கனிச்சாறு 7/022
19
அவனொரு தனியன்; நடந்து கொண்டிருந்தான்!
ஊரவர் கேண்மோ! உலகவர் கேண்மோ!
சீருடைப் பாக்கள் செறிப்பக் கொளுத்தும்
வீறுடைப் பாவலர் விளம்பக் கேண்மோ!
நட்டார் கேளுதிர்! நயப்பார் கேளுதிர்!
ஒட்டார் கேளுதிர்! உவப்பார் கேளுதிர்!
இருநீர் வையத்து எழுந்துயிர்த் தியங்கும்
பெருநிலை மக்கள் பின்றைக் கேளுதிர்!
கொழுபொருட் குவட்டில் பிறந்தோன் அல்லன்;
எழுநிலை மாடத்து இருந்தோன் அல்லன்;
வகைதெரி கூட்டத்து வாழ்ந்தோன் அல்லன்;
தொகைநிறை வளங்கள் துய்த்தோன் அல்லன்;
புரையில் நெஞ்சன்; கறையில் கொள்கையன்!
வரையறு நுட்பம் வாங்கறி வுணர்வோன்!
அறம்பிற ழாத அறவோர் நெறிக்கே
வரம்பில் வேட்கையன்; வாழற்கு வாழாஅன்!
கொடுக்கை குறுக்கான்; பெறுகை பெருக்கான்;
உடுக்கை உவப்பிலன்; உண்கை குறியிலன்!
பிறநலம் விரும்பி! அறநலத் தும்பி!
பண்தேர்ந் துண்குயில்! பாடற்கு உளம்மயில்!
எழுத்தெழுத் தூர்ந்து சொற்சொல் புகுந்து
செழுந்தொடர் யாப்பில் நல்லுயிர் துவண்டு
பொருட்சுனை குளித்துப் புதுநலம் மூழ்கிப்
பாநறுந் தேறல் பருகிப் பருகி
வாழ்நறுந் தென்றல்! வாழ்ந்திலா வான்வில்!
கற்பனை விரிவான் கலைமுகில் ஏறிக்
கடக்கும் மடவோன்! கவின்தமிழ்க் கடிமை!
கூர்த்த நோக்கினன்; குனியாப் போக்கினன்!
ஆர்த்த வாயினன்; ஆராச் செவியினன்;
எண்ணிய நெஞ்சன்; திண்ணிய சொல்லன்;
நிலைத்த கருத்தன்; நிலையாச் சினத்தன்;
குலைத்த மடியினன்; குலையாத் துடிப்பினன்!
தாய்க்குநல் பிள்ளை; தந்தைக்குத் தக்கோன்!
மனைக்குநல் கொழுநன்; மகர்க்குநல் தந்தை!
நண்புக்கு அன்பன்; பண்புக்கு உறவோன்!
மன்பதை விரும்பி! மனந்தின் கரும்பு!
பகைக்குப் பகலவன்! பாவுண் தும்பி!
அன்பினுக் கினியவன்! அவனொரு தனியன்!
(வேறு)
முப்புறம் பதிந்த நோக்கில்
முரணிலா நடந்த கால்கள்!
குப்புற வீழ்தல் இல்லாக்
கொள்கையால் துவண்ட வாழ்க்கை!
செப்பமும் ஒழுங்கும் சேரச் சீர்மையும் நேர்மை பாய
ஒப்பிய கொள்கை ஒன்றால் ஒருதனி நடைய னானான்!
ஒருதனி நடையனாகி உலகெலாம் நடக்க லுற்றான்;
வருதலிற் றீமை சேரான்;
வாய்மையில் கருமை காட்டான்!
வெருதலும் குலைவு மின்றி
வினைவயப் பட்டான்; தீமை
பொருதலும் படையு மாகப்
புதுநெறி புதுக்க லானான்!
மொழிக்கென மொழிந்தான்; மக்கள்
முழுமலர்ச் சிக்கென் றார்த்தான்!
செழிக்கிலாத் தமிழர் வாழ்க்கை
செழிக்கெனக் குரல்கொ டுத்தான்!
அழிக்கிலாப் பொய்மைப் போக்கை
அழித்திடக் குரல்மேல் ஏற்றி
விழிக்கிலாத் தமிழர் பாங்கில்
விடிந்ததிங் கெழுக வென்றான்!
மறத்தினும் மறத்த நெஞ்சம்!
மலையினும் நிலைத்த கொள்கை!
அறத்தினும் சிறந்த போக்கே!
ஆழியின் அகன்ற அன்பு!
திறத்தினும் தெரித்த சொற்கள்!
தீமைக்குக் கூசும் மெய்வாய்!
புறத்தினும் இனிய ஆகம்!
புலப்பினும் அணைக்கும் கைகள்!
இருளில் நடந்த கால்கள்!
இமைப்பிலா விழித்த கண்கள்!
மருளுக்கு மருண்டான் அல்லன்!
மயக்கினில் திகைத்தான் அல்லன்!
பொருளுக்குப் பொய்த்தான் அல்லன்!
பொய்யுக்குப் புகழ்ந்தான் அல்லன்!
அருளுக்கு நெகிழ்ந்தான் அல்லன்!
அரசுக்குப் பணிந்தான் அல்லன்!
தாளுக்குப் பணிந்த தாளான்;
தண்மைக்குக் குளிர்ந்த தண்மை!
தோளுக்குத் துணைதோள் அன்னான்!
துயருக்குச் சுமைகள் தாங்கி!
வாளுக்குத் தலை கை தாழான்;
வாடிக்கை மொழிவே டிக்கை!
கேளுக்குக் கேளான்; உள்ளக்
கீழ்மைக்குச் சேய்மை யோனே!
(வேறு)
ஒருதனி நடந்தான்; நடப்பினில் உவந்தான்;
விரிந்ததிவ் வுலகம் என்னினும் வெருளான்!
நடந்தான் நடந்தான்; நடந்துகொண் டிருந்தான்!
தடந்தெரிந் தெடுத்த தகைமையில் நடந்தான்
இடர்கள் எதிர்ந்தன; என்னினும் நடந்தான்!
சுடர்வழி நோக்கிச் சோர்வற நடந்தான்,
படர்ந்த கொள்கைப் பாதையில்
நடந்தான் நடந்தான் நடந்துகொண் டிருந்தான்!
-1965