கனிச்சாறு 7/109
தோற்றம்
105
தெருள்மிகு தெசிணி வாழ்க!
பாட்டினில், பதினெட் டாண்டாய்ப்
பைந்தமிழ்க் ‘கவிதை’ என்னும்
ஏட்டினை நடத்து கின்றார்
‘தெசிணி’என் றால்அ வர்க்கு
மேட்டிமை பலவும் உண்டு;
மேலான புலமை உண்டு
நாட்டினுள் தமிழ்த்தொண் டாற்றும்
நல்லாருள் நல்ல தொண்டர்!
பாடிய வெல்லாம் பாட்டென்
றியம்பிடும் பாழோர் பாங்கில்
நீடிய மரபும் யாப்பும்
நீங்காமல் பாக்கள் யாத்து
வாடிய தமிழ்ப்ப யிர்க்கே
வளஞ்சேர்க்கும் ‘கவிதை’ இன்னும்
கூடிய பெருமை யோடு
குவலயம் செழிக்க வாழ்க!
பொருள் தொண்டு செய்வார் சில்லோர்
புகழ்த் தொண்டு சில்லோர் செய்வார்;
அருள் தொண்டு செய்வோம் என்னும்
அடியார்கள் பலரிங் குள்ளார்!
இருள்மிகு தமிழ்நாட் டார்க்கே
ஏற்றநல் தமிழ்த்தொண் டாற்றும்
தெருள்மிகு ‘தெசிணி’ என்னும்
தீந்தமிழ்ப் புலவர் வாழ்க!
1979