கனிச்சாறு 7/077
73
பாரதிதாசன் பத்து!
பூக்கும் பொழிலுட்
புகுந்திதழ் நீக்கிப் புதுநறவம்
தேக்கும் பொறியுடல்
தும்பீ! எமக்குத் தெரிந்துரைப்பாய்!
தூக்கும் தமிழப்பொழில்
பாரதிதாசன் தருசுவை தீம்
பாக்கும் உயர்ந்த
பனிமலர்த் தேறல் பயின்றதுவே!
1
பயில்வண் டயின்ற
பசுந்தேன் இலைபடு பாசடை சூழ்ந்
தயில் மண் டொளிர்தா
மரையே! உயர்வே தறிந்துரைப்பாய்;
மயல்கொண் டிலங்குயர்
பாரதி தாசன் மணித்தமிழோ?
வெயில்கண் டுவக்கும்
வெறிமலர்த் தேனோ? விளங்கிடவே!
2
வெறித்த குரலெடுத்
தின்னிசை வல்லவர் வெள்கிடயான்
குறித்த தமிழ்ப்பா
கொழிக்கும் குயிலே! குரைகடலும்
தெறித்த அலைக்கை
ஒலித்துவந் தேற்கும் தமிழ்த்திறமை
பொறித்த புலவனெம்
பாரதி தாசன்சீர் பாடுவையே!
3
பாடுங் குயிலின்
பழகின் னிசைக்கொரு பண்தவறா
தாடுங் கடிமயி
லே, அயர் வுற்றோர் அகங்குளிரத்
தேடுங் கவின்பா
முழக்கிடும் பாரதி தாசனவன்
நீடும் இசை மழைக்
காடுவை யோ, நெடுங் காலெடுத்தே?
4
எடுத்த நெடுமா
மலையில் எழுந்தே எழில்மலர் மேல்
படுத்த மணம் புணர்ந்
தின்சுனைத் தண்ணீர் பயின்றுடலங்
கடுத்த நிலைதவிர்
தென்றலே! பாரதி தாசனிசை
மடுத்த செவிக்குள்
அவன்புகழ் பாடி மலர்த்துவையே!
5
மன்னும் பெரும்பெயர்ப்
பாரதிதாசன் மணித்தமிழைத்
தின்னுங் கிளியே!
தனித்தேன் தினைமா தினக்கொடுப்பேன்;
மின்னும் படியுயிர்
மீளும் படியவன் மேம்பெயரை
இன்னும் ஒருமுறை
சொல்லுவை யோசெவி இன்புறவே!
6
இழைத்த கொடுமையொன்
றில்லா திருக்க எனைச்சுடுவாய்,
மழைத்த முகில்வந்
தெழில்மறைக் காத மணிநிலவே!
தழைத்த பெரும் புகழ்ப்
பாரதிதாசன் தனிப்புலமை
குழைத்த தமிழ்போல்
குளிர்பொழி வாயோ குலமகட்கே?
7
ஆர்த்த கழகத்
தருந்தமிழ் மீதே அழிபகைவர்
போர்த்த பழியிருள்
நீக்க வெழுந்த பரிதியெனும்
கூர்த்த மதிதிகழ்
பாரதி தாசன் கொழுந்தமிழ் போல்
சீர்த்தி நினக்கிலை
யே, கடல் சீர்த்தெழு செங்கதிரே!
8
கதிர்முன் பனியாய்க்
கனல்முன் பொறியாய்க் கனித்தமிழின்
முதிர்தீஞ் சுவைதரு
பாரதிதாசன் முழுப்புலமை
எதிர்முன் னிழிபடப்
பாடல் எழுதி இடர்ப்பட்டோர்
அதிர்வுற லுண்டுளம்
அஞ்சலு முண்டே அலமரவே!
9
அலங்கலை ஆழ்கடல்
சூழ்ந்த வியன்பொழில் ஆர்புதுவை
இலங்குயர் சீர்மிகு
பாரதிதாசன் எழில்மனத்தே
குலுங்கினள் செந்தமிழ்க்
கன்னி; குயிலெனக் கூவியுயிர்
துலங்கினள்; எந்தமிழ்
எங்கணும் பூக்கத் துணைசெயவே!
10
1966