உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/131

விக்கிமூலம் இலிருந்து

127

அருமை மகள் தேன்மொழிக்கு!


அருமைமகள் தேன்மொழிக்கும்,
அன்பினிய தம்பிக்கும்,
அறிவுச் செல்வர்
பெருமை மிகும் அறிவனுக்கும்,
பெருங்கடமைத் தெள்ளிக்கும்,
பெரியம் மைக்கும்,
ஒருமையுளம் கொண்டு, நலம்
உரைத்து, இதனை வரைகின்றேன்;
உவகை கொள்வீர்!
திருமைஒளிர் நெஞ்சத்தின்
திரள்நலமும் வாழ்த்துகளும்
திகழ்க நன்றே!

தேனம்மா! நீநலமும்
தேறியது கண்டுமகிழ்ந்
தேன், என் உள்ளம்!
ஏனம்மா, மனச்சோர்வும்?
இதன்பொருட்டும் உடல்நலியும்!
இளைத்துப் போகும்!
வானமும், மா நிலமும் உள்ள
வரைநிற்கும் குறள்உரையை
வரைந்து கொண்டு,
நான் இம்மாச் சிறையில்முழு
நலமாக இருக்கின்றேன்;
நலிதல் இல்லேன்!

ஆதலினால் நீ எதற்கும்
அஞ்சாமல் துணிந்து நின்றுன்
அப்பா வைப்போல்
தீதெனினும் சோர்வின்றித்
திளைப்பெனினும் செருக்கின்றித்
தேர்ந்த தொண்டின்
மீதுயர்ந்த கொள்கையுடன்
மேந்தமிழ்க்கும் இனத்திற்கும்
தமிழ்நாட்டிற்கும்
காதலுற்ற நின்கணவர்
கடமை செய்தல் போல்அவர்க்குக்
கைகோப் பாயே!

எனைப்போற்ற வில்லை இந்த
இனமும்,இந் நாட்டரசும்
என்றே நித்தம்
முனைப்புற்ற ஏக்கத்தால்,
முட்டிவரும் கண்ணீரால்,
முதிர்ந்த அன்பால்,
நினைப்புற்று நினைப்புற்று
நீயும்நின் அக்கை, அண்ணன்,
இனவோ ரோடும்,
சினைப்புற்று நுமையுயிர்த்துச்
சிறந்தஅன்னை துயர்வதெல்லாம்
சிந்தை நேர்வேன்!

எனைப்பற்றி நினைப்பதில்லை,
இளமைமுதல் இன்றுவரை
இன்பத் தேனே!
தனைப்பற்றி நினைத்திருப்பின்
தழைத்தமரம் நிழல், கனிகள்
தரும்மா, அம்மா?
நினைப்பற்றுஇம் மொழிநினைத்தேன்;
நீங்கள் எல்லாம்
எனைப் பற்றி வரநினைத்தேன்!
எவ்விடத்தும் எந்நாளும்
இழந்தேன், என்னை!

அதனால்தான் நூல்படித்தேன்;
ஆழ்ந்தவர லாறறிந்தேன்;
அவை சிந்தித்தேன்!
எதனால்நம் தமிழெல்லாம்
இனமெல்லாம் நாடெல்லாம்
இழந்தோம் - என்றே
முதல்நாளும் இடைநாளும்
கடைநாளும் சிந்தித்து,
முதுமை கண்டேன்!
இதனால்தான் அம்மா,நாம்
இருக்க இடம் இல்லாமல்
இடர்கள் உற்றோம்!

பணியேற்றுச் செய்து பணம்
படித்தெழுதி வந்தபணம்
பலநூல் வாங்கத்
துணிவேற்றுச் செலவழித்தேன்!
துயர்நீங்கக் கடன்பெற்றேன்!
தொல்லைப் பட்டேன்!

அணியேற்றம் இல்லை, உன்
அன்னைக்கும் உங்கட்கும்!
அன்றைக் கன்றைத்
தணிவுற்றுப் பெற்றதொகை
தனைக்கொண்டு வாழ்ந்தோம்,உன்
தாயும் நானும்!

மணம்சேர்த்து வைத்த எங்கள்
மகிழ்ச்சியிலே பெற்றெடுத்த
மக்கட் கெல்லாம்
பணம்சேர்த்து வைக்காமல்,
பயன்கல்வி தனைச்சேர்த்தோம்;
பண்பு சேர்த்தோம்!
குணம்சேர்த்தோம்; நீங்களெல்லாம்
கூனாமல் வாழ்வதற்குக்
கொள்கை சேர்த்தோம்;
கடமைசேர்த்த பார்வைகண்டு
காதல்மணம் ஒப்பி, உங்கள்
கைகள் சேர்த்தோம்!

தமிழுக்கும் தமிழர்க்கும்
தமிழ்நாட்டு விடுதலைக்கும்
தளராது உள்ளம்
அமிழ்க்காமல் அசையாமல்
ஆர்ப்பரிப்புக் கொள்ளாமல்
ஆய்ந்த கொள்கை
உமிழ்க்காமல் அரசியலில்
உரசாமல் அங்கும் இங்கும்
ஊசலா டாமல்,
சிமிழ்க்கின்ற பார்வையிலே
சீரழிக்கும் பகைநடுங்கச்
செயல்கொண் டேனே!

மகளே! உன் மனத்தூய்மை
மதித்திறம், வாய் மை, ஒழுங்கு
மாண்பு,என் றெல்லாம்
துகளறும்என் மனத்தெழுந்த
துளிர்ப்பன்றோ? தழைப்பன்றோ?
தொய்வில் லாத
வெருள் அரிமா வீறெல்லாம்
விளைவெல்லாம் இறையருள்தோய்
வேள்வி யன்றோ?
உகளறுமெய் பண்பறிவாய்
உலவும் உங்கள் உணர்வு உயிர்க்குள்
உள்ளேன் அம்மா!

-1993

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/131&oldid=1858183" இலிருந்து மீள்விக்கப்பட்டது