாய்விளர்ந்த கறம்புக் காட்டுள்
கள்ளியெனத் திருகியுளம் முறுக்கம் கொண்ட
திருடரிடை நேர்மை, அறம், உண்மை, வாய்ந்து
தீமைக்கு நடுநடுங்க எனையேன் வைத்தாய்?
குருடரிடை விழிக்க வைத்தாய்; இருளில் விட்டாய்!
கூசுகிலா மக்களின்முன் கூச வைத்தாய்!
அருள்தவிர்ந்த கயவரிடம் அலையச் செய்தாய்!
அமைதியிலா துழலுகின்ற உளமேன் தந்தாய்?

அன்பவிந்த கல்நெஞ்சர்க் கிடையில் அன்பை
அணைகட்டித் தேக்குமொரு நெஞ்சேன் தந்தாய்?
துன்பறிந்தே எனைவிட்டு விலகு வோரின்
தொடர்பெண்ணி வருந்துகின்ற உளமேன் தந்தாய்?
முன்பிருந்து, நட்பாடி, வாய்மை பேணி
முகமலர்ந்தே, உரையாடிச், செயலில் ஒன்றிப்
பின்பிரிந்து, தலைவளர்க்கும் சிறுமை யோர்க்கும்
பிழைநினையா உள்ளத்தை எனக்கேன் தந்தாய்?

தேன்றமிழில் உளங்கிறங்கும் திறமேன் தந்தாய்?
திறமறியா மக்களிடைத் தமிழைப் பாய்ச்சும்
ஆன்றவியா எண்ணத்தை எனக்கேன் ஈந்தாய்?
அவலத்துத் துடிதுடித்(து) ஏன் புரள வைத்தாய்?
கான்றுமிழத் தக்கவரைக் கனிவால் பேணும்
கரவறியா உள்ளத்தை துயர்வந் தாலும்
சான்றாண்மை தவிராமல் வாய்மைப் போக்கில்
சலிப்படையாக் கவல்நெஞ்சை எனக்கேன் தந்தாய்?

இருள்மாந்தர் நிரம்பிவழி கின்ற நாட்டில்
இடமறியா துழலுகின்ற மான்போல், நெஞ்ச
அள்தேடி அலைகின்ற தனிஉள் ளத்தில்
அலைகின்ற நினைவுகளை எதற்கென் றீந்தாய்?
பொருள்தேடிக் கயமைசெய்து வாழ்வார் பாங்கில்
பொருட்கெனவே நடைநடந்து கண்ணீர் தேங்கும்
திருவுளத்தை விளக்கவிலா மாட்சி தன்னைத்
தீதறியா வல்லுணர்வை எனக்கேன் தந்தாய்?

முத்தரிக்கும் பெருஞ்செயலை எனக்குத் தந்தாய்!
முங்கிவரும் துயரலைக்குள் மூழ்கு வித்தாய்!
தத்தளிக்கும் உணர்வோடும் உயிர்ப்பி னோடும்
தவிக்குமெனக் கிடர்களையே துணைக்கு வைத்தாய்!
பித்தருக்கும் தீயருக்கும் பிழைசெய் வோர்க்கும்
பீடிழந்த பேடியர்க்கும் வினையால், சொல்லால்
கத்தரிக்கும் நெஞ்சினர்க்கும் இடையில் நின்று
கைசலிக்கும் உள்ளத்தை எனக்கேன் தந்தாய்?

குலைக்கின்ற தெருநாய்க்கும், மலந்தின் கின்ற
கூர்முகத்துப் பன்றிக்கும், சேற்றில் தோய்ந்தே
அலைக்கின்ற எருமைக்கும் கழுதை கட்கும்
அருவருப்புக் கொள்ளாமல் இருக்கும் உள்ளம்!
மலைக்கின்ற பெருந்துயர்க்கும் மலைந்த தில்லை,
மண்புனல்தீ வளிவிசும்பும் அஞ்சா(து); ஆனால்
உலைக்கின்ற தீயர்க்கும் கரவி னார்க்கும்
உள்நடுங்கும் நெஞ்சத்தை எனக்கேன் தந்தாய்?

தேறுமுறை அறியாமல் வழிகா ணாமல்
திசையெட்டும் தேடியலைந் துயிர்வ ருந்தி
ஏறுமுறை காணாமல் இளைப்பா றாமல்
ஏச்சினுக்கும் பேச்சினுக்கும் குலைந்தி டாமல்
வீறுகுறை யாமல்உளம் நிலைநிற் கின்றேன்;
வினைகளுக்கும் போக்குக்கும் இணைவார் தம்மை
நூறுமுறை நம்பிவிட்டேன்; நம்பு கின்றேன்;
நோகார்க்கு நோகின்ற நெஞ்சேன் தந்தாய்?

யாமாற்றும் பணிகளுக்கும் பொதுத்தொண் டிற்கும்
யாம்யாமென் றிணைந்துவந்து துணைநிற் பார்போல்
தாமாற்றும் வினைகளிலே தூய்மை காட்டித்
தாங்கிடுவார் போல்இருந்தே முடிவில் என்னை
ஏமாற்றும் திறன்மிகுந்தார் கரவை முன்பே
எடைபோட்டுப் பார்க்கின்ற திறன்தா ராமல்
நீமாற்றும் காட்சிகளின் அசைவிற் கெல்லாம்
நிலைகலங்கும் நெஞ்சத்தை எனக்கேன் தந்தாய்?

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/020&oldid=1856158" இலிருந்து மீள்விக்கப்பட்டது