உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/031

விக்கிமூலம் இலிருந்து

28

உறுதியும் நன்றியும்!

எவரெனைத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும்
என்கை வீசி நடையிடுவேன்! - ஒரு
சுவர்எனைத் தாங்கினும், துரும்பு கை கொடுக்கினும்
செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!

மலையே குலுங்கினும், வானே இடியினும்
மனங்குலை யாமல்மேல் நடப்பேன்! - துயர்
அலைகளுக் கிடையோர் கட்டையே உதவினும்
அதன்திறம் நினைந்து புகழ் கொடுப்பேன்!

கடுஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும்
கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்! - நான்
படுந்துயர்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப்
பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன்!

எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும்
ஏற்றுள கொள்கைக் குயிர்தருவேன்! - ஒரு
தினையள வேனும் துணைவரு வோரைத்
தீந்தமி ழால்நிலை நிறுத்திடுவேன்!

-1975

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/031&oldid=1857842" இலிருந்து மீள்விக்கப்பட்டது